Pages

Tuesday, August 15, 2023

கந்தரனுபூதி - பாழ் வாழ்வு

 கந்தரனுபூதி - பாழ் வாழ்வு 


நமக்கு கிடைத்த இந்த வாழ்வு எவ்வளவு உயர்ந்தது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போம்.


ஆரோக்கியமான உடல், படிப்பு, செல்வம், குழந்தைகள், அமைதியான நாடு, ஒரு சில துன்பங்கள், சிக்கல்கள் இருந்தாலும், பெரும்பாலும் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. 


எத்தனையோ குறைகள், துன்பங்கள் வந்து இருக்கலாம். உடல் ஊனத்தோடு பிறந்து இருக்கலாம். சண்டை சச்சரவு நிறைந்த ஒரு நாட்டில் பிறந்து அகதியாக ஓட வேண்டி இருந்திருக்கலாம். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சியில் அகப்பட்டு இருக்கலாம், வாழ தகுதியில்லாத தட்ப வெப்பம் உள்ள நாட்டில் பிறந்து அவதிப் பட்டு இருக்கலாம். 


இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு கிடைத்து இருக்கிறது. 


நாம் அவ்வளவு நல்லவர்களா?  இதற்கு முன்னால் நாம் நல்லவர்களாக இருந்து இருப்போமா? வாய்ப்பு குறைவு. 


இருந்தும் நமக்கு இவ்வளவு நல்லது கிடைத்து இருக்கிறது. 


இப்போது என்ன செய்ய வேண்டும். இந்தப் பிறவியை பயன்படுத்தி, நல்லது செய்து இனி வரும் பிறவிகளில் துன்பம் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் அல்லவா?


இவ்வளவு இருந்தும், இந்த மாயை என்பது பிடிபட மாட்டேன் என்கிறது. எது சரி, எது தவறு, எது நிரந்தரம், எது அநித்தியம் என்று புரிவதில்லை.


இந்த அருமையான வாழ்வை சரி தவறு தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். காரணம் - அறியாமை. 


அதற்கு காரணம் முன் வினை. விதி. 


நாம் முன்பு செய்த பாவங்கள். 


அருணகிரி புலம்புகிறார் 


"இந்த பாழான வாழ்வை உண்மை என்று நம்பி மாயையில் கிடந்து உழலும் படி என்னை செய்து விட்டாயே. காரணம், நான் முன் செய்த வினைகளோ ? மாயையில் கிடந்து உழலும்படி செய்தாலும், இந்த அறிவைக் கொடுத்தாயே, நீ வாழ்க"  என்று. 


பாடல் 


பாழ் வாழ்வெனு மிப்படு மாயையிலே 

வீழ் வாயென என்னை விதித்தனையே 

தாழ் வானவை செய்தன தாமுளவோ 

வாழ் வாயினி நீ மயில் வாகனனே . 


சீர் பிரித்த பின் 


பாழ் வாழ்வு எனும் இப் படு மாயையிலே 

வீழ்வாய் என  என்னை விதித்தனையே 

தாழ்வானவை செய்தன தாம் உளவோ 

வாழ்வாய் இனி  நீ மயில் வாகனனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)


பாழ் வாழ்வு = பாழான வாழக்கை 


எனும் = என்று சொல்லப்படும் 


இப் = இந்த 


படு மாயையிலே = பெரிய மாயையில் 


வீழ்வாய் என = நீ விழுந்து கிடப்பாய் என்று 


என்னை = என்னை 


விதித்தனையே  = விதியின் பலனாய் விட்டாய் 

 

தாழ்வானவை = தவறானவற்றை 


செய்தன தாம் = நான் செய்தது 


 உளவோ = இருக்குமோ 

 

வாழ்வாய் = வாழ்வாயாக 


இனி  நீ மயில் வாகனனே = இனி மயில் மேல் வருபவனே 


நான் பல வினைகள் செய்து இருக்கலாம். அதனால் இந்த பாழான வாழ்வை இனிமையானது என்று நம்பி அதில் விழுந்து கிடக்கிறேன். இருந்தும், இது பாழானது என்று அறியும் அறிவை நீ கொடுத்தாய். எனவே, இதில் இருந்து வெளிவர நான் முயற்சி செய்வேன். அந்த ஞானத்தை கொடுத்த முருகா, மயில் வாகனனே, நீ வாழ்க என்கிறார். 


அநுபூதி பெற்ற பின் பாடிய பாடல். அவருக்கு அந்த ஞானம் கிட்டியது. 


நமக்கும் கிட்டட்டும்.




 


2 comments:

  1. படித்தும், கேட்டும் , தெரிந்திருந்தும் மீள முடியவில்லை என்கிறபோது ஒருவித இயலாமை தான் பிடித்துக் கொள்கிறது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" இந்த மாயையில் இருந்து மீட்க வேண்டும்

    ReplyDelete
  2. முருகன், பரம் பொருள் ஆசிகள் வேண்டும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கு

    ReplyDelete