Pages

Friday, June 23, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை

 திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை 


நமக்கு தீமை செய்பவர்களுக்கு, பதிலுக்கு தீமை செய்யாமல் விட்டு விடுவது அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


அவருக்கு என்ன எளிதா சொல்லிவிட்டுப் போய் விடுவார். இதெல்லாம் முடிகிற காரியமா? நமக்கு தீமை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில் கொடுக்காவிட்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு தீமை செய்து கொண்டே இருக்க மாட்டார்களா?  இது என்ன அறிவுரை ? என்று நாம் நினைப்போம். பரிமேலழகர் இல்லாவிட்டால் 


பாடல் 


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_23.html


(pl click the above link to continue reading)


அறிவினுள் = நன்மை தருகின்ற அறிவினுள் 


எல்லாம் = அனைத்திலும் 


தலை = உயர்ந்தது, சிறந்தது 


என்ப = என்று சொல்லுவார்கள் 


தீய செறுவார்க்கும்  = (நமக்கு) தீமை செய்தவர்களுக்கும் 


செய்யா விடல் = (பதிலுக்கு) தீமை செய்யாமல் விட்டு விடுதல் 


சரி, அப்படி என்னதான் பரிமேலழகர் சொல்லி இருப்பார்?


தீமை செய்தால் தீமை விளையும், நன்மை செய்தால் நன்மை விளையும் என்பதில் சந்தேகம் இல்லையே?  


ஒருவன் நமக்கு தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? அவன் முதலில் செய்தான், நாம் இரண்டாவது செய்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம்? இருவர் செய்ததும் தீமைதான். ஒருவர் முதலில் செய்தார், மற்றவர் இரண்டாவது செய்தார்.  எனவே இருவருக்கும் செய்த தீமைக்கும் பலன் கிடைக்கும்தானே. 


அது மட்டும் அல்ல. 


ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான். அது நமக்கு நிகழும் முதல் தீமை. நாம் பதிலுக்கு அவனுக்கு ஏதோ ஒரு தீமை செய்கிறோம். அப்படி நாம் தீமை செய்தால், அந்த தீமைக்கு நமக்கு பின்னாளில் வேறு ஒரு தீமை வரும். அது நமக்கு இரண்டாவது நிகழும் தீமை. அது புத்திசாலித்தனமா?


சின்ன உதாரணம். 


ஒருவன் நம்மை ஏதோ தவறான சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாம் பேசாமல் போய் இருந்தால் அதோடு போய் இருக்கும். அதெப்படி சும்மா விடுவது என்று பதிலுக்கு நாம் அவனை திட்டினால், அவன் நம்மை மேலும் பல வார்த்தைகள் சொல்லித் திட்டலாம். முதலில் ஒரு தரம் திட்டு வாங்கினோம், பின் இரண்டாவது முறை திட்டு வாங்குகிறோம். அது புத்திசாலித்தனமா? 


எனவே, வள்ளுவர் செய்கிறார், நாம் பதிலுக்கு தீமை செய்தால் நமக்கு மீண்டும் தீமை வரும் என்று "அறிந்து" பதிலுக்கு தீமை செய்யாமல் விடுதல் அறிவினுள் எல்லாம் உயர்ந்த அறிவு என்றார். 


இது எளிதில் புரியாது. அடியும் வாங்கிக் கொண்டு, சும்மா இருப்பது நல்லது என்று அறிந்து கொள்ளும் அறிவு எளிதில் வராது. அடித்தால் திருப்பி அடிக்கத் தான் தோன்றும். அதை விடுத்து, தீங்கு செய்தார்க்கும் தீமை செய்யாமல் விடுதல் ஏதோ அவனுக்கு செய்த நன்மை அல்ல, அது நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை என்ற அறிவு இருக்கிறதே,  அது எல்லாவற்றிலும் உயர்ந்த அறிவு என்கிறார். 


"தலை என்ப" என்றால் தலை சிறந்தது என்று சொல்லுவார்கள் என்று அர்த்தம். யார் சொல்லுவார்கள்?  அறிவுள்ள சான்றோர்கள் சொல்லுவார்கள். அறிவில்லாதவர்கள் என்ன சொல்லுவார்கள்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்று கொந்தளிப்பார்கள். அறிவுடையார் சொல்லக் கேட்டு நடப்பது சிறந்த அறிவு. 


"அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்"


 என்பதில் ஒரு சின்ன இலக்கண நுணுக்கம் இருக்கிறது. 


அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது இன்னொரு அறிவாகத்தானே இருக்க முடியும்?  குத்து சண்டை வீரர்களில் தலை சிறந்தவர் என்றால் முகமது அலி, டைசன் என்று ஒரு குத்து சண்டை வீரரைத்தானே சொல்ல முடியும். அது போல அறிவில் எல்லாம் சிறந்தது என்றால் அது ஒருவிதமான அறிவாகத்தானே இருக்க முடியும்? ஆனால், குறளில் அப்படி ஒரு அறிவு பற்றி சொல்லவில்லையே என்றால் "செய்யா விடல்" என்பதில் செய்யாமல் இருப்பது சிறந்த அறிவு அல்ல, செய்யாமல் இருக்க வேண்டும் என்று அறிகிறோம் அல்லவா, அந்த அறிவு மற்றவை எல்லாவற்றையும் விட சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர். 


எவ்வளவு நுணுக்கமாக எழுதி இருக்கிறார் வள்ளுவர், அதை எப்படி படித்து, அறிந்து சொல்லி இருக்கிறார் பரிமேலழகர்.


யார் மேலாவது கோபம் வந்தால், அவர்களுக்கு எப்படியாவது ஒரு தீமை செய்யவேண்டும் என்று தோன்றினால், இந்தக் குறளை ஒரு முறை நினைத்துக் கொள்ள வேண்டும். 




No comments:

Post a Comment