Pages

Sunday, July 10, 2022

திருக்குறள் - பொறையுடைமை - வலிமையுள் வலிமை

   

 திருக்குறள் - பொறையுடைமை - வலிமையுள் வலிமை 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


குறள் 51: அகழ்வாரை)  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html

குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html




)


இந்த பொறுமையா இரு, பொறுமையா இரு என்றால் என்ன?



நம்மை விட வலிமையான ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான் என்றால், அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. அலுவலகத்தில் பெரிய உயர் அதிகாரி நம் மேல் கோபம் கொண்டு ஏதோ தவறான வார்த்தை சொல்லி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், பொறுக்காமல் என்ன செய்வது. அவரை எதிர்த்து சண்டை போட முடியுமா? 


நம்மை விட வலிமையான ஒருவன் நமக்குத் தீமை செய்தால் அதைப் பொறுப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. வள்ளுவர் சொல்லுவது அதை அல்ல. 


நம்மை விட வலிமை குன்றியவன் அல்லது வலிமையில் சமமானவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான் என்றால் அதைப் பொறுப்பதைத் தான் பொறுமை என்கிறார். 


உதாரணமாக,



பெற்றோர் மேல் கோபம் கொண்டு பிள்ளைகள் ஏதோ சொல்லி விடுகின்றன. அதற்காக பிள்ளை மேல் கோபம் கொண்டு பதிலுக்கு பெற்றோரும் ஏதாவது செய்யலாமா? 


கணவன் மனைவி உறவில், சகோதர சகோதரி உறவில், நட்பில் ஏதாவது தவறு நிகழலாம். அங்கே பொறுமை காட்ட வேண்டும். 


இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு. தீமை செய்பவர்களுக்கு பொறுமை காட்டிக் கொண்டே இருந்தால் நம்மை ஒரு கையாலாகதவன் என்று நினைத்து விட மாட்டார்களா? தீமை செய்தவனை நாலு தட்டு தட்டினால் தானேஅடுத்த முறை தீமை செய்யமாட்டான்?



நாம் வலிமையானவர்கள் என்று எப்படி காட்டுவது? 



வள்ளுவர் சொல்கிறார்,, 



"உலகிலேயே பெரிய வலிமை எது தெரியுமா? எதிரிகளை சண்டையிட்டு வெல்லுவது அல்ல, தீமை செய்தவர்களை இருந்த இடம் தெரியாமல் அழிப்பது அல்ல. அதெல்லாம் எல்லோரும் செய்யக் கூடியது. அதில் என்ன பெரிய வலிமை இருக்கிறது?  நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்குச் செய்த தீமையை பொறுத்துக் கொள்வது தான் பெரிய வலிமை"  

என்கிறார். 

அந்த வலிமைக்கு ஒரு உதாரணம் சொல்ல நினைக்கிறார். 


அது எவ்வளவு பெரியது தெரியுமா என்று சொல்ல நினைத்த வள்ளுவர், என்ன சொன்னார் தெரியுமா?


"மலையை போல வலிமை" என்றோ 

"சீறும் சிங்கத்தைப் போல வலிமை " என்றோ 

"மதம் கொண்ட யானை போன்ற வலிமை" என்றோ சொல்லவில்லை. 



உலகிலேயே மிகப் பெரிய ஏழ்மை எது தெரியுமா? வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க முடியாமல் இருப்பது தான். அதை விட கீழான ஏழ்மை இல்லை. அது போல, தன்னை விட வலிமை குன்றியவர் செய்த பிழையை போருப்பதைப் போல ஒரு வலிமை இல்லை என்கிறார். 

பாடல் 


இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


பொருள் 




(pl click the above link to continue reading)




இன்மையுள் இன்மை  = இல்லாமல் இருத்தலில் பெரிய இல்லாமை (அதாவது ஏழ்மையில் பெரிய ஏழ்மை) 


விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் இருத்தல் 


வன்மையுள் = வலிமையில் 


வன்மை = பெரிய வலிமை 


மடவார்ப் பொறை = மடமையால் பிறர் செய்த பிழையை பொறுத்துக் கொள்வது 


வள்ளுவர் தெரிந்து எடுத்து சொற்களை பயன் படுத்துகிறார். 




"மடவார் பொறை"  - அறிவு இல்லாதவன் செய்த மிகைச் செயல்களை என்று.



பொறுமை என்பது பலவீனம் அல்ல. அதை விட பெரிய வலிமை இல்லை என்கிறார். 



கைகேயி இராமனுக்கு இழைத்தது அநீதி. இராமன் அவளைப் பொறுத்தான். 


இராவணன் செய்தது மிகப் பெரிய பிழை. நினைத்து இருந்தால் அவன் நிராயுதபாணியாக நின்ற போது கொன்று இருக்கலாம். "இன்று போய் நாளை வா"  என்றான் கோசல நாடுடை வள்ளல். 



அது பொறுமையின் எல்லை. 



இராமரை வணங்கினால் மட்டும் போதாது. அது யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். அதில் என்ன கடினம்? இராமரின் உயர்ந்த பண்புகளை கடை பிடிக்க முயல வேண்டும். 



சரி, பொறுக்கலாம். அது வலிமையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன நன்மை? 


சிந்திப்போம்





No comments:

Post a Comment