திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?
சேமித்த பணத்தை எங்கே முதலீடு செய்வது?
வங்கிக் கணக்கில் போடலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், நகை, நட்டு வாங்கிப் போடலாம், நிலத்தில் போடலாம், அல்லது நல்ல வீடு வாங்கலாம்....இப்படி பல வழிகளில் முதலீடு செய்யலாம்.
ஆனால் இதெல்லாம் சிறந்த முதலீடு அல்ல என்கிறார் வள்ளுவர்.
பின் எதுதான் நல்ல முதலீடு என்று பார்ப்பதற்கு முன்னால், சற்று யோசிப்போம். ஈகை என்ற அதிகாரத்துக்கும் முதலீடுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஒரு வேளை பொருட்பாலில் வர வேண்டியது மாறி இங்கு வந்து விட்டதோ என்ற சந்தேகம் வரலாம்.
வள்ளுவர் சொல்கிறார்,
"மிகுந்த பசி உள்ளவன் வயிற்றிக்கு உணவு இடுவதுதான் ஆகச் சிறந்த முதலீடு"
என்று.
சேமித்த பணத்தை உணவாக மாற்றி, பசி உள்ளவனுக்கு அதை கொடுப்பதுதான் சரியான முதலீடு
பாடல்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_26.html
(pl click the above link to continue reading)
அற்றார் = பொருள் அற்றவர், உணவு அற்றவர்
அழிபசி = அழிக்கின்ற பசியை
தீர்த்தல் = தீர்ப்பது
அஃதொருவன் = அது ஒருவன்
பெற்றான் = பெற்ற
பொருள்வைப் புழி = பொருள் + வைப்புழி = பொருளை சேமித்து வைக்கும் இடம்
அழிபசி = அழிக்கின்ற பசி. பசி பலவற்றை அழித்து விடும். கல்வி, புகழ், மானம், காமம், என்ற பலவற்றை அழித்து விடும். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள்.
அப்படிப்பட்ட பசியை தீர்க்க உதவும் பொருள் தான் சிறந்த வழியில் சேமிக்கப்பட்ட பொருள் என்கிறார்.
அதிலும், பரிமேலழகர் சில நுண்மையான விடயங்களைச் சொல்கிறார்.
"அறன் நோக்கி அழி பசி தீர்த்தல்" என்பார். கொடுப்பது அறம் என்று நினைத்து கொடுக்க வேண்டும். பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து கொடுக்கக் கூடாது.
அதெல்லாம் சரி, அப்படி செலவழித்த பணம், செல்வில்தானே சேரும். எப்படி, அது சேமிப்பாக மாறும்? வள்ளுவர் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதானா?
இல்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார்.
சேமிப்பு என்றால் பிற்காலத்தில் வட்டியோடு முதலும் பத்திரமாக திரும்பி வர வேண்டும் அல்லவா?
பசித்தவனுக்கு செலவழித்த பணம் புண்ணியமாக மாறி, ஒன்றுக்கு பல மடங்கு செய்தவனுக்கே திரும்பி வரும் என்கிறார்.
எப்படி நம்புவது?
வள்ளுவர் போன்ற அறிஞர்கள் உலகை நன்கு உற்று கவனித்து அங்கு நடப்பவற்றை நமக்குச் சொல்கிறார்கள்.
ஒன்று ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, சோதனை செய்து பார்க்கலாம்.
எனது குறுகிய அனுபவத்தில் இது உண்மை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன்.
நீங்களும் சோதனை செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment