Pages

Friday, November 3, 2023

திருக்குறள் - தாமே தமியர் உணல்

திருக்குறள் - தாமே தமியர் உணல் 


மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். யாருக்கும் ஒன்றும் உதவி செய்யக் கூடாது என்று யார் நினைப்பார்கள்? இருந்தும் பெரும்பாலானோர் உதவி செய்வது இல்லை. 


ஏன்?


கொஞ்சம் சேமிக்க ஆரம்பிக்க உடன், முதலில் ஒரு இலட்சம் சேமிக்க வேண்டும் என்று ஆசை வரும். அதை சேர்த்தவுடன் பத்து இலட்சம், அப்புறம் ஒரு கோடி என்று ஆசை வளர்ந்து கொண்டே போகும். 


இதற்கு இடையில் ஒரு சிறிய வீடு வாங்க வேண்டும், ஒரு கார், என்று செலவும் கூடிக் கொண்டே போகும். குறித்த அளவு சேமிக்க நாள் ஆகும். அதுவரை பணத்தை யாருக்கும் கொடுக்காமல் மேலும் மேலும் சேமிக்க மனம் நினைக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒருவரிடம் சென்று எனக்கு பொருள் கொடு என்று கேட்பது மிக இழிவானது. துன்பம் தருவது. அதை விட துன்பம் தரும் ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால் கேட்டவனுக்கு கொடுக்காமல் தாமே தனித்து உண்பது"


பாடல் 


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_3.html

(please click the above link to continue reading)


இரத்தலின் = மற்றவர்களிடம் சென்று தான் வரியன் உதவி கேட்பதை விட 


இன்னாது = இனிமை இல்லாதது, துன்பம் தருவது 


மன்ற = நிச்சயமாக 


நிரப்பிய = அனைத்தையும் 


தாமே = தான் மட்டும் 


தமியர் உணல் = தனியாக உண்பது 


அது எப்படி உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லுவது தவறாகும்?


எனக்கு உதவி செய்ய வசதி இல்லை,  உதவி செய்ய மனம் இல்லை அதனால் என்ன?  உதவி செய்தே ஆக வேண்டுமா?


வள்ளுவர் சொல்கிறார்,


ஏன் உதவி செய்யமாட்டேன் என்கிறாய்?  ஏதோ ஒரு அளவு சொத்து சேர்க்க வேண்டும் நினைத்துதான் அல்லவா? 


அப்படி நினைக்கும் போது என்ன ஆகும்?


முதலாவது, கஞ்சத்தனம் வந்து விடும். மனைவி மக்கள் ஏதாவது ஆசையாகக் கேட்டால் கூட வாங்கித் தர மனம் வராது.   "எதுக்கு அனவாசிய செலவு"  என்று அவர்கள் ஆசையை மறுக்க வேண்டி வரும்.  அவனுக்கு ஒரு குறித்த அளவு சொத்து சேர்க்க வேண்டும். அது வரை வாழ்க்கையை அனுபவிக்க மாட்டான். சரி, அந்த இலக்கை அடைந்தவுடன் செல்வழிப்பானா என்றால், இல்லை. அடுத்த இலக்கு வந்து விடும். மூன்று படுக்கை அறை உள்ள வீடு வேண்டும், வில்லா வேண்டும், பெரிய கார் வேண்டும் , அதற்கு சேமிக்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவான். ஒரு நாளும் சந்தோஷமாக  இருக்க மாட்டான். எனவே, அது "இன்னாது". 


இரண்டாவது, பொருள் இல்லாதவன், உதவி கேட்பது ஒரு முறை. ஒரு சிலரிடம் கேட்பான். யாராவது உதவி செய்து விடுவார்கள்.  பொருள் கிடைத்து விடும். அதன் மூலம் தன் பிரச்சனையை அவன் தீர்த்து, நிம்மதி பெருமூச்சு விடுவான். மகிழக் கூடச் செய்வான். ஆனால், பொருள் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பவன் ஒரு காலும் அந்த பொருள் மூலம் வரும் இன்பத்தை அனுபவிக்க மாட்டான். ஒவ்வொரு முறையும் passbook ஐ பார்த்து பார்த்து, இன்னும் சேர்க்க வேண்டும், இன்னும் சேர்க்க வேண்டும் என்று கவலைப் பட்டுக் கொண்டே இருப்பான். ஒருக்காலும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. எனவே அது "இன்னாது". 


இவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டால், தான் சேர்த்த பொருளை தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் வரும். 


சிந்தித்துப் பார்ப்போம். 


 




No comments:

Post a Comment