Pages

Wednesday, August 24, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 2

      

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html





)


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


நான் வாசித்தவரை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் மேலே சொன்ன கருத்தை ஒட்டித்தான் எழுதி இருக்கிறார்கள். வேற்று கருத்துகள் இருப்பின் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம். 


அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற மகான். 


மனைவி மற்றும் மக்களை ஒரு தளை (விலங்கு) என்று  சொல்லுவாரா? அப்படி பொருள் கொண்டால் என்ன செய்ய வேண்டும் ?ஒன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது அல்லது திருமணம் ஏற்கனவே செய்திருந்தால் அதை விட்டு தப்பிக்க வேண்டும். 


திருமணம் ஆன ஆண்கள் எல்லோரும் அதை பின் பற்ற நினைத்தால் என்ன ஆகும்? 


அருணகிரியார் அப்படிச் சொல்லி இருப்பாரா? அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா என்று சிந்தித்தேன். 


முதலாவது, வளை பட்ட கை மாதொடு மக்கள் என்பது ஒரு ஆணின் பார்வையில் சொல்லப் பட்டது. அதையே ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் "கழல் பட்ட காலொடு மக்கள்" என்று சொல்லலாம். பெண்கள் தங்கள் கணவன்மாரை பிள்ளைகளை தளையாக நினைக்கலாம். அப்படி நினைத்து எல்லா பெண்களும் சன்யாசிகளாகி விட்டால் என்ன செய்வது? 


இரண்டாவது, பெண்கள் வேலைக்குப் போவது, பொருள் ஈட்டுவது என்பதெல்லாம் ஒரு நூற்றாண்டு கால சங்கதி. அதற்கு முன்னால் பெரும்பாலும் பெண்கள் வேலைக்குப் போவதில்லை. எனவே, அவர்கள் ஏதோ பாரம் போல ஒரு சித்திரம் தீட்டப் பட்டு இருக்கிறது. ஆண் தான் உழைக்கிறான், கஷ்டப்படுகிறான், பெண் சுகமாக வீட்டில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.   


அது சரி அல்ல. 


பெண் வேலைக்குப் போகவில்லை, யுத்தங்களில் ஈடு படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்களின் இழப்பு மிக அதிகமானது. காதோரம் முதன் முதலில் ஒரு நரை முடி தோன்றியவுடன் பதறாத ஆண்கள் யார்? ஒரு முடிதான். அதை வெட்டி தூரப் போட்டுவிட்டாலும் மனம் கிடந்து குழம்பியதா இல்லையா?  பின் வெட்டி முடிக்க முடியவில்லை என்றால் சாயம் பூசுவது. தலை முடி கொட்டி வழுக்கை விழும் போது எவ்வளவு சங்கடம் வருகிறது. 


அதுவும் ஐம்பது வயதுக்கு மேல். 


இருபது வயதில் இளநரை வந்த வாலிபனைக் கேளுங்கள். வாழ்வே முடிந்துவிட்டது என்று சொல்லுவான். 


ஆனால், பெண்கள், மிக இளம் வயதில், பிள்ளை பெறும் பொழுது உடலின் கட்டுக் கோப்பை, இளமையை எவ்வளவு இழக்கிறார்கள். உடம்பில் அத்தனை பிடிமானங்களும் தளரும். தோல் தன் தன்மையை இழக்கும். இடுப்பு எலும்பு பிடி தளரும். மார்பகங்கள் கட்டு குலையும். 


ஒரு நரை முடிக்கே அந்தப் பதற்றம் என்றால், பெண்ணின் இழப்பை என்னென்று சொல்லுவது? சரி, ஒரு குழந்தையோடு முடியுமா என்றால் இல்லை. குடும்பக் கட்டுப்பாடு எல்லாம் இப்போதுதானே. காலம் காலமாக பிள்ளை பெற்றுக் கொண்டே இருந்தார்கள். எவ்வளவு இழக்க வேண்டி இருந்திருக்கும்? 


பிள்ளைகள் ஒரு தளை (விலங்கு) என்று சொல்வதானால் ஆண்களை விட பெண்கள்தான் அதை சொல்ல அருகதை உள்ளவர்கள். 


ஒரு புறம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஆணின் நாட்டம் அவள் பால் குறைய அவளுக்கு மன அழுத்தம் மேலும் அதிகமாகும். 


படிக்க முடியாது. 

வேலை பார்த்து சம்பாதிக்க முடியாது.

சாதித்து பேர் வாங்க முடியாது.

உடலை பேணி பாதுக்காக முடியாது.

செய்த வேலையையே வாழ்நாள் பூராவும் செய்து கொண்டிருக்க வேண்டும்



அவ்வளவு தியாகம் செய்யும் பெண்களை "வளை பட்ட கை மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்லுவது சரிதானா?


எப்படிப் பார்த்தாலும், அது சரியாக வரவில்லை. பின் அருணகிரியார் என்னதான் சொல்லி இருப்பார்?






இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

1 comment:

  1. Which one is correct? whether your point of view or Arunagiri appa point of view? how to decide? One solution is there, the one (whatever it may be) which exists for longer it is required for this world. In that point of view Arunagiri appa said what we have to consider not your point of view. Sorry if I am wrong.

    ReplyDelete