Pages

Thursday, January 26, 2023

கம்ப இராமாயணம் - நினைக்கும்தோறும் திடுக்கிடும்

கம்ப இராமாயணம் - நினைக்கும்தோறும் திடுக்கிடும் 


வீடணன் அடைக்கலம் அடைந்து விட்டான். அவனிடம் இராவணனின் படை பலம், துணை பலம் என்று எல்லாவற்றையும் இராமன் கேட்டு அறிந்து கொள்கிறான். இலங்கைக்குப் போக சேது பந்தனம் அமைக்கச் சொல்கிறான். 


இராமன் என்ன செய்கிறான் என்று அறிந்து வர இராவணன் ஒற்றர்களை அனுப்புகிறான். 


அந்த ஒற்றர்களை வீடணன் அடையாளம் கண்டு சொல்லி விடுகிறான். வானரங்கள் அந்த ஒற்றர்களை "கவனிக்கிறார்கள்". இராமன் அவர்களை விசாரித்து பின் அவர்களை விட்டு விடுகிறான். 


அவர்கள் இராவணனிடம் போகிறார்கள். 


அவர்கள் வந்து சொன்னதை கம்பன் சொல்லும் அழகு இருக்கிறதே, அடடா. 


"ஒற்றர்கள் உள்ளே வருகிறார்கள். வந்து இராவணனின் பாதங்களை வணங்குகிறார்கள்.  பனை மரம் போன்ற வலுவான கைகளைக் கொண்ட வானரங்களை நினைத்துப் பார்க்கிறார்கள். நினைக்கும் போதெலாம் அவர்கள் மனம் திடுக்கிடுகிறது. கொஞ்சம் செருமிக் கொள்கிறார்கள். இருமல் வருகிறது. இருமினால் இரத்தம் வருகிறது"


எந்த அளவுக்கு பயந்திருப்பார்கள் !


பாடல் 


மனைக்கண் வந்து, அவன் பாதம் வணங்கினார் - 

பனைக் கை வன் குரங்கின் படர் சேனையை 

நினைக்கும்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார், 

கனைக்கும் தோறும் உதிரங்கள் கக்குவார்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_26.html


(Please click the above link to continue reading)


மனைக்கண் வந்து = இராவணன் இருக்கும் இடத்துக்கு (ஒற்றர்கள்) வந்து  


அவன் பாதம் வணங்கினார் = அவனை வணங்கி 


பனைக் கை = பனை மரம் போல பருத்த, உறுதியான கைகளைக் கொண்ட 


வன் குரங்கின் = வலிமையான குரங்குகளின் 


படர் சேனையை  = பெரிய சேனையை 


நினைக்கும்தோறும் = மனதில் நினைத்து பார்க்கும் போதெல்லாம் 


திடுக்கிடும் நெஞ்சினார்,  = திடுக்கிடும் மனதினை உடையவராய் 


கனைக்கும் தோறும் = இருமும் பொழுதெல்லாம்  


உதிரங்கள் கக்குவார் = இரத்தம் கக்கினார்கள் 


இன்று சினிமா படம் எடுக்கும் போது கதை, திரைக் கதை என்று இரண்டு சொல்லுவார்கள். 


இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


கதாநாயகன் பெரிய பணக்காரன். அவனிடம் நிறைய சொத்து இருக்கிறது. அவனுக்கு கீழே பலர் வேலை செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு போவது கதை. 


கதாநாயகன் கப்பல் போல ஒரு பெரிய காரில் வந்து இறங்குகிறான். அவனுக்கு ஒருவன் கார் கதவை திறந்து விடுகிறான். அவன் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைகிறான். அவனுக்கு ஒருவன் கதவு திறந்து விடுகிறான். 


ஒரு வார்த்தை சொல்லவில்லை.  நமக்கு புரிந்து விடுகிறது கதாநயாகன் பெரிய பணக்காரன் என்று. அது திரைக் கதை. திரையில் பார்த்து கதையைப் புரிந்து கொள்ள வைப்பது. 


இங்கே கம்பன் திரைக் கதை வடிக்கிறான். 


ஒற்றர்கள் ஒன்றும் சொல்லவில்லை. 


நடுங்கிறார்கள், இருமினால் இரத்தம் தெறிக்கிறது. அவ்வளவுதான். 


அதில் இருந்து அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். அங்கே என்ன நடந்திருக்கும் என்று அந்த அவையில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள முடியும் அல்லவா?


அது தான் கம்பன். 





No comments:

Post a Comment