Pages

Thursday, August 4, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - இயல்பு

 

 திருக்குறள் - அழுக்காறாமை -  இயல்பு 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html



)


அறம், ஒழுக்கம், நெறி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒழுக்க நெறி இருக்கிறது. 


அது சமயம் சார்ந்ததாக இருக்கலாம், இருக்கும் இடம் சார்ந்ததாக இருக்கலாம், ஆண் பால் , பெண் பால் சார்ந்ததாக இருக்கலாம், சமய உட்பிரிவுகள் சார்ந்ததாக இருக்கலாம், வயது பற்றியதாக இருக்கலாம். 


எப்படி இருப்பினும், பல்வேறு ஒழுக்க நெறிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் கடைபிடிப்பது என்பது முடியாத காரியம்.  நடை முறையில் சாத்தியம் இல்லை. 


ஆசாரக் கோவை என்று ஒரு நூல் இருக்கிறது. எப்படி ஆசாரமாக இருக்க வேண்டும் என்று  சொல்கிறது. அதில் உள்ளபடி செய்வது என்பது நடைமுறைக்கு கடினமான செயல். 


சரி, நடைமுறைக்கு ஒத்து வராது என்று காரணம் காட்டி எல்லா ஒழுக்கத்தையும் காற்றில் பறக்க விட்டுவிடலாமா? 


இன்று அப்படித்தானே நடக்கிறது. 


எதைக் கேட்டாலும், அதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். மனம் போன போடி வாழ ஒரு எளிய வழி அது.


வள்ளுவர் சொல்கிறார் 


"உனக்கு என்று ஓதிய அனைத்து அறங்களையும் கடை பிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. பொறாமை இல்லாமல் இருப்பது என்ற ஒரு ஒழுக்கத்தைக் கடைபிடி. அது போதும் "


என்கிறார். 


பாடல் 


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


(Pl click the above link to continue reading)


ஒழுக்காறாக் = ஒழுக்க + ஆறாக = ஆறு என்றால் வழி. ஒழுக்க வழியாக அல்லது ஒழுக்க நெறியாக 


கொள்க = கடைபிடிக்க 


ஒருவன்தன் = ஒருவன் தன்னுடைய 


நெஞ்சத்து = மனதில் 


அழுக்காறு = பொறாமை 


இலாத இயல்பு = இல்லாமல் இருக்கும் இயல்பை 


அட, இது ரொம்ப எளிதாக இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றும். 


என்னதான் முயன்றாலும் மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை வராமல் இருக்காது.  எங்கோ ஒரு இடத்தில் பொறாமை வரத்தான் செய்யும். 


பணம், பொருள் பற்றிய பொறாமை இல்லாவிட்டாலும், அழகு, அறிவு, குணம், பற்றிய பொறாமை வராமலா போகும்?


என்னா அழாக இருக்கிறாள்/ன், என்ன ஒரு உடல் வாகு, வளர்த்தியும் சதையும் ஒண்ணு போல ...என்று பெருமூச்சு விடாத ஆட்கள் உண்டா?


சரி, பொறாமை வந்து விட்டது. 


என்ன செய்யலாம்? 


அது தவறு, அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது என்று மனதை கடிந்து, நல் வழிப் படுத்தலாம். இனி அப்படி நினைக்க மாட்டேன் என்று சொல்லிக் கொள்ளலாம். 


அது அல்ல வள்ளுவர் சொல்லுவது. 


"அழுக்காறு இலாத இயல்பு"


இயல்பாகவே பொறாமை இருக்கக் கூடாது. பொறாமை வந்த பின் அதை சரி செய்வது அல்ல. மனதில் மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை என்ற எண்ணமே வரக் கூடாது. அது இயல்பாக இருக்க வேண்டும். வலிந்து கொண்டு வரக் கூடாது. 


அவனுக்கு உள்ளது அவனுக்கு, எனக்கு உள்ளது எனக்கு என்று இருக்க வேண்டும். 


அவனுக்கு எப்படி கிடைத்தது, நான் அவனை விட எவ்வளவு உழைக்கிறேன், எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற எண்ணமே மனதில் எழக் கூடாது என்கிறார். 


நீருக்கு குளிர்ச்சி எப்படி இயல்போ, அப்படி பொறாமை இல்லாத குணம் இயல்பாக அமைய வேண்டும். 


அப்படி என்றால் மனம் எவ்வளவு பக்குவப்பட வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். 


சிலருக்கு படிப்பது என்பது ஒரு கடினமான வேலை. வேறு வழி இல்லை என்றால் படிப்பார்கள். மற்ற வேலை எல்லாம் முடித்து விட்டு, வேற ஒண்ணும் இல்லை செய்வதற்கு என்றால் சரி எதையாவது பொழுது போக படிப்போம் என்று படிப்பார்கள். 


சிலருக்கு, படிப்புதான் வேலையாக இருக்கும். படிக்காவிட்டால் என்னவோ போல இருக்கும் அவர்களுக்கு. 


அது அவரவர் இயல்பு. 


அது போல உடல் பயிற்சி செய்வது. சிலருக்கு அது கடினம். சிலருக்கு அதைச் செய்யாவிட்டால் ஏதோ பறி கொடுத்த மாதிரி இருக்கும். 


பொறாமை இன்மை இயல்பாக அமைய வேண்டும். 


அந்த இயல்பை ஒழுக்கமாகக் கொள்க என்றார் வள்ளுவர். 


"ஒழுக்காறாக் கொள்க" 


பரிமேலழகர் உரையில் "முன்பு ஒரு குறளில் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் " என்று கூறினார் அல்லவா? எனவே, இந்த பொறாமை இல்லாத இயல்பையும், ஒழுக்கம் போல உயிரினும் உயர்வாகக் கொள் என்கிறார். 


நமக்கு ஒன்று இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் அந்தப் பொருள் நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து விட்டால், நம்மிடம் இல்லாதது ஒரு பெரிய குறையாகப் போய் விடும். 


அதை அடைய பல முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும். 


இப்படி நம்மைச் சுற்றி பத்து பேர் இருப்பான். ஒவ்வொருவனிடமும் ஒன்று இருக்கும். நமக்கு எல்லாம் வேண்டும். 


முடிகிற காரியமா?


என்னைக் கேட்டால் பொறாமையை ஒழிக்க முதலில் facebook (முகநூல்) போன்ற சமூக வலைதளங்களை விட்டு வெளியேற வேண்டும். 


அவனவன் தனக்கு கிடைத்ததை அதில் போட்டு பெருமைப் படுவான். பார்க்கும் நாம், எனக்கு அது இல்லையே, இது இல்லையே என்ன்று எந்நாளும் தீராத ஏக்கத்தில் இருப்போம். 


தேவையா?


நமக்கென்று உள்ளதைக் கொண்டு இன்பமாக வாழ்வோமே. 












No comments:

Post a Comment