திருவாசகம் - திரு அம்மானை - அந்தம் இலா ஆனந்தம்
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை:
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
அறைகூவி, வீடு அருளும்
வாரா வழியருளி
ஒரு நிறுவனத்தின் மேல் அதிகாரியாக இருப்பார் அவர். அவரைக் கேட்டுக் கொண்டுதான் எல்லாம் நடக்கும். அவர் கையெழுத்துப் போட்டால்தான் எதுவும் நகரும். என்னை விட்டால் இந்த நிறுவனத்தை செலுத்த யார் இருக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்வார். நான் இல்லாவிட்டால் இந்த நிறுவனம் என்ன ஆகுமோ என்று கவலை கொள்வார்.
ஒரு நாள் அவர் ஓய்வு அடையும் வயதை அடைவார். அவரை பாராட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த நிறுவனம் அவர் இல்லாமல் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருக்கும்.
அவருக்குத் தான் தாங்க முடியாது. நான் அவ்வளவு செய்தேனே...என்னைத் தவிர யாருருக்குத் தெரியும்..நான் இல்லாமல் எப்படி நடக்கிறது, அப்படி என்றால் நான் ஒன்றும் அப்படி ஒரு பெரிய ஆள் இல்லையா, நான் இல்லாவிட்டால் இன்னொருவன் என்றால் நான் சாதரணமானவன் தானா என்று மறுகுவார். சில பேர் அந்த வெறுமையை தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து இறந்தும் இருக்கிறார்கள்.
நமக்கு அதை நினைத்தால் சிரிப்பாக இருக்கும்.
சிரிப்பதற்கு முன் சற்று யோசிப்போம்.
நம் வீட்டில் என்ன நடக்கிறது என்று.
நான் இல்லாவிட்டால் என் பிள்ளைகள் என்ன ஆகும், என் மனைவிக்கு ஒன்றுமே தெரியாது, நான் இல்லாவிட்டால் என் கணவருக்கு ஒரு காப்பி கூட தெரியாது, அவரை அல்லது அவளை யார் பார்த்துக் கொள்வார்கள், என்று நமக்கு நாமே பெரிய ஆளாக நினைத்துக் கொள்வோம். நம்மை விட்டால் இந்த குடும்பமே சீரழிந்து விடும் என்று நினைப்போம். நாம் தான் இந்த குடும்பத்தை தாங்கி நிற்கிறோம் என்று நினைப்போம்.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சந்தேகம் இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள். உபசாரத்துக்கு வேண்டும் என்ன்றால்"ஐயோ, நீ இல்லாத வாழ்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்பார்கள். அத்தனையும் பொய். யார் இல்லாவிட்டாலும், உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும்.
நாமே நினைத்துக் கொள்வதுதான்...நாம் பெரிய ஆள், இந்த குடும்ப பாரத்தை நாம் தான் கொண்டு செல்கிறோம் என்று. அப்படி சொல்லிக் கொண்டு நம் பந்த பாசங்களை மேலும் மேலும் இறுக்கமாக்கி கொள்கிறோம். விட்டால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும், விடவே முடியாது என்று நாமே கற்பனை செய்து கொண்டு "என் குடும்பம், என் பிள்ளைகள், என் கணவன், என் மனைவி, ,என் பொறுப்பு" ஆணவத்தை வளர்த்துக் கொள்கிறோம்.
அதை விட முடிவது இல்லை.
விட்டு விட்டு என்ன செய்வது என்ற பெரிய கேள்வி எழும். அதற்கு விடை காண முடியாது. அதற்கு பயந்து, நாம் இதற்கு பின்னால் ஒளிந்து கொள்கிறோம்.
இந்தப் பற்றுகள் விட வேண்டும் என்றால் அவன் அருள் வேண்டும்.
நான் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது என்று சொல்ல எத்தனை பேரால் முடியும்?
"நான் ஒன்றும் பெரிசாக செய்து விடவில்லை. நான் இல்லாவிட்டாலும் எல்லோரும் சந்தோஷமாகத் தான் இருப்பார்கள். இருக்கும் வரை என்னால் முடிந்ததைச் செய்கிறேன்" என்று இருந்தால் மனம் லேசாகும். நான் நான் என்று பறக்காது. என்னை விட்டால் யாரும் இல்லை என்று இறுமாப்பு கொள்ளாது, என்னை கேட்காமல் எப்படிச் செய்யலாம் என்று மனம் கொக்கரிகாது.
"அவரவர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொள்வார்கள்" என்று விட்டு விட்டால் நம் வேலை என்ன என்ற சிந்தனை பிறக்கும். அந்தக் கேள்வியில் இருந்து எல்லையில்லா ஆனந்தம் பிறக்கும் என்கிறார் மணிவாசகர்.
பாடல்
இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,
அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்,
பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த
அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html
(pl click the above link to continue reading)
இந்திரனும், = இந்திரனும்
மால் = திருமாலும்
அயனும் = பிரமாவும்
ஏனோரும் = மற்றையவர்களும்
வானோரும், = வானில் உள்ளவர்களும்
அந்தரமே நிற்க = அந்தரத்தில் நிற்க
சிவன் = சிவ பெருமான்
அவனி = இந்த உலகிற்கு (பூமிக்கு)
வந்தருளி = வந்து அருளி
எம் தரமும் = எம்முடைய தரத்துக்கு எங்களையும்
ஆட்கொண்டு = ஆட் கொண்டு
தோள் கொண்ட நீற்றன் ஆய்; = தோள்களிலே திருநீற்றை அணிந்து
சிந்தனையை = மனதை
வந்து உருக்கும் = வந்து உருக்கும்
சீர் ஆர் பெருந்துறையான், = சீரிய சிறந்த திருப் பெருந்துறையில் உறைபவன்
பந்தம் பறிய = நம்முடைய பந்தங்களை எல்லாம் நீக்கி
பரி மேல்கொண்டான் = குதிரை மேல் வந்தான்
தந்த = அருள் தந்த
அந்தம் இலா ஆனந்தம் = முடிவு இல்லாத ஆனந்தம்
பாடுதும் காண்; அம்மானாய்! = அதைப் பாடுவோம் அம்மானை ஆடும் பெண்ணே
பந்தங்களை நீக்கியவுடன், அந்தம் இல்லாத ஆனந்தம் தோன்றியது என்கிறார்
மணிவாசகர் பாண்டிய மன்னன் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். பாண்டிய மன்னன் நிறைய பொருள் கொடுத்து குதிரைகள் வாங்கி வர அனுப்பினான். அவரும் கிளம்பி விட்டார்.
பார்த்தார் சிவ பெருமான். தன் பக்தன் இப்படி குதிரை வாங்கவும், நாட்டை ஆள்வதில் உதவி செய்வதிலும் பிறவியை வீணே கழிக்கிறானே என்று அவர் மேல் அருள் கொண்டு அவரை தடுத்து ஆட்கொண்டார்.
சிந்திப்போம், மூன்று வேளை சமையல் செய்வதும், துணி துவைத்து உலர்துவதும், வேலை ஆட்களை மேற் பார்வை செய்வதும், நாள் ஒன்றுக்கு பத்து மணி நேரம் ஏதோ ஒரு அலுவலகத்தில் செய்த வேலையையே வருடக் கணக்கில் செய்து கொண்டு இருப்பதுவா வாழ்வின் நோக்கம்?
இதையே ஏதோ பெரிய இமாலய சாதனை என்று நினைத்துக் கொள்வதும், இதைச் செய்ய என்னை விட்டால் ஆள் இல்லை என்று இறுமாப்பதும் விட்டு விட்டு,கரை சேரும் வழியை நினைப்போம்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment