நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம்
நாம் எதைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அதை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
எதை நினைக்கிறோமோ, அதைச் செய்வோம். எதைச் செய்கிறோமோ, அதில் பலன் கிடைக்கும். எவ்வளவு பலன் என்பது எவ்வளவு முயற்சி, காலம், இடம் அவற்றைப் பொறுத்தது.
வெற்றி அடைய வேண்டுமா? வெற்றி பற்றி சிந்திக்க வேண்டும். வெற்றி அடைந்தவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் எப்படி வென்றார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களின் வெற்றி நமக்கு ஒரு தூண்டு கோல், அது ஒரு ஊக்கம் தரும்.
உள்ளதிற்குள் பெரிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? மிகப் பெரிய காரியத்தை யார் செய்திருப்பார்கள்?
மிகப் பெரியவன் கடவுள் என்று கொண்டால், அவனுடைய வெற்றிதானே மிகப் பெரிய வெற்றியாக இருக்க முடியும்.
பிரமாண்டமான வெற்றி. நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றி அதுவாகத் தானே இருக்க முடியும்?
இறைவன் அடைந்த வெற்றிகளைப் பற்றி சிந்திக்கிறார் நம்மாழ்வார்.
பிரமிப்பு ஊட்டுகிறது. சிலிர்த்துப் போய் விடுகிறது.
நாம் எத்தனையோ ஆங்கிலப் படங்கள் பார்த்து வியந்திருப்போம். அதன் பிரமாண்டம், மித மிஞ்சிய கற்பனை, அதை எப்படி திரையில் கொண்டு வந்தார்கள் என்று வியந்திருப்போம்.
வேற்றுக் கிரகங்கள், இராட்சச திமிங்கலம், டினோசர், இயந்திர மனிதன், பறக்கும் மனிதன், என்று பெரிய கற்பனைகளை நாம் கண்டு வியந்து இருக்கிறோம்.
நம்மாழ்வார் பாடல்களைப் படித்துப் பாருங்கள். அவர் காட்டும் பிரமாண்டம், அவர் அதை ஒரு பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை, படிக்க படிக்க புல்லரிக்கும். படித்த பின் அவற்றை நம்மால் சரியாக கற்பனை கூட பண்ண முடியாது.
முயன்று பாருங்கள்.
வாமன அவதாரமாக திருமால் வந்து மூன்றடி தானம் கேட்கிறார். மாவலியும் தருகிறேன் என்று ஒத்துக் கொள்கிறார். அதுவரை நம்மால் கற்பனை பண்ண முடியும்.
அடுத்தது என்ன நிகழ்ந்தது என்பதை நாம் கற்பனை பண்ணவும் முடியாது. .
திருமாலின் உருவம் எங்கோ பாதாளம் வரை போயிற்று. அங்கிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது.
நீங்கள் ஒரு கடற்கரையில் நிற்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். கடலின் நீண்ட பெரும் பரப்பை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
தூரத்தில் ஒரு சக்கரமும், சங்கும் கடலின் பரப்பின் மேல் எழுகிறது. என்ன இது என்று பார்கிறீர்கள். அது மிக பிரமண்டாமாக வளர்ந்து கொண்டே போகிறது. நீங்கள் பயந்து சற்று பின் வாங்கி என்ன அது என்று பார்கிறீர்கள். சங்கு, சக்கரத்தைத் தொடர்ந்து ஒரு வில் வருகிறது. எல்லோரும் அலறுகிறார்கள். பயத்தில் ஓடுகிறார்கள். அது மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஒரு பெரிய வாள் வருகிறது. இவற்றை தாங்கி இருந்த உருவத்தின் தலை இந்த அண்ட சராசரத்தின் உச்சியை முட்டுகிறது. முட்டியது மட்டும் அல்ல, அதன் கூரையை கிழிக்கிறது.
இந்த பிரபஞ்சம் நீரால் சூழப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். பிரபஞ்சத்தின் கூரையில் ஓட்டை போட்டால், அந்த தண்ணீர் கொட்டும் என்கிறார். அதற்கு ஆவரண ஜலம் என்று பெயர்.
இதுவரை கண்டது திருமாலின் ஒரு அடி. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தத் திருவடியை உயர்த்துகிறார், அது அவர் தலை வரை போகிறது.
கற்பனை செய்து பாருங்கள். ஓர் காலை ஊன்றிக் கொண்டு, இன்னொரு காலை தலைவரை உயர்த்தி. உயர்த்திய காலை ஊன்றி, கீழே உள்ள காலை அடுத்து தலைவரை உயர்த்த வேண்டும். அது ஒரு அடி என்ற கணக்கு.
இந்த உலகம் அனைத்தையும் இரண்டே அடியில் அளக்க வேண்டும் என்றால் அந்தப் பாதம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், அவ்வளவு பெரிய பாதம் என்றால் கால் எப்படி இருக்கும், மொத்த உருவமும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா?
இவ்வளவு பெரிய உருவம், இரண்டு அடியில் அத்தனை உலகையும் அளக்க வேண்டும் அதுவும் மிகக் குறைந்த நேரத்தில். மாவலி நின்று கொண்டிருக்கிறான். மூன்றாவது அடி எங்கே என்று கேட்க வேண்டும். அப்படி என்றால் அந்த உருவம் இந்த உலகை எவ்வளவு வேகமாக அளந்திருக்கும் ?
பாடல்
ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (3594)
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html
(pl click the above link to continue reading)
ஆழி யெழச் = சக்கரம் எழ
சங்கும் = சங்கும்
வில்லு மெழ = வில்லும் எழ
திசை வாழி யெழத் = திசைகள் தோறும் உள்ள மக்கள் அதைக் கண்டு ஒரு புறம் பயந்து, மறுபுறம் பிரமித்தது, வாழ்க வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். பிரமாண்டமான சப்த்தம். உலகமே நடுங்குகிறது.
தண்டும் = கதை ஆயுதமும்
வாளு மெழ, = வாளும் எழ
அண்டம் மோழை யெழ = அண்டத்தின் உச்சி பிளந்து, ஆவரண நீர் பொங்கி எழ
முடி = திருமுடி, தலை
பாத மெழ = பாதம் அதுவரை செல்ல
அப்பன் = திருமால்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. = மாவலியால் (விதியின் காரணமாக) பட்ட துன்பங்கள் நீங்கி உலகம் நன்மை அடைய
இது உண்மையா, இல்லையா என்ற தர்க்கம் ஒரு புறம் இருக்கட்டும்.
எவ்வளவு பெரிய பிரமாண்டம் என்று மனமும், சிந்தனையும் விரிகிறது அல்லவா?
அதை நினைக்கும் போது நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் ஒரு தூசு என்று தெரிகிறது அல்லவா? இதைச் செய்யவா இந்தப் பாடு படுகிறேன்...இப்ப செய்து முடிக்கிறேன் என்று நமக்குள் ஒரு உத்வேகம் வருகிறது அல்லவா. அந்த முயற்சி, ஊக்கம், உந்து சக்தி வெற்றியைத் தேடித் தரும்.
இப்படி பத்துப் பாடல்களை அருளிச் செய்து இருக்கிறார் நம்மாழ்வார்.
இதரப் பாசுரங்களும் இதே மாதிரித்தான்.
அருமையோ அருமை
ReplyDeleteFantastic interpretation of the pasuram Swami. Thangalukku palllandu paadi amaikiren
ReplyDelete