திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம்
https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_22.html
மாமிசம் உண்ணலாமா? கூடாதா ? என்ற சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இரண்டு பக்கமும் அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன.
வள்ளுவர் புலால் உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அது சரி தவறு என்ற வாதத்துக்குள் போகவில்லை.
வாழ்வின் நோக்கம் என்ன?
வீடு பேறு அடைவது.
அதற்கு வழி என்ன?
இல்லறம் - துறவறம்.
துறவறத்துக்கு இன்றியையாத ஒன்று - அருள்.
பிற உயிர்களை கொன்று தின்றால், மனதில் அருள் இல்லாமல் போகும். அருள் இல்லை என்றால் துறவு இல்லை. துறவு இல்லை என்றால் வீடுபேறு இல்லை.
எனவே, புலாலை மறுக்கச் சொல்கிறார்.
புலால் உண்பவர்கள் சொல்லும் ஒரு தர்க்கம் இருக்கிறது.
"...நான் அந்த ஆட்டை மாட்டை கொல்லவில்லை. யாரோ, ஏற்கனவே கொன்று அதன் மாமிசத்தை கடையில் வைத்து இருக்கிறான். நான் வாங்கவிட்டாலும், யாராவது அதை வாங்கி உண்ணத்தான் போகிறார்கள். இல்லை என்றால் குப்பையில் போடப்படும். எனவே, நான் கொல்லவில்லை. எனக்கு எந்த பாவமும் இல்லை..." என்று ஒரு சாரார் வாதம் செய்கிறார்கள்.
மற்றவன்
"..நான் புலால் உண்பது இல்லை. விலங்குகளை வெட்டி வைக்கிறேன். வேண்டுபவர்கள் வாங்கி உண்கிறார்கள். அவர்கள் உண்பதால்தானே நான் வெட்டி வைக்கிறேன்? யாருமே வாங்கவில்லை என்றால் நான் ஏன் விலங்குகளை வெட்டப் போகிறான் "
இரண்டு பக்கமும் இப்படி கூறுவார்கள் என்று அறிந்து பரிமேலழகர் அதை மறுக்கிறார்.
"கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது"
அதாவது உண்பதால், கொலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே புலால் உண்பது கொலைக்கு காரணமாகிறது.
கொலை செய்யப்பட்டதால், உண்கிறார்கள். எனவே புலால் உணவு காரியமாகிறது.
அவ்வாறு காரணம், மற்றும் காரியம் இரண்டுக்கும் எதுவாக இருப்பதால், புலால் உண்பது துறவிகளுக்கு மறுக்கப்பட்டது.
இனி அதிகாரத்துக்குள் செல்வோம்.
No comments:
Post a Comment