Pages

Monday, August 21, 2023

நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை

 நாலடியார் - நட்பிற் பிழைபொறுத்தல் - அவரின் கடை 


நட்பு கொண்ட ஒருவர் ஏதோ தவறு செய்து விட்டார் என்ற காரணத்துக்காக அவரை விட்டு விலக நினைக்கலாம். 


அப்படி நண்பரை விட்டு விலகுவதும் ஒரு தவறு தானே? அவர் தவறு செய்தார் என்று நாம் விலக நினைப்பது, நாம் தவறு செய்வதாக முடியும் அல்லவா?


அவர் செய்தது ஒரு தவறு. 


நாம் செய்ய இருப்பதோ பல தவறுகள். 


ஒன்று, பழகிய நண்பரை விட்டு விலக நினைப்பது. 


இரண்டாவது, பொறுமை இல்லாமை. தவறு செய்தவரை பொறுக்கும் தன்மை இல்லாதது ஒரு சிறுமைதான். 


மூன்றாவது, நாம் தவறு செய்கிறோம் என்று அறியாமல் அது சரி என்று நினைப்பது. 


அவர் செய்தது ஒன்று. நாம் செய்ய இருப்பது மூன்று. 


எனவே, அவரைவிட நாம் அதிகம் குறை பட்டாவர்கள் அல்லவா?


பாடல் 




இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! இன்னா செயினும்,

கலந்து பழி காணார், சான்றோர்; கலந்தபின்,

தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்-

தாமும், அவரின் கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_21.html



(pl click the above link to continue reading)



இலங்கு = விளங்கும், இருக்கும், 


நீர்த் = நீர் 


தண் = குளிர்ந்த 


சேர்ப்ப! = கரையை உடையவனே. குளிர்ந்த நீர் இருக்கும் கடற்கரைக்கு தலைவனே. 


இன்னா செயினும் = தவறானவற்றை செய்தாலும் 


கலந்து = நண்பரிடம் 


பழி காணார் = பழி காண மாட்டார்கள் 


சான்றோர் = பெரியோர் 


கலந்தபின் = நட்பு ஆன பின் 


தீமை = அவர் செய்த தீமைகளை 


எடுத்து உரைக்கும் = பிறரிடம் எடுத்து சொல்லும் 


திண் அறிவு இல்லாதார் = திடமான அறிவு இல்லாதவர்கள் 


தாமும் = அவர்களும் (தவறு கண்டு பிடிப்பவர்களும்)  


அவரின் கடை. = தவறு செய்தவர்களை விட குறை நிறைந்தவர்கள். கீழானவர்கள் 


நட்பு, உறவு என்றால் அப்படித்தான் இருக்கும். அதற்காக ஊரெல்லாம் போய் "அவன் எனக்கு இப்படி செய்து விட்டான்" என்று சொல்லிக் கொண்டு திரிவது அழகா? 




No comments:

Post a Comment