நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல்
பெண்கள் மனதை புரிந்து கொள்வது சாதாரண காரியம் அல்ல.
அவர்களுக்கு ஒரு பொருளின் மேல் உள்ள ஆசையை விட, அந்தப் பொருளை கணவனோ, காதலனோ தங்களுக்காக கஷ்டப்பட்டு பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஆசை அதிகம். எனக்காக அவன் அதைச் செய்தான் என்பதில் அவர்கள் மனம் நெகிழும்.
உனக்கு வேண்டியது பொருள்தானே, அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னால் முடியாது. நீ வாங்கிக் கொண்டு வந்து, என்னிடம் தர வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.
சில உதாரணங்கள் பார்ப்போம்.
சீதை பொன் மானை விரும்புகிறாள். இலக்குவன் தான் போய் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்கிறான். யார் கொண்டுவந்தால் என்ன? அவளுக்கு வேண்டியது பொன் மான் தானே.
இல்லை, அவளுக்கு இராமன் பிடித்துத் தர வேண்டும்.
"நீங்க எனக்கு அதை பிடித்துத் தர மாட்டீங்களா" என்று கொஞ்சுகிறாள். இராமனால் மறுக்க முடியவில்லை. மான் பிடிக்கப் போகிறான்.
"நாயக, நீயே பற்றி நல்கலை போலும்" என்று கொஞ்சுகிறாள்.
ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்து அனைய செய்ய
வாயிடை மழலை இன்சொல் கிளியினில் குழறி மாழ்கி,‘
நாயக! நீயே பற்றி நல்கலை போலும் ‘என்னாச்
சேய் அரிக் குவளை முத்தம் சிந்துபு, சீறிப் போனாள்.
கணவன் அன்போடு பூ வாங்கிக் கொண்டு வருகிறான். அதை அவள் கையில் கொடுத்தால் எப்படி, "இங்க வா, கொஞ்சம் திரும்பு என்று அவளை தொட்டுத் திருப்பி அவள் தலையில் அவனே பூ வைத்து விட்டால் எப்படி". ஒரு மனைவிக்கு எது பிடிக்கும்?
ஆண்டாள் சொல்கிறாள்
"மலரிட்டு நாம் முடியோம்" என்று. நாங்களே எதுக்கு எங்க தலைமேல பூ வச்சுக்கணும். கண்ணன் வந்து வச்சுவிடணும் என்று அவள் ஆசை.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
காதலின் ஒரு படி மேலே சென்று....
கண்ணுக்கு நான் மை வைத்துக் கொள்ள மாட்டேன். அவன் வந்து மை தீட்டி விடட்டுமே என்று அவள் இருக்கிறாள்.
அவனுக்கு மை தீட்டி பழக்கம் இல்லை. அவள் கண் இமையை மெல்ல கீழே இறக்கி, கண் மையை தொட்டு அவள் கண்களில் பட்டும் படாமல் மெல்லமாக இடுகிறான். அவ்வளவு நெருக்கம். கையில் நடுக்கம். கண்ணில் பட்டு விடுமோ என்று. அவளின் நெருக்கம், இதயம் பட பட வென்று அடிக்கிறது.
அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான். எல்லாம் பேசிய பின், "இன்னும் ஒரு மாதம் உயிரோடு இருப்பேன். அதுக்குள்ள வந்து இராமன் கூட்டிக் கொண்டு போகா விட்டால், உயிரை விட்டு விடுவேன்" என்று போய் சொல் என்கிறாள்.
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த
மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ.
அனுமன் பார்த்தான். இது என்னடா புது வம்பா இருக்கு. இனி நான் போய் இராமனிடம் சொல்லி, அவன் இங்கு வந்து, சண்டை போட்டு, இராவணனை வென்று....அதெல்லாம் ஒரு மாதத்தில் நடக்கிற காரியமா என்று நினைத்து,
சீதையிடம் சொல்கிறான்...
ஒரு மாசம் எல்லாம் வேண்டாம். இப்பவே என் தோளில் ஏறிக் கொள். இப்பவே உன்னை கொண்டு போய் இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்.மத்ததை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று.
'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான்.
"அடியன் தோள் ஏறு கடிது" என்றான்.
அப்போது சீதை சொல்கிறாள்,
"இந்த இலங்கை மட்டும் அல்ல, இந்த உலகம் அனைத்தையும் என் சொல்லினால் சுடுவேன். அது இராமனின் வில்லுக்கு இழுக்கு என்று செய்யாமல் இருக்கிறேன்"
அதாவது, என்னால் இந்த சிறையில் இருந்து மீள முடியும். ஆனால், அவன் வந்து சிறை மீட்க வேண்டும்.
அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.
திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு காதலியாக வரித்துக் கொண்டு, வண்டை பெருமாளிடம் தூது விடுகிறார்.
"மலரில் உன் துணையோடு மதுவை அருந்தும் வண்டே, என் நிலையை அவனுக்குச் சொல்"
என்று.
அதாவது, அவனை வரச் சொல் என்று சொல்லவில்லை. அவனை கூட்டிக் கொண்டு வா என்று சொல்லவில்லை. என் நிலையைச் சொல். என் நிலை உணர்ந்து அவனே என்னைத் தேடி வருவான். வர வேண்டும். அப்போதுதான் அவளுக்கு மகிழ்ச்சி.
பாடல்
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_57.html
(pl click the above link to continue reading)
தூவிரிய = உன்னுடைய சிறகுகள் விரியும்படி
மலருழக்கித் = மலர்களை போட்டு உழக்கி எடுத்து
துணையோடும் = உன்னுடைய துணையோடு (ஜோடி)
பிரியாதே = பிரியாமல்
பூவிரிய = பூவின் இதழ்களை விரித்து
மதுநுகரும் = தேனை உருசிக்கும்
பொறிவரிய சிறுவண்டே = வரிகளை மேலே கொண்ட வண்டே
தீவிரிய = தீ மேலே எழுபடி
மறைவளர்க்கும் = வேதம் ஓதி அவற்றை வளர்க்கும்
புகழாளர் = சிறந்தவர்கள்
திருவாலி = (வாழும்) திருவாலி என்ற திருத்தலத்தில்
ஏவரி = எதிரிகள் அஞ்சும்படி
வெஞ் சிலையானுக் = கொடிய வில்லை கையில் ஏந்தியவனிடம்
கென்னிலைமை = என்னுடைய நிலையை
யுரையாயே = சொல்வாயாக
அவன் வீரன் தான். அவனைப் பார்த்தால் எதிரிகள் நடுங்குவார்கள். ஆனால், என்னிடம் அன்பாக இருப்பான். நீ போய் சொல்லு. அவன் வர்ரானா இல்லையா பாரு என்பது போலச் சொல்கிறாள்.
அவளுக்கு கார் கதவை திறந்து உள்ளே ஏறத் தெரியும். இருந்தும், கணவன் கார் கதவை திறந்து விட்டால், அதில் அவளுக்கு ஒரு பெருமை.
அவளுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரத் தெரியும். இருந்தும், கணவன் அந்த நாற்காலியை அவள் அமர வசதியாக நகர்த்திக் கொடுத்தால், அதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி.
பெண்ணின் மனம்.
True 👍😊
ReplyDelete