Pages

Thursday, January 18, 2024

தேவாரம் - சொல்லுகேன் கேள்

 தேவாரம் -  சொல்லுகேன் கேள்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_18.html

நமக்கு என்னவெல்லாம் தேவை ?  


நிறைய செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, புகழ், பெருமை, சுற்றம், நட்பு..என்று பட்டியல் போடலாம். 


நாவுக்கரசர் சொல்கிறார், இதெல்லாம் பெரிய விடயம் அல்ல. அடைய வேண்டிய பெரிய விடயங்கள் என்னென்ன தெரியுமா?


நாம் செய்த பாவங்கள் நம்மை பற்றி நிற்கின்றன. அவை நம்மை விட்டு விலக வேண்டும். இல்லை என்றால் பாவத்தின் பலனாக துன்பம் வரும், பிறவி வரும்.


வீடு பேறு அடைய வேண்டும். திரும்பி திரும்பி பிறந்து இறந்து பிறந்து இறந்து ...இந்த சுழலில் இருந்து விடுபட வேண்டும். 


பழைய வினைகள் விட்டால் மட்டும் போதாது. புது வினைகள் எதுவும் வராமலும் இருக்க வேண்டும்.


இவை எல்லாம் முக்கியமா இல்லையா?


முக்கியம் என்றால், இவற்றை எப்படி அடைவது? அதையும் அவரே சொல்கிறார். 


"சிவனே..நீ தான் எனக்குத் துணை, உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை நான் நினைக்க மாட்டேன், புனிதமானவனே, ஆரூரா" 


 என்று போற்றுங்கள். மேற்சொன்ன எல்லாம் கிடைக்கும் என்கிறார். 


பாடல் 


பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,

         பரகதிக்குச் செல்வதுஒரு பரிசு வேண்டில்,

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்,

         சொல்லுகேன் கேள்,நெஞ்சே, துஞ்சா வண்ணம்,

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்,

         உன்னைஅல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்,

புற்றுஅரவக் கச்சுஆர்த்த புனிதா என்றும்,

         பொழில்ஆரூ ராஎன்றே போற்றா நில்லே.


பொருள் 


பற்றிநின்ற பாவங்கள் = நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கும் பாவங்கள் 


பாற்ற வேண்டில் = பாற்றுதல் என்றால் விலகுதல். அந்தப் பாவங்கள் விலக வேண்டுமானால். 


பரகதிக்குச் = பரம் என்றால் மேலான, உயர்ந்த. பரம்பரை. பரசிவம். பரமாத்மா. கதி என்றால் வழி. பரகதி, உயர்ந்த வழி. 


செல்வதுஒரு பரிசு வேண்டில் = உயர்ந்த வழியில் செல்லும் வாய்ப்பு வேண்டும் என்றால் 


சுற்றிநின்ற சூழ்வினைகள் = நம்மைச் சுற்றி நிற்கும் வினைகள், எப்போது நம்மை பற்றலாம் என்று காத்துக் கிடக்கும் வினைகள் 

 


வீழ்க்க வேண்டில் = நம்மைப் பற்றாமல் இருக்க வேண்டும் என்றால் 


சொல்லுகேன் கேள் நெஞ்சே = என் மனமே, நான் சொல்வதைக் கேள் 


துஞ்சா வண்ணம் = துஞ்சுதல் என்றால் உறங்குதல். இங்கே மறக்காமல், ஒருபோதும் விடாமால் என்று பொருள் கொள்ளலாம். 


உற்றவரும் = நமக்கு வேண்டியவர்களும், துணையானவர்களும் 


உறுதுணையும் = சிறந்த துணையும் 


நீயே என்றும் = நீதான் என்றும் 


உன்னைஅல்லால் = உன்னைத் தவிர 


ஒருதெய்வம் = மற்றொரு தெய்வம் 


உள்கேன் = உள்ளத்தால் நினைக்க மாட்டேன் 


என்றும் = என்றும் 


புற்று = புற்றில் வாழும் 


அரவக் = பாம்பை 


கச்சு ஆர்த்த = இடுப்பில் அணிந்து இருக்கும் 


புனிதா என்றும் = புனிதமானவனே என்றும் 


பொழில் = சோலைகள் சூழ்ந்த 


ஆரூரா = திருவாரூர் என்ற திருத்தலத்தில் உறைபவனே 


என்றே = என்று 


போற்றா நில்லே = போற்றி நிற்பாயாக 


நாவுக்கு அரசர் என்று இறைவனால் பட்டம் வழங்கப்பட்டவர் அப்பரடிகள்.  ஊனை உருக்கும், உயிரை உருக்கும் பாடல்கள் அவர் பாடிய தேவாரம். 


நிறைய இருக்கிறது. 


நேரம் இருப்பின், மூலத்தை தேடிப் படியுங்கள் 



No comments:

Post a Comment