திருக்குறள் - பொன்றாது நிற்பது
பெரிய பெரிய அரசர்கள் உலகை கட்டி ஆண்டார்கள். பெரிய அரசியல் தலைவர்கள் உலகே வியக்கும்படி சாதனைகள் செய்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் பரம்பரை, அவர்கள் சொத்து, என்று எது இருக்கிறது இப்போது?
இராஜராஜ சோழன் பரம்பரை எங்கே, அவன் கட்டிய அரண்மனைகள் எங்கே? அசோக சக்ரவர்த்தியின் வாரிசுகள் யார்?
ஒன்றும் தெரியாது.
மிஞ்சி நிற்பது அவர்கள் பேரும் புகழும் மட்டும்தான்.
என்றோ வாழ்ந்த அதியமான், சிபிச் சக்கரவர்த்தி, கர்ணன் என்று அவர்கள் புகழ் இன்றும் நிற்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கும்.
முந்தைய பாடல்களில் வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றும் பாடும் புலவர்கள் பாடுவது எல்லாம் அவர்கள் புகழைத்தான் என்றும் பார்த்தோம்.
வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார்.
ஒருவனுக்கு பசிக்கிறது. உணவு அளித்தோம். புகழ் வந்து விடுமா?
படிப்பு செலவுக்கு, திருமண செலவுக்கு என்று ஒருவன் நம்மிடம் உதவி கேட்கிறான். ஒரு ஐந்து ஆயிரமோ, பத்து ஆயிரமோ கொடுக்கிறோம். புகழ் வந்து விடுமா? காலகாலத்துக்கும் நம் புகழ் நிற்குமா?
நிற்காது. பின் என்ன செய்தால் நீண்ட புகழ் வரும்?
வள்ளுவர் கூறுகிறார்
"இணையில்லாத உலகில் சிறந்த புகழ் அல்லது நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை"
என்று.
பாடல்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_16.html
(please click the above link to continue reading)
ஒன்றா = ஒப்பிட்டு கூற முடியாத, இணை இல்லாத,
உலகத்து = உலகில்
உயர்ந்த புகழ் = சிறந்த புகழ்
அல்லால் = தவிர
பொன்றாது = நிலைத்து
நிற்பதொன்று இல் = நிற்பது வேறு எதுவும் இல்லை
புகழ் போல நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை என்கிறார்.
சரி, புரிகிறது. ஆனால் இதில் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்.
இது சாதாரண விடயம். எல்லோருக்கும் தெரிந்ததுதானே. இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா?
அப்படி அல்ல.
பரிமேலழகர் இல்லை என்றால், இதில் ஒன்றும் இல்லை என்று மேலே சென்று விடுவோம்.
பரிமேலழகர் சொற்களை இடம் மாற்றிப் போடுகிறார்.
ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால் உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்
என்று.
இணையில்லாத உலகம் அல்ல, இணையில்லாத புகழ் அல்லது இந்த உலகில் நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை.
இணையில்லா என்ற அடைமொழியை புகழுக்குச் சேர்க்கிறார். உலகத்துக்கு அல்ல.
சரி, அதனால் என்ன. இணையில்லாத உலகம், இணையில்லாத புகழ். புரிகிறது.
அதனால் என்ன பெரிய அர்த்த மாற்றம் வந்து விடும்?
இணையில்லாத புகழ் எப்படி வரும்?
நான் ஒருவனுக்கு ஒரு வேளை உணவு அளிக்கிறேன் என்றால். அதே போல் இன்னொருவனும் செய்ய முடியும். அதை விட அதிகமாகக் கூட செய்ய முடியும். ஒரு வேளை என்ன ஒரு வேளை, இரு வேளை, மூன்று வேளை...ஒரு ஆள் என்ன ஒரு ஆள், பத்து பேர், நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்று மற்றவர்கள் ஆரம்பிக்க முடியும். அப்போது, என் புகழ் மங்கிவிடும்.
இணையில்லாத புகழ் எப்போது வரும்? நான் செய்ததை மற்றவன் செய்ய முடியாத போது எனக்கு அந்த புகழ் வரும் அல்லவா?
அது என்ன செயல்?
ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அவசரமாக இரத்தம் தேவைப் படுகிறது. நான் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றுகிறேன். அதை எல்லோராலும் செய்ய முடியாது.
அப்படி கூட சொல்ல முடியாது. இரத்த தானம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அப்படி என்றால் அதைவிட சிறந்தது எது?
இங்குதான் பரிமேலழகர் உச்சம் தொடுகிறார்.
யாராலும் கொடுக்க முடியாத ஒன்று உயிர், உடல் உறுப்புகள்.
உயிரைக் கொடுப்பது என்பது நடவாத காரியம். நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஒருவன் உயிரை தியாகம் செய்கிறான் என்றால், அதுதான் பொன்றாப் புகழ். யாரால் முடியும்?
உடல் உறுப்பு? முடியுமா? புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்ரவர்த்தி. அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. அவன் புகழ் இன்றளவும் நிற்கிறது.
கண்ணை எடுத்து கொடுத்தான் கண்ணப்பன். அந்த வேடனின் புகழ் இன்றும் நிற்கிறது.
தன்னிடம் உள்ள மிகச் சிறந்த ஒன்றை ஒருவன் கொடுக்கும் போது, பொன்றா புகழ் பெறுகிறான் என்கிறார் வள்ளுவர்.
வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்றை செய்யும் போது, நிலைத்த புகழ் வரும்.
தன் உயிரை, உடல் உறுப்புகளை (organ donation ), நேரத்தை, இன்பத்தை தானம் செய்வது இருக்கிறதே, அதுவே நீண்ட புகழைத் தரும்.
ஒரு வார்த்தையை இடம் மாத்திப் போட்டால் எவ்வளவு பெரிய அர்த்தம் வருகிறது.
எப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள்.
எப்படி எல்லாம் சிந்தித்து அதற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.
தலை தாழ்த்தி வணங்குவோம்.
SUPER
ReplyDeleteAwesome 😎
ReplyDeleteVery nicely written👏
ReplyDeleteதிருவருட்பயன் padalgal pathivu seiyavum
ReplyDelete