தேவாரம் - பிறவா நாளே
காலையில் எழுந்தவுடன் "இன்னிக்கு அந்த வேலையை செய்து முடிக்கணும்" அப்படின்னு நினைகிறீங்க. அதுக்கு முன்னாடி வேற என்னென்னவோ வேலைகள் வந்து சேர்கிறது. அதையெல்லாம் செஞ்சு முடிச்சிட்டு நீங்க நினைச்ச வேலையை எடுக்கலாம்னு நினைக்கும் போது, ரொம்பவும் சோர்வாக உணர்கிறீர்கள். சரி கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்போம் என்று நினைகிறீர்கள்.
அப்படியே youtube, whatsapp என்று பார்கிறீர்கள். நேரம் போய் விடுகிறது. கடைசியில் "சே, நாள் பூராவும் வீணா பொழுது போயிருச்சு...ஒண்ணும் உருப்படியா செய்யல" என்று அலுத்துக் கொள்வீர்கள் அல்லவா?
அதே போல், முழு வாழ்நாளையும் நினைத்துப் பாருங்கள். எதுக்காக வந்தோம், என்ன செய்து கொண்டு இருக்கிறோம், முடியும் போது நம் மன நிலை எப்படி இருக்கும்? உருப்படியா ஏதாவது செய்தோம் என்று மன நிறைவு இருக்குமா, அல்லது வெட்டி வேலை நிறைய செய்து பொழுதை எல்லாம் வீணடித்து விட்டோம் என்று நினைப்போமா?
திருநாவுக்கரசர் சொல்கிறார்,
"இறைவனை நினையாத நாள் எல்லாம் பிறவா நாளே"
என்று.
பிறந்தும் ஒரு பலனும் இல்லை என்றால், பிறந்து என்ன பிறக்காமல் இருந்து என்ன ? எல்லாம் ஒன்று தானே?
காலையில் எழுந்து காப்பி குடித்து, செய்தி வாசித்து, வேலைக்குப் போய், சமைத்து, சாப்பிட்டு, தூங்கி, தொலைக் காட்சி பார்த்து ....இப்படி ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் அந்த நாட்களால் என்ன பலன்?
பாடல்
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_18.html
(pl click the above link to continue reading)
அரியானை = அறிவாலும், பொருளாலும் அடைய அரிதானவனை
அந்தணர்தம் சிந்தை யானை = அந்தணர்களின் சிந்தனயில் என்றும் இருப்பவனை
அருமறையின் = உயர்ந்த மறைகளின்
அகத்தானை = உட்பொருளாக அமைந்தவனை
அணுவை = அணுவை
யார்க்கும் = ஒருவருக்கும்
தெரியாத தத்துவனைத் = தெரியாமல் வைத்த உண்மை வடிவானனவை
தேனைப் = தேன் போன்றவனை
பாலைத் = பால் போன்றவனை
திகழொளியைத் = ஒளி போருந்தியவனை
தேவர்கள்தங் கோனை = தேவர்களின் தலைவனை
மற்றைக் கரியானை = கரிய நிறம் கொண்ட திருமால்
நான்முகனைக் = நான்கு முகம் கொண்ட பிரமன்
கனலைக் = தீயை
காற்றைக் = காற்றை
கனைகடலைக் = ஒலி உடைய கடலை
குலவரையைக் = பெரிய மலையை
கலந்து நின்ற =இவை எல்லாவற்றிலும் கலந்து நின்ற
பெரியானைப் = பெரியவனை
பெரும்பற்றப் புலியூ ரானைப் = புலியூர் என்ற ஊரில் இருப்பவனை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே = பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே
அப்படி எல்லாம் கணக்கு போட்டால் நம் வயது எவ்வளவு இருக்கும் ? ஐந்து அல்லது பத்து நாள் தான் இருக்கும்.
எவ்வளவோ நாட்கள் வீணாகப் போகின்றன.
அந்தக் கவலை எப்போதும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் சிறப்பாக கழிய வேண்டும்.
எழுத்துவதை நீருத்தாதீங்க
ReplyDelete