Pages

Monday, May 9, 2022

திருக்குறள் - ஒன்றானும் தீச்சொல்

 திருக்குறள் - ஒன்றானும் தீச்சொல் 


ஆச்சாரியா வினோபா பாவே அவர்கள் ஒரு நாள் தான் பெற்ற அனைத்து கல்வி சான்றிதழ்கள், பட்டங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி, தீயிட்டு கொளுத்தி விட்டாராம். 


கேட்டதற்கு, "இதெல்லாம் இருபதால் தானே நான் படித்தவன் என்ற ஆணவம் வருகிறது? இப்போது , நான் படித்தவன் என்று சொல்லிக் கொள்ள ஒரு ஆவணமும் இல்லை. வித்யா கர்வத்தை தீயிட்டு கொளுத்தி விட்டேன்" என்றாராம். அது மட்டும் அல்ல, இந்த உலகில் நான் அறியாதவை எவ்வளவோ இருக்கிறது. ஒரு துளி படித்துவிட்டு, நானும் படித்தவன் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்றும் கூறினாராம். 


அது தான் உண்மை நிலை. நாம் பெற்ற பட்டங்களுக்கு என்ன அர்த்தம்? என்றோ, ஏதோ ஒரு சில நூல்களை வாசித்து, தேர்வு எழுதினோம். அதற்கு ஒரு சான்றிதழ். அறிவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம். 


சில குறள்களை படிக்கும் போது, நாம் இதுவரை படித்தது ஒன்றும் இல்லை என்ற பணிவு வரும். நாம் ஒன்றும் பெரிதாக தெரிந்து கொள்ளவில்ல என்ற அடக்கம் வரும். 


அப்படிப்பட்ட குறள்களில் இன்று நாம் காண இருக்கும் குறளும் ஒன்று. 


பாடல் 


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_9.html


(pl click the above link to continue reading)


ஒன்றானும் = ஒரு சொல்லாக இருந்தாலும் 


தீச்சொல் =தீய சொல்லின் 


பொருட்பயன் = பொருள் பயன் 


உண்டாயின் = உண்டாகுமானால் 


நன்றாகா தாகி விடும் = நன்று + ஆகாதாகி + விடும். நன்மை இல்லாமல் போய் விடும். 


சாரம் என்ன என்றால், ஒரு தீய சொல் கூறினால் கூட, அது  மற்ற நல்ல சொற்களின் பயனையும் இல்லாதாக்கி விடும். 


இந்த குறளுக்கு இவ்வளவு பில்ட் up தேவையா என்று நீங்கள் நினைக்கலாம். 


சொல்கிறேன்.


நாம் நம் நண்பர்களிடம், உறவினர்களிடம் எவ்வளவோ பேசுவோம். பேச்சு வாக்கில் ஒரு சொல், ஒரே ஒரு சொல் தவறுதலாக வந்து விழுந்து விட்டாலும், அது இதுவரை நாம் சொன்ன மற்றும் செய்த அத்தனை நன்மைகளையும் பயனற்றதாகச் செய்து விடும்.  இது ஒரு விளக்கம். 


யோசித்துப் பாருங்கள், ஒரு சொல் உங்களை சுட்டு இருக்கிறதா இல்லையா? 'சே, என்னைப் பற்றி அவன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்து இருக்கிறது. அதனால் தானே அப்படி ஒரு சொல் வந்து விழுந்தது..." என்று நீங்கள் வருத்தப் பட்டு இருக்கிறீர்களா இல்லையா? நீங்கள் சொன்னது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் சொல்லி நீங்கள் வருத்தப் பட்டு இருக்கிறீர்களா இல்லையா? அது மட்டும் அல்ல, அந்த ஒரு சொல் சொல்லிய பின், உங்கள் உறவு அந்த சொல்லிய நபரிடம் எப்படி இருக்கிறது? எவ்வளவு பெரிய உறவாக இருந்தாலும், ஒரு தீச் சொல் அதை முறித்து போட்டு விடும். 


சரி, 


சில பேர் தீமையை மனதில் வைத்துக் கொண்டே இனிமையாக பேசுவார்கள். பேச்சைக் கேட்டால் அவ்வளவு இனிமையாக இருக்கும். நாமும், அவர்கள் பேச்சில் மயங்கி ஏதோ சொல்லி விடுவோம் அல்லது செய்து விடுவோம். அது நமக்கு பின்னாளில் துன்பம் தரலாம். 


"பொருட் பயன்" என்றார். பொருள் , அதாவது அர்த்தம் நன்றாக இருக்கும். பயன் தீமையாக முடியும். கேட்க இனிமையாக இருக்கும் ஆனால் பயன் தீமையாக இருக்கும். 


இன்றும், பல அரசியல் வாதிகள் பேசுவதை கேட்கிறோம். மிக அழகாகப் பேசுவார்கள். அவர்கள் சொல்வதை நம்பி நாம் ஓட்டுப் போடுவோம்.  விளைவு என்ன என்று பின்னால் தெரியும். 


மேலும்,


பேசும் போது ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கிறது, சொல்லின் பயன் இருக்கிறது.  "உடம்பு எப்படி இருக்கிறது?" என்ற சொற்களின் அர்த்தம் நமக்குத் தெரியும். ஆனால், யாரை, யார், எப்படி கேட்டார்கள் என்பதில் இருக்கிறது அதன் பயன்.  


"நான் அப்படி நினைத்து சொல்லவே இல்லை. அவன் தவறாக எடுத்துக் கொண்டால் அதுக்கு நான் என்ன செய்யமுடியும்" என்று நாமே சொல்லி இருப்போம், அல்லது பிறர் சொல்லக் கேட்டு இருப்போம். 


தீமை நினைத்து சொன்னது அல்ல. நாம் நினைத்த பயன் தீமை அல்ல. ஆனால், சொல்லின் பொருள் தீயதாக அமைந்து விட்டது. அதற்கு யார் பொறுப்பு? நாம் தான் பொறுப்பு. 


ஒவ்வொரு சொல்லையும், மிக கவனமாக கையாள வேண்டும். 


"படிக்கலேனா எருமை மாடு மேய்க்கத் தான் போற" என்று ஒரு தந்தை மகனிடம் சொன்னால், அவர் நினைத்த பயன் என்னவோ பையன் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால், சொன்ன சொல் தீய சொல். கடும் சொல் என்பார் வள்ளுவர். சொல்லில் வரும் குற்றங்களுள் ஒன்று கடும் சொல் சொல்லுவது. 


நல்லதைச் சொல்ல வேண்டும். 


நல்லதை நினைத்து நல்லதைச் சொல்ல வேண்டும். 


நல்லது சொல்லும் போதும் தீய சொற்கள் கலந்து விடாமல் எச்சரிக்கையாக சொல்ல வேண்டும். 


சரி, நிறைய பேசும் போது ஏதோ ஓரிரு சொல் வந்தால் குற்றமா என்றால், "ஒன்றானும்"  என்கிறார். ஒரு சொல், ஒரே ஒரு சொல் தவறாக வந்து விடக் கூடாது என்கிறார். 


ஒரு சொல் நல்ல சொல்லா தீய சொல்லா என்று எப்படி கண்டு பிடிப்பது. நான் நல்லது நினைத்துதான் சொன்னேன். தீய சொல் சொல்ல வேண்டும் என்று நினைக்கவே இல்லை என்று கூறினாலும், வள்ளுவர் சொல்கிறார், நீ சொன்ன சொல் நல்லதா அல்லது தீயதா என்பது அந்த சொல்லின் பயனைப் பொறுத்தது என்கிறார். 


"தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்" தீய சொல் சொன்னால் அதனால் விளையும் பயன் எதுவோ அந்தப் பயனை உன் நல்ல சொற்கள் தந்தால், உன் நல்ல சொல்லும் தீச் சொல் தான். 


சரி, சொல்லியாச்சு, அதனால் என்ன என்று கேட்டால், 


"நன்றாகா தாகி விடும்" - நன்மை இல்லாததாகி விடும். இதுவரை செய்த நன்மை எல்லாவறையும் அந்த ஒரு சொல் போக்கி விடும். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போல. 


ஒரு சொல்லால் உறவுகள் பிரிந்து இருக்கின்றன, குடும்பங்கள் சீரழிந்து இருக்கின்றன. 


சொற்களை மிக கவனமாக கையாள வேண்டும். 


அதற்கு பயிற்சி வேண்டும். 


பயிற்சி எப்படி செய்வது, உயர்ந்த நூல்களை படிப்பது, உயர்ந்தவர்கக்ளிடம் பேசுவதின் மூலமும், அவர்கள் பேசுவதைக் கேட்பதன் மூலமும். 



1 comment:

  1. இதைவிட அருமையாக விளக்க முடியாது. அருமை

    ReplyDelete