Pages

Wednesday, July 5, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - கனலும், நீரும், குருதியும்

 கம்ப இராமாயணம்  - அங்கதன் புலம்பல் -  கனலும், நீரும், குருதியும் 


ஆண்களால் உணர்சிகளை எளிதில் வெளிக் காட்ட முடிவதில்லை. ஆரம்பம் முதலே ஒரு மாதிரியாக முரட்டுத் தனமாக வளர்ந்து விடுகிறார்கள். வேட்டையாடி, போர் செய்து, அந்தக் குணம் படிந்து போய் விட்டது போலும். 


அதிலும், குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு ரொம்பவும் சிக்கலானது என்றே தோன்றுகிறது. தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு மிக மிக மென்மையானது. இனிமையானது. அதே தந்தை மகன் என்று வரும்போது ஒரு கடுமை காட்டுவதும், உள்ளுக்குள் உருகுவதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். 


உங்கள் தனி வாழ்வில் உங்கள் அனுபவம் வேறு மாதிரி இருக்கலாம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாலி இறந்து கிடக்கிறான். 


வாலியின் மகன் அங்கதன் வந்து வாலியின் மேல் விழுந்து புலம்புகிறான். 


ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். இரு புறம் தந்தையை மற்றவர்கள் கொன்று விட்டார்களே என்ற கோபம். இன்னொரு புறம் தந்தையின் வீரத்தின் மேல் உள்ள பெருமிதம். இன்னொரு புறம் போய் விட்டானே என்ற வெறுமை/ஏமாற்றம். 


அத்தனை உணர்வுகளையும் தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கிறான் கம்பன். 



பாடல் 


கண்ட கண்  கனலும் நீரும்

      குருதியும் கால, மாலை,

குண்டலம் அலம்புகின்ற குவவுத்

      தோள் குரிசில், திங்கள்

மண்டலம் உலகில் வந்து கிடந்தது;

      அம் மதியின் மீதா

விண்தலம் தன்னின் நின்று ஓர்

      மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான்.


பொருள் 


(please click the above link to continue reading)


கண்ட கண் = வாலியைக் கண்ட அங்கதன் கண்கள் 


கனலும் = நெருப்பையும் (கோபத்தால்) 


நீரும் = கண்ணீரும் (துக்கத்தால்) 

 

குருதியும் = இரத்தமும் (எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற ஆங்காரமும்) 


கால = வழிய 


மாலை = கழுத்தில் அணிந்த மலர் மாலை 


குண்டலம் = காதில் அணிந்த குண்டலம் 


அலம்புகின்ற = அசைந்து, தழுவி, புரளிகின்ற 


குவவுத் = பெரிய 


தோள்  = தோள்களை உடைய 


குரிசில் = ஆண்மகன் 


திங்கள் மண்டலம் = ஒளி பொருந்திய நிலவு 


உலகில் வந்து கிடந்தது = தரையில் விழுந்து கிடக்க 


அம் மதியின் மீதா = அந்த நிலவின் மீது 


விண்தலம்  தன்னின் நின்று = விண்ணில் இருந்து 


   ஓர் = ஒரு 


மீன் = விண்மீன், நட்சதிரம் 


விழுந்தென்ன = விழுந்தது போல 


வீழ்ந்தான் = விழுந்தான் 


ஆற்றல் மிக்க தகப்பன். அன்பு கொண்ட மகன். அகால மரணம். 


உணர்வுகளின் உச்சம். கம்பனின் கவிதை அந்த உணர்வுக் கொந்தளிப்பை கொஞ்சம் கூட குறைக்காமல் நம் மனதில் பதியும்படி செய்கிறது. 


மற்ற கவிதைகளையும் பார்ப்போம். 



No comments:

Post a Comment