திருவாசகம் - திரு அம்மானை - அறைகூவி, வீடு அருளும்
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை:
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
)
மற்ற பாடல்களுக்கு விளக்கம் சொல்லுவது போல திருவாசகத்துக்கு சொல்லிக் கொண்டு போக முடியாது. சொல்லவே முடியாது என்பது தான் உண்மை. அது ஒரு உணர்வு சார்ந்த விடயம். இருந்தும், என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, படித்ததும், கேட்டதும், சிந்தித்ததும் என்று பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான்.
நம் வீதிகளில் வண்டியில் காய்கறி விற்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், கீரை விற்பவர்கள் கூவி கூவி விற்பதை கேட்டு இருகிறீர்களா?
இராகம் போட்டு விற்பார்கள். "கீரேரேரேரேய்ய்ய்ய்" என்று நீட்டி முழக்கி கீரையை விற்பார்கள். அந்த சத்தத்தில் நமக்குத் தெரியும் கீரை வண்டிக்காரர் வந்து இருக்கிறார் என்று. கீரை வேண்டும் என்றால் போய் வாங்கி வரலாம். நாம் கடைக்குப் போக வேண்டியது இல்லை. சாமான்கள் நம் வீடு தேடி வரும். அதை விற்பவரும் ஒரு இடத்தில் அமர்ந்து விற்றால் அவ்வளவாக விற்காது. நாலு தெரு சுற்றி திரிந்து, கூவி விற்றால் நிறைய விற்கும்.
சரி தானே?
மணிவாசகர் சொல்கிறார்.....
ஆண்டவனிடம் வீடு பேறு என்ற சரக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான்? "எல்லோரும் வாங்க, வந்து வீடு பேறு வாங்கிட்டுப் போங்க" என்று கூவி கூவி அழைத்து கொடுப்பானாம்.
"அப்படியா மணிவாசகர் சொல்லி இருக்கிறார்? இருக்காது. நீங்கள் ஏதோ இட்டு கட்டிச் சொல்கிறீர்கள்" என்று நீங்கள் நினைக்கலாம்.
"அறைகூவி, வீடு அருளும்"
என்கிறார் பாடலில். சத்தம் போட்டு கூப்பிட்டு கொடுப்பானாம். நீங்கள் எங்கும் போக வேண்டாம். அவனே வந்து, உங்களை கூப்பிட்டு கொடுப்பானாம்.
பரவாயில்லையே. இது கொஞ்சம் புதுமையான விடயம்தான். இருந்தாலும் நல்லா இருக்கு. சரி, அவர் அறை கூவி வீடு பேறு தருவார் சரி. அவர் எப்படி வருவார். நமக்குத் தெரிய வேண்டாமா?
மணிவாசகர் அடையாளம் சொல்கிறார்.
அவருக்கு அழகிய கண்கள் இருக்கும். அந்தணன் வடிவில் வருவார். என்கிறார்.
"அம் கணன், அந்தணன் ஆய்,"
"நல்லது. வீடு பேறு தருவார். வாங்கிக் கொள்ளலாம். பதிலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? விரதம், பூஜை, தானம், தவம், வழிபாடு இதெல்லாம் ஏதாவது செய்ய வேண்டுமா? நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லையே. நமக்குத் தருவாரா அல்லது அவருடைய சிறந்த பக்தர்களுக்கு மட்டும் தான் தருவாரா? " என்று கேட்டால்
மணிவாசகர் சொல்கிறார்
"ஆண்டவனுக்கு நம்மிடம் இருந்து பெற வேண்டியது ஒன்றும் இல்லை. அவனிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கப் போகிறது. மேலும், நாம் என்ன தான் முயன்றாலும், வீடு பேறு பெறும் அளவுக்கு நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்ய முடியும். ஒரு கவலையும் படாதீர்கள். அவன் நம் தகுதி எல்லாம் பார்ப்பது இல்லை. வருகிறவர்களுக்கு எல்லாம் வீடு பேறுதான்"
"எம் தரமும் ஆட்கொண்டு"
நம்முடைய தரத்துக்கும், நம்மை ஆட்கொண்டு வீடு பேறு தருவான்.
"அது எப்படி முடியும்? நாம் செய்த வினை இருக்கிறதே? அதற்கு இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?"
அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்கள் பிறவித் தொடரை அறுத்து, உங்களுக்கு வீடு பேறு தருவான் என்கிறார்.
"எங்கள் பிறப்பு அறுத்திட்டு"
ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்றீங்க. அவனே வந்து கூப்பிட்டு கொடுப்பான்னு சொல்றீங்க. பிறவித் தொடரை அறுப்பான்னு சொல்றீங்க. அப்ப நாம என்னதான் செய்யணும். ஒண்ணுமே செய்ய வேண்டாமா என்று கேட்டால்
"இவ்வளவையும் நமக்கு இலவசமாகக் கொடுத்த அவன் கருணையை நினைத்து நன்றியோடு பாடுவோம்" அவ்வளவுதான் நாம் செய்யக் கூடியது என்கிறார்.
மனதை அப்படியே உருக்கும் பாடல்.
அம்மானை என்பது இளம் பெண்கள் சிறு சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு என்று பார்த்தோம். அதை விளையாட்டும் பெண்களை "அம்மானாய்" என்று சொல்லுவார்கள்.
குழந்தையை "என் இராசா" என்று சொல்லலாம். "என் ராசால்ல , என் செல்லம்ல..." என்றும் கொஞ்சலாம்.
"அம்மானாஆஆய் " என்று செல்லமாக, ,அன்போடு கூப்பிடுவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.
பாடல்
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_11.html
(pl click the above link to continue reading)
செம் கண் = சிவந்த கண்களை உடைய
நெடுமாலும் = உயர்ந்த திருமாலும்
சென்று = போய்
இடந்தும் = பூமியை தோண்டியும்
காண்பு அரிய = காண முடியாத
பொங்கு = பொலிவுடன் விளங்கும்
மலர்ப் பாதம் = மலர் போன்ற திருவடிகள்
பூதலத்தே = இந்த பூமியிலே
போந்தருளி, = சென்று அருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு = எங்களது பிறவித் தொடரை அறுத்து
எம் தரமும் = எங்களுடைய தரத்தைப் பார்க்காமல், எங்களுக்கு கூட
ஆட்கொண்டு, = ஆட் செய்து
தெங்கு திரள் சோலை, = தென்னை மரங்கள் சூழ்ந்த சோலைகள் உள்ள
தென்னன் = தென்னாட்டவன்
பெருந்துறையான், = திருபெருந்துறையில் உறைபவன்
அம் கணன் = அழகிய கண்களை உடைய அவன்
அந்தணன் ஆய் = அந்தண வடிவில் வந்து
அறைகூவி, = கூவி கூவி
வீடு அருளும் = வீடு பேற்றை அருளும்
அம் கருணை =அந்தக் கருணை நிறைந்த
வார் கழலே = கழல் அணிந்த வீரத் திருவடிகளை
பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவதைப் பார் அம்மானாய்
இந்தப் பாடலுக்கு பல நுணுக்கமான விளக்கங்கள் சொல்வார்கள்.
திருமால் பன்றி உருவம் கொண்டு திருவடியை காணச் சென்றார். காண முடியவில்லை. அவ்வளவு பாதளத்தில் இருக்கும் திருவடி எவ்வளவு கரடு முரடாக, கருப்பாக, உறுதியானதாக இருக்கும்?
அதுதான் இல்லை, "விளங்கும் பொங்கு மலர் பாதம்" என்கிறார்.
பாதாளத்தில் இருந்தாலும், அது ஒளி பொருந்திய, மலர் போன்ற மென்மையான பாதங்கள்.
ஆனானப்பட்ட திருமாலாலே காண முடியவில்லை என்றால் நாம் எல்லாம் எம்மாதிரம் . நாம் எப்படி காண முடியும் என்ற ஆயாசம் வரும் அல்லவா?
நாம் போக வேண்டாம். அந்த பாதங்களே நம்மை நாடி வரும்.
"பூதலத்தே போயருளி"
அவரே இங்கு வருவார்.
வந்தவர் "என் பிறப்பை அறுத்து எனக்கு வீடு பேறு தந்தார்" என்று சொல்லவில்லை.
"எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு"
எங்கள் என்று பன்மையில் குறிக்கிறார். நம் எல்லோருக்கும்.
ஐயோ, ,எனக்கு ஒரு தகுதியும் இல்லையே. எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்று நினைத்தால்
"எம் தரமும் ஆட்கொண்டு"
உங்கள் தரத்தை எல்லாம் அவன் பார்ப்பது இல்லை. அவனுக்கு அந்த பாகுபாடெல்லாம் கிடையாது.
கண்ணப்பன் என்ற வேடனுக்கு முக்தி கொடுக்கவில்லையா ?
திருநீலகண்டர் என்ற குயவருக்கு முக்தி கொடுக்கவில்லையா?
அவன் தரம் பார்ப்பது இல்லை.
என்ன, இப்படி ஒரு கடவுளா? அளவு கடந்த கருணை உடையவனாக இருக்கிறானே...அவனுக்கு நாம் என்னதான் செய்வது?
"அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!"
அவ்வளவுதான்.
மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.
(பதிவு சற்று நீண்டு விட்டது. பொறுத்தருள்க)
அற்புதம் அண்ணா
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிறப்பு
ReplyDelete