அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின்
வேண்டாத விடயங்களை படிப்பது என்றால் நிறைய பேருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். நல்ல விடயங்களை படிப்பது என்றால் "அது ஒண்ணும் புரியாது, அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி விடுவார்கள்.
இது ஏதோ இன்று நேற்று நடப்பது அல்ல. காலம் காலாமாய் நடக்கும் சங்கதி.
"தேவை இல்லாதவற்றைப் பற்றி கூறினால், ஆர்வமுடன் கேட்பார்கள். தேவையான, பயனுள்ள விடயங்களை கேட்க மாட்டார்கள். அது ஏதோ மெலிந்த உடம்பின் மேல் குளிர் காற்று வீசினார்ப் போல நடுங்குவார்கள், துன்பப் படுவார்கள். நல்ல விடயங்களை கேளுங்கள். படியுங்கள். அதன்படி நடங்கள். படித்து, அடக்கமுடன் நடந்து கொள்ளுங்கள்"
என்கிறது அறநெறிச்சாரம்
பாடல்
வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்
கூதற்குக் கூதி ரனைத்து.
பொருள்
வேட்டவாய்க் = வேட்டு + அவாய் = வேட்கையுடன், ஆர்வத்துடன்
கேட்பர் = கேட்பார்கள்
விரைந்தோடி = விரைந்து ஒட்டி வந்து
ஞாலத்தார் = ஞாலம் என்றால் உலகம். உலகில் உள்ளவர்கள்
கேட்டைக் = கேடுதரும், பலன் இல்லாத
கிழத்தியைப் = பெண்ணைப் பற்றி
பாடுங்கால் = பாடும் பொழுது
கோட்டில்லா = கோட்டம் என்றால் வளைவு. குற்றம். கோட்டில்லா என்றால் குற்றம் இல்லாத நூல்களைப்
ஓதுமின் = மீண்டும் மீண்டும் படியுங்கள்
அடங்குமின் = படித்த பின், புலன் அடக்கம் கொள்ள வேண்டும்
என்னுஞ்சொல் = என்று கூறினால்
கூதற்குக் = குளிர் காற்றில்
கூதி ரனைத்து = நடுங்கிய உடல் மேல்
அதாவது, நல்லதைப் படியுங்கள், அதன் படி நடவுங்கள் என்று சொன்னால், குளிர் காற்று அடித்தால் எப்படி உடல் வருத்தம் அடையுமோ, அது போல வருந்துவார்கள்.
ஏதோ ஒரு நடிகை பற்றிய கிசு கிசு என்றால் அதை ஆர்வமாகப் படிப்பார்கள்.
ஓதுதல் என்றால் திரும்ப திரும்பச் சொல்லுதல். ஓதுவார் என்றால் தினமும் கோவில்களில் பாடல்களைப் படிப்பவர்.
நல்ல புத்தகங்களை ஒரு முறை வாசித்துவிட்டு, படித்துவிட்டேன் என்று சொல்லக் கூடாது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். எனவே "ஓதுமின்" என்றார்.
அறநெறிச்சாரம, பற்றிய விளக்கம. தரமுடியுமா?
ReplyDelete