திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை
ஈகை என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் (definition) தருகிறார் முதலில்.
நம் வீட்டில் ஒரு பண்டிகை என்றால் சில பல பலகாரங்கள் செய்வோம். அண்டை அயல் வீடுகளுக்கும் கொடுப்போம்.
அது ஈகையா?
நாம் இன்று கொடுத்தால் அவர்கள் அடுத்த முறை அவர்கல் வீட்டில் ஒரு விசேடம் வரும் போது நமக்கு பலகாரங்கள் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அப்படி எல்லாம் இல்லை. அதுக்காக ஒன்றும் நான் தருவது இல்லை என்று வாதம் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் பலகாரம் அனுப்புகிறீர்கள். அடுத்த வீட்டுக்காரர் பெற்றுக் கொள்கிறார். ஒரு முறை கூட பதிலுக்கு செய்வது இல்லை என்றால் எத்தனை காலம் அனுப்புவீர்கள்?
அது போல் நம்மை விட பெரிய ஆள்களுக்கு விருந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு கல்யாணத்துக்கு போய் முறை செய்வது எல்லாம் அவர்களால் பின்னால் நமக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில்.
இன்றெல்லாம் திருமண வீடுகளில் மொய் எழுதுகிறார்கள். எதற்கு? பின்னால் திருப்பிச் செய்ய வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் அதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். இன்னார், இத்தனை பவுனில் நகை அன்பளிப்பாக அளித்தார் என்று. பின்னால் செய்ய வேண்டுமே.
இதெல்லாம் ஈகை இல்லை.
பின் எதுதான் ஈகை?
ஒன்றும் இல்லாத வறியவர்களுக்கு ஒரு பலனும் எதிர்பார்க்காமல் ஒன்று கொடுப்பதுதான் ஈகை.
பாடல்
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_14.html
(please click the above link to continue reading)
வறியார்க்கொன்று = வறியவர்களுக்கு ஒன்று
ஈவதே = கொடுப்பதே
ஈகை = ஈகை
மற்று எல்லாம் = மற்றவை எல்லாம்
குறிஎதிர்ப்பை = பிரதி பலனை எதிர்பார்த்து செய்யும்
நீரது உடைத்து. = தன்மை கொண்டது.
தெருவில் ஒரு பிச்சைகாரன் போகிறான். அவனுக்கு ஒரு பத்து உரூபாய் தருகிறோம். அது ஈகை. காரணம், அவன் பதிலுக்கு நமக்கு ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் தந்தது அல்ல என்பதால்.
இரண்டு விடயங்கள் சொல்கிறார்.
ஒன்று, வறியவனுக்கு கொடுக்க வேண்டும். உள்ளூர் அரசியல் பெரும் புள்ளிக்கு விருந்து கொடுத்தால் அது ஈகை அல்ல.
இரண்டாவது, எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும். வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு ஒரு பழைய ஆடையை கொடுக்கலாம். அது ஈகை அல்ல. காரணம், நாம் அவளுக்கு இதைச் செய்தால் அவள் நம்மிடம் விசுவாசமாக இருப்பாள், வேலையை விட்டு போய் விட மாட்டாள் என்ற நம்பிக்கையில் கொடுப்பது.
கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?
"நீரது" என்றால் என்ன? பொதுவாக நீர்மை என்றால் தன்மை. இயற்கை குணம். சரி, புரிகிறது. அது என்ன நீர் + அது?
பகுபத உறுப்பிலக்கணம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு சொல்லை பகுத்து, அதாவது பிரித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது.
ஒரு சொல் மூன்று பகுதிகளைக் கொண்டது.
பகுதி + இடைநிலை + விகுதி
பகுதி என்பது முதலில் வருவது. விகுதி எனபது கடைசியில் வருவது. இடைநிலை என்பது நடுவில் வருவது.
ஒரு வினைச்சொல்லில் (verb), பகுதி என்பது வினையைக் குறிக்கும், விகுதி என்பது யார் செய்தார்கள் என்பதைக் குறிக்கும். இடை நிலை என்பது காலத்தை குறிக்கும். அதாவது அது எப்போது நடந்தது என்று சொல்லும்.
ஒரே சொல்லில் மூன்றும் வரும்.
உதாரணமாக:
வந்தான் என்ற சொல்
வா + த் + த் + ஆன்
என்று பிரியும்.
வா என்ற பகுதி வருகின்ற செயலைக் குறிக்கும்.
இரண்டாவது வரும் த் என்பது சந்தி, அது ந் என திரிந்தது விகாரம். அது என்ன என்று இன்னொரு நாள் பார்ப்போம்.
அடுத்து வரும் த் காலம் காட்டும் இடை நிலை. அது இறந்த காலத்தைக் குறிக்கும்.
இறுதியில் வரும் ஆன் என்பது ஆண்பால், படர்கை, வினை முற்று விகுதி.
இங்கே, நீரது என்பது நீர்+ அது என்று பிரியும்.
நீர் என்றால் நீர்மை. அது என்ற விகுதி, தனியாக ஒரு பொருளைத் தராமல் பகுதியின் பொருளையே தந்தது என்கிறார் பரிமேலழகர்.
" 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி."
அதாவது, நீரது என்றால் (என்புழி) அது என்பது பகுதியான நீர்மையையே மீண்டும் குறிக்கும் விகுதி.
இது தேவையா?...:)
வேலை மெனக்கெட்டு ஒரு வார்த்தைக்கு இவ்வளவு விளக்கம். இலக்கணத்துக்கு அவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள்.
இலக்கணம் இல்லையெனில் மொழி இல்லை!
ReplyDeleteவறியார் யார்?
ReplyDeleteஇல்லாமல் இருப்பவர்.
எது இல்லாமல் இருப்பவர்?
இன்றியமையாப் பொருள் இல்லாமல் இருப்பவர்.