Pages

Saturday, February 25, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - எல்லாரும் எள்ளப் படும்

 

திருக்குறள் - பயனில சொல்லாமை - எல்லாரும் எள்ளப் படும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


நாம் பேசுவதை நாலு பேர் கேட்கிறார்கள். நாம் whatsapp போன்ற சமூக ஊடகங்களில் அனுப்பும் செய்திகளை பலர் படிக்கிறார்கள். 


படிப்பது மட்டும் அல்ல, நன்றாக இருக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றால் ஒரு புன்சிரிப்பு காட்டும் படங்களைப் (emoji ) போட்டு அங்கீகரிக்கிறார்கள். நமக்கு அதில் ஒரு இன்பம். அட, நாம் சொல்வதைக் கேட்டு அதை பாராட்டவும் ஆள் இருக்கிறதே என்று நாம் மகிழ்ந்து மேலும் அவற்றைச் செய்கிறோம். 


ஒவ்வொரு குழுவிலும் இப்படி சிலர் இருப்பார்கள். 


முன்பெல்லாம் மேடைப் பேச்சு என்று இருந்தது இப்போது வலை தளங்களுக்கு மாறி விட்டது. 


பாராட்டுகிறார்களே. கேட்கிறார்களே. சொன்னால் என்ன தவறு. இரசிக்க நாலு பேர் இருந்தால், சொல்லலாமே என்று நாம் நினைக்கலாம். 


அதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?


பாடல் 


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


(please click the above link to continue reading)



பல்லார் = பலர், பல பேர் 


முனியப்  = கோபப் படும்படி, வெறுக்கும் படி 


பயனில சொல்லுவான் = பயனிலாத சொற்களை சொல்லுபவன் 


எல்லாரும் = அனைவராலும் 


எள்ளப் படும் = தூற்றப் படுவான் 


நாம் பொருள் சொன்னால் இப்படித்தான் சொல்லுவோம். 


பரிமேலழகர் மிக நுணுக்கமாக பொருள் சொல்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இப்படி சிந்திக்கக் கூட முடியுமா என்பது சந்தேகமே. 


இங்கே பல்லார், எல்லார் என்று இரண்டு சொற்கள் வருகின்றன. பல பேர், எல்லோரும் என்பது ஏறக்குறைய ஒரே பொருள் மாதிரித்தான் தெரிகிறது. 


பரிமேலழகர் சொல்கிறார். 


பல்லார் என்று முதலில் வருவது அறிவு உடையவர்கள், அறிஞர்கள் என்று. 


ஏன் அப்படிச் சொல்கிறார்?  பல்லார் என்பதற்கு அறிஞர் என்று எப்படி பொருள் சொல்ல முடியும்?


அதற்கு அடுத்த வார்த்தை "முனிய" என்று வருகிறது. 


யார் ஒரு சொல்லைக் கேட்டு வெறுப்பும், கோபமும் அடைவார்கள்? யார் சொல்லின் பலனை அறிந்தவர்களோ, யார் சொல்லின் தன்மை அறிந்தவர்களோ அவர்கள்தான் தவறான, பலன் இல்லாத சொற்களை கேட்கும் போது வெறுப்பு அடைவார்கள். 


அப்படிப்பட்டவர்கள் யார் என்றால் அறிவு உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் பயனுள்ள சொற்களுக்கும், பயன் இல்லாத சொற்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். 


அறிவு இல்லாதாவர்கள், எதையும் கேட்டு பாராட்டுவார்கள். whatsapp குழுவில் வரும் குப்பைகளை பாராட்டுவது போல. 


பின்னால் வரும் "எல்லார்" என்பது எல்லோரையும் குறிக்கும். ஏன்? இங்கே மட்டும் எல்லோரையும் குறிக்கிறார்? 


அறிவு உள்ளவர்கள் வெறுத்தால், அதைக் கண்டு எல்லோரும் வெறுப்பார்கள் என்கிறார். 


காரணம் என்ன?


அறிவு உள்ளவன் ஏதோ ஒரு காரணம் பற்றி ஒரு பயனில்லாத சொல்லை வெறுக்கிறான் என்றால் அவனுக்குத் தெரிந்து இருக்கிறது. எனவே வெறுக்கிறான். அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று நினைத்து மற்றவர்களும் வெறுப்பார்கள் என்கிறார். 


எனவே, நாம் சொல்வதை அறிவு உள்ளவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் பாராட்ட வேண்டும். நல்லவர்களிடம், உயர்ந்தவர்களிடம் பாராட்டு வாங்க வேண்டும். 


அவர்கள் வெறுக்கும்படி பேசினால், நாளடைவில் உலகம் நம்மை வெறுக்கும் என்கிறார். 


எவ்வளவு நுட்பமான உரை. 


அது மட்டும் அல்ல, நல்லவர்கள் யாரை பாராட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அப்படி பாராட்டப் படுபவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும். அது நமக்கு பயனுள்ள சொல்லாக அமையும். 


அவர்கள் பாராட்டாவிட்டால், அதை நாம் கேட்க்க வேண்டியது இல்லை. அவற்றால் நமக்கு ஒரு பயனும் விளையாது. 


அறிஞர்கள் பாராட்ட வேண்டும் என்றால் நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும். படிக்க வேண்டும். அறிவை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். சொற்களை தேர்ந்து எடுத்துப் பேச வேண்டும். 


அப்படி உழைக்கும் நேரத்தில், நாம் பேசுவது குறையும். படிக்க படிக்க நம் அறியாமை விளங்கும். நல்லவேளை இதெல்லாம் தெரியாமல் பேச இருந்தேனே என்று நம் மீதே நமக்கு ஒரு எண்ணம் பிறக்கும். 


இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்ற மலைப்பு வரும். 


அறிவை ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணியதாகவும் செய்து கொண்டு பின் பேசினால், நம் பேச்சை அறிவுலகம் மதிக்கும். அறிவுலகம் மதித்தால் உலகம் மதிக்கும். 


இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறார்.


அடுத்தமுறை பூஜை செய்யும் போது வள்ளுவருக்கு ஒரு பூ. பரிமேலழகருக்கு ஒரு பூ.







(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html





2 comments: