கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - அழகிற்றே யாகும்
(அங்கதன் தூதின் முந்தைய பதிவுகளின் வலை தளளங்களின் முகவரிகளை இந்தப் பதிவின் இறுதியில் காணலாம்)
இராவணனிடம் சீதையை விட்டு விடும்படி தூது அனுப்பலாம் என்று இராமன் நினைத்து தன் கருத்தைச் சொல்கிறான். அவனுடன் இருக்கும் மற்றவர்கள் கருத்துகளை கேட்கிறான். ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.
வீடணன் சொல்லுவான், "தூது அனுப்புவதுதான் அழகான செயல்" என்று
சுக்ரீவன் சொல்லுவான் "தூது அனுப்புவதுதான் அரச தர்மம்" என்று
பின் இலக்குவன் நீண்ட உரை ஆற்றுகிறான்.
"இராவணன் மேல் இரக்கம் காட்டுவது தவறு. அவனுக்கு அம்பால் தான் பதில் சொல்ல வேண்டுமே அல்லால் சொல்லால் (தூதின் மூலம்) சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை" என்று.
பாடல்
அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,
‘அழகிற்றே யாகும் ‘என்றான்;
குரங்கு இனத்து இறைவன் நின்றான்,
‘கொற்றவற்கு உற்றது ‘என்றான்;
‘இரக்கமது இழுக்கம் ‘என்றான்,
இளையவன்; ‘இனி, நாம் அம்பு
துரக்குவது அல்லால், வேறு ஓர்
சொல் உண்டோ? ‘என்னச் சொன்னான்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_7.html
(pl click the above link to continue reading)
அரக்கர் கோன் = வீடணன்
அதனைக் கேட்டான்= தூது அனுப்பலாம் என்று இராமன் சொன்னதைக் கேட்டான்
‘அழகிற்றே யாகும் ‘என்றான் = அதுதான் சிறந்தது என்றான்
குரங்கு இனத்து = குரங்கு இனத்தின்
இறைவன் = தலைவனான சுக்ரீவன்
நின்றான்= எழுந்து நின்று
‘கொற்றவற்கு உற்றது ‘ = அரசர்களுக்கு உரியது. அதாவது அரச தர்மம்
என்றான் = என்று கூறினான்
‘இரக்கமது இழுக்கம் ‘என்றான் = இராவணன் மேல் இரக்கம் காட்டுவது குற்றம் என்றான்
இளையவன்; = இராமனுக்கு இளையவனான இலக்குவன்
‘இனி = இனிமேல்
நாம் = நாம்
அம்பு துரக்குவது அல்லால் = அம்பை விடுவதைத் தவிர
வேறு ஓர் = வேறு ஒரு
சொல் உண்டோ? = சொல்வதற்கு ஒன்று இருக்கிறதா ?
‘என்னச் சொன்னான் = என்று சொன்னான்
இங்கே ஒரு சில பாடங்களை கம்பன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான்.
முதலாவது, இராமன் பெரிய வீரன். நன்கு படித்து அறிந்தவன். அவனால் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியும்.. இருந்தும், மற்றவர்கள் கருத்துகளைக் கேட்கிறான். வீட்டிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி நான் தான் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும், நான் யாரையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்து செயல்படக் கூடாது.
மனைவியிடம், கணவனிடம், கீழே வேலை செய்பவர்களிடம் கலந்து பேசி முடிவு செய்வது சிறந்தது.
இரண்டாவது, எந்த சூழ்நிலையிலும், இதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கக் கூடாது. அவ்வளவுதான், என் வாழ்க்கை பாழ், இனி செய்வதற்கு என்ன இருக்கிறது, எல்லாம் முடிந்து போய் விட்டது என்று ஒருக்காலும் நினைக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல் படும் வாய்ப்புகள் இருக்கும். தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
இலக்குவன் சொல்கிறான், "வேறு வழி இல்லை. சண்டை ஒன்றுதான் ஒரே வழி" என்கிறான். அதே தவறை இராவணனும் செய்தான். அது வேறு விடயம். அதை பின்னால் பார்க்க இருக்கிறோம்.
வீடணனும், சுக்ரீவனும் சண்டை ஒரு வழி. தூது இன்னொரு வழி என்று நினைக்கிறார்கள்.
எந்த சிக்கலில், எந்த துக்கத்திலும் இருந்து வெளிவர இந்த சிந்தனை உதவும்.
இப்படி கிடந்து துன்பப் பட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்
You have no control over what happens to you but you have absolute control over how you react to what happens to you
[ ஒரு முன்னோட்டம்
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_29.html
கருணையின் நிலையம் அன்னான்
]
No comments:
Post a Comment