அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்
இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம் போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்கிறீர்களே, யார் செய்த புண்ணியமோ.
அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், யார் சொல்லக் கூடாது, யாருக்குச் சொல்லக் கூடாது, அறத்தின் பயன் என்ன, அதை எப்போது செய்ய வேண்டும் என்று அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப் பிரித்துத் தருகிறது.
அறம் என்றால் என்ன, அதை நம்மவர்கள் எப்படி கடைப் பிடித்தார்கள், நமது கலாச்சாரம் என்ன, என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
முழு நூலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.
முதலாவதாக,
"இந்த உலகில் பாவத்தை எடுத்து உரைக்கும் நூல்கள் பல இருக்கின்றன. காமம், ஆசை இவற்றைத் தூண்டும் நூல்கள் பல இருக்கின்றன. அது போல இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத நூல்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நூலை படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களே, நீங்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்தான்"
என்று கூறுகிறது.
பாடல்
மறவுரையும் காமத் துரையும் மயங்கிய
பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.
மறவுரையும் = அறம் அல்லாத உரைகளையும் (பாவத்தைத் தூண்டும்)
காமத் துரையும் = காமத்து உரையும் = காமம், ஆசை பற்றி பேசும் நூல்களும்
மயங்கிய = குழப்பம் தரும்
பிறவுரையும் = பிற நூல்களும்
மல்கிய = நிறைந்த
ஞாலத்-= இந்த உலகில்
தறவுரை = அறவுரையை
கேட்கும் = கேட்கப் பிரியப் பட்டு வந்துள்ள நீங்கள்
திருவுடை யாரே = புண்ணியம் செய்தவர்களே
பிறவியை = இந்தப் பிறவியில் இருந்து
நீக்கும் = விடுபடும்
திருவுடையார் = புண்ணியம் உள்ளவர்கள்
அறவுரையை கேட்பவர்கள் புண்ணியம் பண்ணியவர்கள். அவர்களே இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபடும் பேறு பெற்றவர்கள்.
அரவுரையைக் கேட்டாலே போதும். அது உள்ளே போகும். மனதில் படியும். சொல்லில், செயலில் கட்டாயம் வெளிப்படும். தவறு செய்வதை மனசாட்சியாக நின்று தடுக்கும்.
வீட பேற்றுக்கு வழி செய்யும்.
aஅந்தக் காலத்திலேயே குப்பைப் புத்தகங்கள் இருந்து இருக்கு. நல்ல புத்தகங்கள், குப்பை புத்தகங்கள் என்று இருக்க வேண்டும் என்றால் மொழியும், மொழி வழி எண்ணங்களை புத்தக வடிவில் பகிர்ந்து கொள்ளும் முறையும் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும் !
புத்தகம் என்று சொல்லவில்லை...உரை என்று சொல்கிறது. ஓலைச் சுவடிகளோ, அல்லது வேறு எந்த விதத்திலோ இவை எல்லாம் இருந்திருக்கின்றன.
சிறந்த புத்தகங்களை தேடிப் பிடித்து படிப்பது என்பது ஒரு கலை.
முதலில் புத்தகங்களை கண்டு பிடிக்க வேண்டும். பின் படிக்க வேண்டும். பின், அவை புரிய வேண்டும். பின் அதன் படி நடக்க வேண்டும்....
No comments:
Post a Comment