Pages

Wednesday, January 31, 2024

அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார்

அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார் 



அறத்தின் சாரத்தை பிழிந்து தரும் நூல் அறநெறிச்சாரம். 


அற நூல்களை படிக்க எங்கே நேரம் இருக்கிறது. நம் நேரத்தை நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ள பல முனைகளில் போட்டி நடக்கிறது. தொலைகாட்சி, செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், முகநூல் என்று நேரம் போவதே தெரிவதில்லை. 


இது இன்று நடப்பது அல்ல. அன்றும் இதே நிலைதான். 


"அறம் அல்லதாவற்றைப் பற்றி பேசும் நூல்களும், காமம், ஆசை இவற்றை தூண்டி விடும் நூல்களும் நிறைந்து இருக்கும் இந்த உலகில், அறவுரையை கேட்கும் மனம் உள்ளவர்களே இந்த பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவார்கள்"


பாடல் 


மறவுரையும் காமத் துறையும் மயங்கிப்

பிறவுரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் கருத்துடை யோரே பிறவியை

நீக்கும் திருவுடை யார்


பொருள் 




மறவுரையும் = அறம் அல்லாதவற்றை சொல்லும் நூல்களும் 


காமத் துறையும் = காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் நூல்களும் 


மயங்கிப் = மயக்கம் கொள்ளச் செய்யும், அறிவை மழுங்கச் செய்யும் 


பிறவுரையும்  = மற்ற பிற நூல்களும் 


மல்கிய = பெருகிக் கிடக்கும் இந்த 


ஞாலத்து = உலகில் 


அறவுரை கேட்கும் = அற உரைகளை கேட்கும் 


கருத்துடை யோரே = அறிவு உள்ளவர்களே 


பிறவியை = பிறவிப் பிணியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடை யார் = பெருமை உடையவர்கள் 



பிறவிப் பிணியில் இருந்து விடுபட வேண்டுமா?  கண்டதையும் படிக்காமல் அற நூல்களை தேடிச் சென்று படியுங்கள் என்கிறது இந்தப் பாடல். 



2 comments:

  1. சரித்திரம் மீண்டும் வரும் ( history repeats itself) என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  2. Reading your blog gives much satisfaction

    ReplyDelete