Pages

Wednesday, September 14, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - நினைக்கப்படும்

  

 திருக்குறள் - அழுக்காறாமை -   நினைக்கப்படும் 


வள்ளுவர் ஆயிரம்தான் சொல்லட்டும், ஊருக்குள்ள பார்த்தால் அயோக்கியன், இலஞ்சம் வாங்குபவன், ஊரை அடித்து உலையில் போடுபவன்,பொய் சொல்லுபவன், சட்டத்தை மீறுபவன் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நீதி, நேர்மை, ஞாயம் என்று இருப்பவன் வறுமையில், துன்பத்தில் வாடுகிறான். 


என்ன பெரிய அறம். அற வழியில் நின்றால் இன்பம், மகிழ்ச்சி வரும் என்றால் எல்லோரும் அந்த வழியில் தானே வந்து விட்டுப் போகிறார்கள். 


அறவழியில் சென்றால் துன்பம்தான என்றால் யார் அந்த வழியில் செல்வார்கள்.  இதெல்லாம் சரிப்படாது. திருக்குறள் எல்லாம் சும்மா படிக்கலாம். நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது என்று நினைக்கத் தோன்றும். 



இந்த பிரச்சனையை வல்லுவரிடமே கேட்டு இருப்பார்கள் போல் இருக்கிறது. 


அதற்காக ஒரு குறளில் பதிலும் சொல்லி இருக்கிறார். 


பாடல் 


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_14.html


(Pl click the above link to continue reading) 


அவ்விய = மனக் கோட்டம், பொறாமை உள்ள 


நெஞ்சத்தான் = நெஞ்சத்தை உடையவன் 


ஆக்கமும் = அவன் பெற்ற செல்வமும் 


செவ்வியான் = செம்மையாக வாழ்பவன் 


கேடும்  = பெற்ற துன்பங்களும் 


நினைக்கப் படும். = நினைக்கப்படும் 



இந்தக் குறளுக்கு பரிமேல் அழகரும், கி ஆ பெ விஸ்வநாதம் அவர்களும் செய்திருக்கும் உரை பிரமிக்கத் தக்கது. நம்மை ஒரு தனி உலகுக்கே கூட்டிச் செல்கிறார்கள். 


முதலாவது, "அவ்விய நெஞ்சத்தான்" என்றவர் "செவ்விய நெஞ்சத்தான்" என்று சொல்லவில்லை.  "செவ்வியான்" என்று நிறுத்தி விட்டார்.  அதை செவ்விய நெஞ்சத்தான் என்று நீயே புரிந்து கொள் என்கிறார் கி ஆ பெ. 


இரண்டாவது, அவ்வியம் என்றால் வளைந்த, கோணலான, என்று பொருள். இந்த அதிகாரத்தில் வருவதால் நாம் அதை "பொறாமை" குணம் உள்ள என்று எடுத்துக் கொள்ளலாம். 


மூன்றாவது,  இந்தக் குறளில் "உளவாயின்" என்ற சொல் எஞ்சி நிற்கிறது என்கிறார் பரிமேலழகர்.  எப்படி என்றால் பொறாமை குணம் உள்ளவனுக்கு செல்வமும், நேர்மையான மனம் உள்ளவனுக்கு கெடுதலும் "உளவாயின், உண்டானால்" அது நினைக்கப்படும்  என்று கொள்ள வேண்டும். அதில் உளவாயின் என்ற சொல் மறைந்து நிற்கிறது என்கிறார். அப்படி எல்லாம் நடக்காது, ஒரு வேளை நடந்தால், அது நினைக்கப்படும். 


நான்காவது, "நினைக்கப்படும்" என்றால் யாரால் நினைக்கப்படும்? அறிவு உள்ளவனால்தான் சிந்திக்க முடியும். எனவே, அறிவுள்ள சான்றோரால் இது சிந்திக்கப்படும் என்கிறார். 


ஐந்தாவது, என்ன சிந்திப்பார்கள்? 


பொறாமை குணம் உள்ளவனிடம் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அதை அவன் பெரிதாக நினைக்க மாட்டான். தன்னைவிட மற்றவர்கள் அதிகம் வைத்து இருக்கிறார்களே என்று எண்ணியே பொறாமைப்பட்டுக் கொண்டு இருப்பான். அவன் செல்வதை அவனே பெரிதாக நினைக்காத போது, நீ ஏன் அவன் செல்வம் வைத்து இருக்கிறான், மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைக்கிறாய்?


அதே போல், பொறாமை இல்லாதவன், இருக்கிறதைக் கொண்டு சந்தோஷமாக இருப்பான். அவனுக்கு யார் மேலும் பொறாமை இல்லை. அவன், அவனுக்கு கிடைத்ததைக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறான். அவனே வருந்தாத போது நீ ஏன் அது கேடு என்று நினைக்கிறாய் என்று "நினைத்துப் பார்" என்கிறார். 


பொறாமை உள்ளவன் செல்வம் சேர்க்கலாம். அதை செல்வழிப்பானா? அதன் பலனை அனுபவிப்பானா? நாலு பேருக்கு கொடுத்து மகிழ்வானா? மாட்டான்.   மேலும் மேலும் வேண்டும் என்றே அலைந்து கொண்டிருப்பான்.  அந்த செல்வதால் அவனுக்கு ஒரு பலனும் இல்லை.  யோசித்துப் பார் என்கிறார். 


மாறாக, பொறாமை இல்லாதவன் தன் செல்வதை தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வான். யோசித்துப் பார். 


பொறாமை கொண்டவன், தன் அவசரத்தில் ஏதேதோ செய்து செல்வம் சேர்ப்பான். பல குருக்கு வழிகளில் சென்று செல்வம் சேர்ப்பான். அது நல்லதா? அது நன்மை பயக்குமா? 



பொறாமை குணம் உள்ளவனுக்கு நன்மையும், நல்லவனுக்கு தீமையும் வராதே. எப்படி வந்தது? சிந்தி. 


கெட்டவனுக்கு உள்ள ஆக்கம் ஒரு ஆக்கமா? சிந்தி. 


கெட்டவனின் ஆக்கமும், நல்லவனின் வறுமையும் ஒன்றா ? சிந்தி.


எது உயர்ந்தது, எது தாழ்ந்தது சிந்தி. 


இப்படி நிறைய சிந்திக்கலாம். 


வள்ளுவர் "நினைக்கப்படும்" என்று ஏன் சொன்னார் என்றால் 


உலகம் இப்படிதான் இருக்கிறது. நல்லவனுக்கு காலம் இல்லை. கெட்டவனுக்குத்தான்  காலம் என்று தீய காரியங்கள் செய்ய இறங்கி விடாதே. சிந்தித்துப்பார்.  அப்படி இருக்க வழி இல்லை. யோசி என்கிறார். 


துன்பம் எல்லாம் துன்பம் இல்லை. இன்பம் எல்லாம் இன்பம் இல்லை. 


பள்ளிக் கூடம் போகாமல் 'கட்' அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும், நாள் பூராவும் படிப்பதும்....எது இன்பம், எது துன்பம்? நினைக்கப்படும். 


இன்பமும், துன்பமும் நிரந்தரமா? மாறுமா?  நினைக்கப்படும். 


சிந்திக்காமல், தவறான முடிவை எடுத்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். 








நான்காவது, 






(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html


குறள்  எண் 167 :உய்த்துவிடும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html

)


No comments:

Post a Comment