Pages

Wednesday, June 1, 2022

ஆன்மீகமும் அறிவியலும் - சில சிந்தனைகள் - பாகம் 1

 ஆன்மீகமும் அறிவியலும் - சில சிந்தனைகள் - பாகம் 1 


நாம் இங்கே இருக்கிறோம். 


இங்கே என்றால் இந்த இடத்தில், இந்த கால கட்டத்தில் இருக்கிறோம். 


எங்கே போகிறோம் ? இந்த வாழ்வின் முடிவு என்ன? வாழ்வு என்றால் நம் ஒருவருடைய வாழ்வு அல்ல...இந்த மனித உயிர்கள் அனைத்தின் வாழ்வும்...இந்த பூமி, சூரியன், நட்சத்திரம் ..இதெல்லாம் ஏன் தோன்றியது? ஒன்றுமே தோன்றாமலே வெறும் வெட்ட வெளியாக இருந்து இருக்கலாமே? வேலை மெனக் கெட்டு இவ்வளவு பெரிய பிரபஞ்சம் எதற்கு ? விடாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது. எதற்கு? 


இதற்கு எல்லாம் காரணம் இருக்கிறதா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1.html


(pl click the above link to continue reading)



திடீரென்று கண் விழித்துப் பார்க்கிறோம்.ஏதோ ஒரு இரயில் வண்டியில் நாம் பயணம் செய்வது தெரிகிறது.   காலம் ஓடுகிறது. காட்சிகள் மாறுகின்றன.  நகர்கிறோம் என்று தெரிகிறது. இல்லை என்றால் எல்லாம் ஒரே மாதிரி அல்லவா இருக்க வேண்டும். 


நகர்கிறது என்றால் எதை நோக்கி? தெரியவில்லை. 


சரி, எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொண்டால், எங்கே போகிறோம் என்பதி யூகிக்க முடியும். எனவே எங்கே நம் பயணம் தொடங்கியது என்று அறியத் தலைப்படுகிறோம். 


போகும் இடமும் தெரியவில்லை, புறப்பட்ட இடமும் தெரியவில்லை.


மிகப் பெரிய கேள்விக் குறி நம் முன் நிற்கிறது. 


இதற்கு எப்படி விடை காண்பது?


ஆதியும் தெரியவில்லை, அந்தமும் தெரியவில்லை. 


அறிவியல் விடை தேடிப் புறப்பட்டது.  எங்கிருந்து வந்தோம் என்று ஒரு ஆராய்ச்சி. எங்கே போகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி. 


ஆன்மீகமும் இதே கேள்விகளை கேட்கிறது. ஆனால், அதன் விடைகள் வேறு மாதிரி இருக்கிறது.  இறைவன் தோற்றுவித்தான், அவனுள் எல்லாம் ஒடுங்கும் என்று சொல்லி விடுகிறது. 


அறிவியல் எந்த கேள்விகளை கேட்கிறதோ, எதற்கு விடை தெரியாமல் தேடிக் கொண்டு இருக்கிறதோ, அந்தத் தேடல் ஆன்மீகத்திலும் இருக்கிறது. அதே கேள்வியை ஆன்மீக வாதிகளும் கேட்டு இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயம். 


யார் சொல்வது சரி, யார் தவறு என்று வாதம் செய்வது அல்ல என் நோக்கம். 


இரண்டு கேள்விகளையும், அவர்கள் கண்ட விடைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். நீங்கள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். முடிவு உங்கள் கையில். 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். 


நம் முன்னவர்கள் அனைத்தையும் கண்டு பிடித்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்களிடமும் அறிவியல் கேட்கும் கேள்விகள் இருந்து இருக்கின்றன. 


ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றிணைப்பதோ, அல்லது எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று நிரூபிக்கவோ நான் முயலவில்லை. என் வேலையும் அல்ல அது. 


இது ஒரு பயணம் அவ்வளவு தான். 


இங்கே ஒரு செடி, அங்கே ஒரு மலை, ஒரு பூ, ஒரு அருவி, ஒரு செடி, ஒரு பள்ளத்தாக்கு, என்று எல்லாவற்றையும் பார்த்து இரசித்துக் கொண்டே செல்லும் ஒரு இனிய பயணம் அவ்வளவுதான். 


செல்வோமா ?


2 comments:

  1. பயணத்திற்கு ஆவலாக இருக்கிறோம்.. ந‌ன்றி!

    ReplyDelete