திருக்குறள் - பிறப்பு ஒழுக்கம்
ஒரு பெரிய பதவியில் உள்ள ஒருவர் தவறான காரியத்தை செய்தால், "இவ்வளவு பெரிய பதவியில், பொறுப்பில் உள்ள ஒருவர்,இந்த மாதிரி கீழ்த்தரமான காரியத்தை" செய்யலாமா என்று உலகம் அதிர்ச்சி அடையும்.
அதற்காக, சிறிய பதவியில் உள்ளவர்கள் தவறு செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. அவருக்குச் சொன்னதுதான் எல்லாருக்கும்.
இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இனி குறளுக்குள் செல்வோம்.
பாடல்
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_50.html
(pl click the above link to continue reading)
மறப்பினும் = மறந்து விட்டால் கூட
ஓத்துக் கொளல்ஆகும் = மீண்டும் படித்துக் கொள்ள முடியும்
பார்ப்பான் = அந்தணன்
பிறப்பு= பிறப்பினால் உள்ள சிறப்பு
ஒழுக்கம் குன்றக் கெடும் = அவன் ஒழுக்கம் குறைந்தால அது கெட்டு விடும்
ஓத்து என்றால் ஓதுதல். மீண்டும் மீண்டும் சொல்லுவதின் மூலம் அறிந்து கொள்வது. ஓதுவார் என்பவர் தினம் தினம் பாடல்களை பாடுபவர் என்று அர்த்தம்.
அந்தணர்கள் வேதங்களை உச்சாடணம் செய்து செய்து மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு வேளை அப்படி தினம் தினம் ஓதிய பின்னும் மறந்து விட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும். வேலை காரணமாகவோ, அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ ஓதுவதை மறந்து, வேலையில் மூழ்கி மறந்து விட்டால், மீண்டும் கற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், ஒழுக்கக் குறைவாக ஏதேனும் செய்து விட்டால், பின்னால் ஒழுக்கமாக இருந்தாலும், அதைச் சரி செய்யவே முடியாது. அவன் தன் குலத்தில் இருந்து தாழ்ந்தவனாகவே கருதப் படுவான்.
உதாரணமாக, ஒரு கோவிலில் இறைவனுக்கு பூஜை, கைங்கர்யம் செய்யும் ஒரு அந்தணர் மாலை வேளையில் ஒரு மது அருந்தும் கடையில் மது அருந்தி, புலால் உண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை அந்த ஊரில் நாலு பேர் பார்க்கிறார்கள். மற்றவர்களிடம் சொல்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். ஊர் ஏற்றுக் கொள்ளுமா? அவரை அந்த இறை காரியங்களை செய்ய மக்கள் அனுமதிப்பார்களா?
அவர் அந்த தகுதியை இழப்பார் அல்லவா?
ஒரு வேளை இறைவனுக்கு சொல்லும் மந்திரத்தை அவர் மறந்து போனால், படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் தவறினால் சரி செய்து கொள்ள முடியாது.
அது என்ன அந்தணர்களுக்கு மட்டும் சொல்லி இருக்கிறார் என்றால்
"சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்."
என்கிறார் பரிமேலழகர்.
நீதிபதியே தவறு செய்யலாமா என்று கேட்பதில் மற்றவர்களும் தவறு செய்யக் கூடாது என்பது அடங்கி இருக்கிறது.
எனவே, ஒழுக்கத்தை ஒரு போதும் தவற விடக் கூடாது. விட்டால் பின் ஒரு காலத்திலும் அதை சரி செய்ய முடியாது.
No comments:
Post a Comment