Pages

Thursday, September 8, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில (3596)

  

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில  (3596)


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


எந்த வேலை செய்தாலும் ஏதாவது சப்தம் வரத்தானே செய்யும். நடந்தால் கூட கால் தரையில் பட்டு எழும் போது ஒரு சின்ன சப்தமாவது வரும். பெரிய வேலை என்றால் எவ்வளவு சத்தம் வரும்?


சின்ன பைக், ஸ்கூட்டர் ஓடுவதற்கும் ஒரு இரயில் வண்டி ஓடுவதற்கும் எவ்வளவு சத்தம், ஆட்டம், அதிர்வு எல்லாம் இருக்கிறது? 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


பிரளய காலத்தில், இந்த உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். 


உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த பூமியின் மேற் பரப்பு மட்டும் அல்ல,  மலைகள், கடல்கள் என்று அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். அப்படி மூழ்கிய இந்த பூமியை, திருமால் பன்றி உருவம் எடுத்து, தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாராம். 


அவர் அப்படி தூக்கி நிறுத்தியது ஒன்றும் பெரிய காரியமாகப் படவில்லை நம்பாழ்வாருக்கு. 


அப்படி தூக்கி நிறுத்திய போது, மலைகளும், கடல்களும், இந்த பூமி பரப்பும் கொஞ்சம் கூட அசையவில்லையாம். அது மட்டும் அல்ல, ஒன்றும் கொஞ்சம் கூட இடம் மாறவில்லையாம். இருந்தது இருந்த படி, அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் கொண்டுவந்தாராம். 


எப்படி முடியும்?


உங்களை ஒரு சின்ன காகிதத்தை எடுத்து, பின் எடுத்த இடத்திலேயே வைக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள். ஒரு gas cylinder அல்லது grinder போன்ற கனமான சாமானை தூக்கி, பின் அதே இடத்தில் அப்படியே வைக்கச் சொன்னால் முடியுமா? முடியும் என்று ஒரு வாதத்துக்கு சொல்லலாம். எங்கே பீரோவை தூக்கி வையுங்கள், கட்டிலை தூக்கி வையுங்கள் என்றால் முடியுமா? 


சைக்கிளை தூக்கி வைக்க முடியும். காரை தூக்கி வைக்கச் சொன்னால் முடியுமா? 


இந்த பூமியை அப்படியே தூக்கி, கொஞ்சம் கூட ஒரு சின்ன அதிர்வு கூட இல்லாமல், ஆடாமல் அசையாமல் வைப்பது என்றால் எவ்வளவு பலம் வேண்டும்? சக்தி வேண்டும்?



பாடல் 


நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்

நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்

நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்

ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


(pl click the above link to continue reading)


நான்றில = நகரவில்லை 


வேழ்மண்ணும் = ஏழ் உலகும் 


தானத்தவே, = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்மலை  = ஏழு மலைகளும் 


தானத்தவே = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்கடல் = ஏழு கடலும் 


தானத்தவே  = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


அப்பன் = என் அப்பன் திருமால் 


ஊன்றி = காலை ஊன்றி 


யிடந் = கிண்டி எடுத்து 


தெயிற் றில் = பற்கள் மேல் 


கொண்ட நாளே. = தூக்கி வந்த அந்த நாளில் 


நாம் ஒரு வேலையை செய்ய எப்போது தயங்குவோம்? 


அந்த வேலையை நம்மால் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வரும் போது. அந்த வேலையை செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் போது. 


என் தந்தை எவ்வளவு பெரிய பலசாலி. அவர் பிள்ளை நான், அதில் கொஞ்சம் பலமாவது என்னிடம் இருக்காதா? ஒரு வேளை என்னால் முடியாவிட்டால், அவர் உதவி செய்ய மாட்டாரா? பிள்ளைக்காக இந்த பெற்றோர் உதவி செய்யாமல் இருப்பார்கள்?


எனவே, எந்த வேலையைக் கண்டும் மயங்க வேண்டாம். உங்களால் கண்டிப்பாக செய்து வெற்றி பெற முடியும் என்று உற்சாகம் தருகிறார் நம்மாழ்வார். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 2 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html



)


No comments:

Post a Comment