வில்லி பாரதம் - விதியை வெல்லும் விரகு
ஏன் தமிழ் படிக்க வேண்டும்? இலக்கியம் ஏன் படிக்க வேண்டும்? மொழி சோறு போடுமா? வேலை வாங்கித் தருமா? தமிழ் படிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாக படித்தால் இன்னும் நாலு காசு சம்பாதிக்கலாமே என்று நினைக்கலாம்.
அது சரிதான். இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை.
ஆனால், பணம் மட்டும் போதுமா? வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதும் என்றால், இலக்கியம் வேண்டாம் என்று தள்ளி விடலாம். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடுமா?
அது புறம் இருக்கட்டும்.
நாம் நினைக்கிறோம், பணம் இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையையும் சரி செய்து விடலாம் என்று. பணத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்று.
அது சரியா?
வயது ஏற ஏற, பணத்தால் சாதிக்க முடியாத பலவற்றை நாம் அனுபவ பூர்வமாக அறிவோம்.
அப்போது என்ன செய்வது?
மிகப் பெரிய பிரச்சனை. பெரிய துக்கம். தாங்க முடியவில்லை. பெட்டி பெட்டியாக பணம் இருக்கிறது. ஒரு பலனும் இல்லை. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் நம் துக்கம் தீராது என்ற நிலைகள் வரும். அப்போது என்ன்ன செய்வது?
பணத்தால் சரி செய்ய முடியவில்லையே என்ற இயலாமை ஒரு புறம். இந்தப் பணத்தைச் சேர்க்கவா என் வாழ் நாள் எல்லாம் செலவழித்தேன். கடைசியில் இந்தப் பணத்தால் ஒரு பலனும் இல்லை. என் முயற்சிக்கு கிடைத்த பலன் இதுவா என்ற வெறுமை மறுபுறம்.
அந்த நிலை வரும் முன், மனதை பக்குவப்படுத்த வேண்டாமா? தயார் செய்து கொள்ள வேண்டாமா?
அதற்குத்தான் இலக்கியம்.
மகா பாரதத்தில் அபிமன்யு இறந்து கிடக்கிறான்.
அர்ஜுனன், தருமன், கண்ணன், பீமன் எல்லோருக்கும் முன்னால் வில்லிப்புத்துராழ்வார் அழது புலம்புகிரார். அவரால் அதை சகிக்க முடியவில்லை.
அபிமன்யு யார்?
அவனுடைய தந்தை உலகின் மிகப் பெரிய வீரன் அர்ஜுனன்.
அவன் மாமன், உலகைக் காக்கும் கண்ண பிரான்.
பெரியப்பா, மிகப் பெரிய பலசாலி பீமன்.
தாத்தா, தேவர்களின் அரசனான இந்திரன்.
அப்படிப்பட்ட அபிமன்யு அனாதையாக இறந்து கிடக்கிறான் என்றால் காரணம் என்ன. விதி. இத்தனை பேர் இருந்தும் அவனை காக்க முடியவில்லை என்றால் விதியை நம்புவதைத் தவிர வேறு என்ன செய்வது ?
பாடல்
மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை;
வானோர்க்கு எல்லாம்
நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம்
நண்பாய் வந்தோர்; சேயனாம்
அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை
வெவ்வேறு
ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும்
விரகு ஆர் வல்லாரே?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_22.html
(click the above link to continue reading)
மாயனாம் திருமாமன்= மாயங்களில் வல்லவன் மாமனாகிய கண்ணபிரான்
தனஞ்சயனாம் திருத்தாதை = வில் வீரத்தில் ஒப்பற்றவன் தந்தையாக அர்ஜுனன்
வானோர்க்கு எல்லாம் = தேவர்களுக்கு எல்லாம்
நாயனாம் = நாயகனாம், தலைவனாம்
பிதாமகன் = தாத்தாவாகிய இந்திரன்
மற்று = மேலும்
ஒரு கோடி = ஒரு கோடி பேர்கள்
நராதிபராம் = நர + அதிபராம் = மக்களின் அதிபர்கள், அரசர்கள்
நண்பாய் வந்தோர் = நண்பர்களாக உள்ளவர்கள்
சேயனாம் = பிள்ளையாம்
அபிமனுவாம் = அபிமன்யு
செயத்திரதன் = ஜெயந்திரன் என்ற அரசனின்
கைப்படுவான்! = கையால் இறந்தான்
செயற்கை வெவ்வேறு = வேறு வேறு விதமாக நடக்கும் செயல்கள் எல்லாம்
ஆய நாள் = அன்றில் இருந்து
அவனிதலத்து = இந்த உலகில்
அவ் விதியை வெல்லும் = அந்த விதியை வெல்லும்
விரகு = வழி
ஆர் வல்லாரே? = யாரிடம் இருக்கிறது ? யாரிடமும் இல்லை
இவ்வளவு இருந்தும், அபிமன்யுவை காக்க முடியவில்லை.
கடவுளான கண்ணனால் கூட முடியவில்லை. கண்ணன் நினைத்து இருந்தால் காத்திருக்கலாம்.
விதி.
விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, தெரியாது.
சில சமயம், தாங்க முடியாத துக்கம் வரும் போது, மனதுக்கு ஒரே மருந்து விதியை நம்புவதுதான். இல்லை என்றால் எப்படி மனச் சமாதனம் அடைய முடியும்.
விதி என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிடுவது எளிது.
பெரிய துக்கதில் இருக்கும் ஒருவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான் என்றால், அதை பறிப்பானேன் ?
நம் இலக்கியம் முழுவதிலும் விதி அழுத்தமாக நம்பப் படுகிறது.
இலக்கியம் படித்துப் பழகிவிட்டால் வாழ்வில் வரும் துன்பங்களை பொறுத்து, சகித்து, அதைத் தாண்டி மேலே வர முடியும்.
இல்லை என்றால் மன அழுத்தம், மன நோய், மருந்து, மாத்திரை என்று துன்பப் பட வேண்டிவரும்.
இலக்கியம் துன்பத்தை ஆற்றும். மனதைத் தேற்றும். மன வலிக்கு மருந்து போடும். சாய்ந்து கொள்ள தோள் தரும். கண்ணீர் துடைக்கும்.
அருமையான விளக்கம்.விதியை பற்றியது என்றாலே விரக்தி சோகம் வருத்தம் துயரம்போன்ற உணர்ச்சிகளுடன் படித்தாலும் அதையும் மீறி தமிழ்சுவையை உணர செய்யும் பாங்கு அருமை ..... ஈரோடு பா.சிதம்பரம்
ReplyDeleteமிகவும் அற்புதம் ஐயா.
ReplyDeleteதாங்களது தொகிற்பினை தொடர்ந்து படித்து பிறருக்கு உதவும் வகையில் பகிர்ந்தும் வருகிறேன்.
குருவே உபதேசிப்பதாக உள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏
வடிவேல் சண்முகம்
பசுபதீஸ்வரர் ஆலயம்
வ.கோவில்பட்டி
சாணார்பாட்டி ஒன்றியம்
திண்டுக்கல் கிழக்கு.