திருக்குறள் - பயனில சொல்லாமை - ஒரு முன்னுரை
திருக்குறளின் நோக்கம் நம்மை வீடு பேறு அடையச் செய்வது. அதற்கு வழி அறம், பொருள், இன்பம் என்பவை.
அதில் அறம்தான் நம்மை வீடு பேறு நோக்கி அழைத்துச் செல்லும்.
அந்த அறத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார்கள்.
இல்லறம், துறவறம் என்று.
இல்லறத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி துறவு நோக்கிப் போக வேண்டும். துறவு, வீடு பேற்றை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.
சரி, இந்த அறம் அறம் என்றால் என்ன?
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html
(please click the above link to continue reading)
பரிமேலழகர் அதை ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார்.
"விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும்" என்று.
எது நமது அற நூல்களில் சொல்லப் பட்டு இருக்கிறதோ அதை செய்ய வேண்டும். விதித்தன செய்தல் என்றால் அது.
எதெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறதோ, அவற்றைச் செய்யக் கூடாது. அது விலக்கியன ஒழித்தல்.
இல்லறம் செய்ய பொருள் வேண்டும். எனவே அதற்கு துணை செய்ய பொருள் அதிகாரத்தை கூறினார். வெறும் பொருளும் அறமும் என்று இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. எனவே, இன்பம் என்ற அதிகாரத்தை வைத்தார்.
கணவன், மனைவி, பிள்ளைகள், உறவு, நட்பு, சமுதாயம் என்று அன்பு விரிந்து கொண்டே போய், அது அருளாக மாறும். அன்பு அருளாகும்போது அது துறவு நிலைக்கு நம்மை கொண்டு செல்லும்.
இல்லறத்தில் இருக்கும் ஒருவன் செய்ய வேண்டியன சில உண்டு. விலக்க வேண்டியன சில உண்டு.
அதில் விலக்க வேண்டியவை மனம், மொழி, மெய்யால் செய்யும் குற்றங்களை விலக்க வேண்டும்.
சொல்லால் ஏற்படும் குற்றங்கள் நான்கு வகைப்படும்.
பொய், குறளை, கடும் சொல், பயனில சொல்லாமை.
இதில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் அற்புதமானது.
இல்லறத்தில் பொய் பற்றிச் சொல்லவில்லை. காரணம், இல்லறத்தில் இருப்பவன் முழுவதுமாக பொய்யை விலக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சம் பொய் சொல்லத்தான் வேண்டியிருக்கும். துறவிக்கு பொய் தவிர்க்க வேண்டிய ஒன்று.
எனவே இல்லறத்தில் பொய் பற்றி சொல்லவில்லை என்கிறார்.
இதில், கடும் சொல் பற்றி இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் கூறினார்.
குறளை என்றால் புறம் சொல்லுதல். அது பற்றிய முந்தைய அதிகாரத்தில் கூறினார்.
எனவே மிஞ்சி இருக்கும் பயனில சொல்லாமை பற்றி இங்கே கூறுகிறார்.
நன்றாக யோசித்துப் பாருங்கள். இல்லறத்துக்குள் உள்ளது பயனில சொல்லாமை என்ற அதிகாரம். அப்படி என்றால் பயனில சொல்லாமையும் ஒரு அறம்.
தேவை இல்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு அறமாகக் கொண்டு இருந்தார்கள். எவ்வளவு பெரிய பாரம்பரியத்தில் இருந்து நாம் வந்து இருக்கிறோம். நம் கலாசார உயர்வு என்பது எவ்வளவு சிறந்தது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பயனில சொல்லுதல் என்றால் என்ன என்று பரிமேலழகர் விளக்குகிறார்.
ஒரு சொல் சொன்னால் அது தனக்கோ அல்லது பிறருக்கோ அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் ஏதாவது ஒரு பயனையாவது தர வேண்டும். இல்லை என்றால் அது பயனில சொல் என்கிறார்.
யாருக்கும் ஒரு பயனும் இல்லை என்றால், எதற்குப் பேச வேண்டும்?
Awesome work!
ReplyDeleteArumai
ReplyDelete