Pages

Friday, February 23, 2024

கந்தர் அநுபூதி - கமழும் கழல்

கந்தர் அநுபூதி - கமழும் கழல் 


கிடைக்கவே கிடைக்காது, கிடைப்பது ரொம்பக் கடினம், என்று நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்போம். அது நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?  


இது எப்படி நமக்கு கிடைத்தது என்று வியந்து போவோம் அல்லவா?  இது உண்மைதானா, என்ற சந்தேகம் ஒருபுறம் வரும். இன்னொருபுறம் மிகுந்த மகிழ்ச்சி. 


அது போல அருணகிரிநாதர் இருக்கிறார். 


முருகனின் திருவடியில் சரணம் அடையும் பேறு தனக்கு எப்படி கிடைத்தது என்று விளங்காமல் தவிக்கிறார். அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று திகைக்கிறார். 


அப்படி என்ன முருகன் திருவடியில் சிறப்பு?


அவரே சொல்கிறார் 


"வீடு பேற்றைத் தரும் திருவடி. தேவர்களின் தலை மேல் இருக்கும் திருவடி. வேதத்தில் படிந்து கிடக்கும் திருவடி. வள்ளியைத் தேடி தினைப்புனம் உள்ள காட்டில் பதிந்த திருவடி. இங்கெல்லாம் அவன் திருவடி பட்டு, அவை எல்லாம் மணம் வீசுகிறதாம்."


பாடல் 



சாடும் தனிவேல் முருகன் சரணம் 

சூடும் படிதந்தது சொல்லு மதோ 

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங் 

காடும் புனமும் கமழுங் கழலே . 


பொருள் 


சாடும் = போர் புரியும் 

தனி = தனித்துவமான 


வேல் = வேல் 


முருகன் = முருகன் 


சரணம்  = சரண் அடையும்படி 


சூடும் படிதந்தது = அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளத் தந்தது 


சொல்லு மதோ  = எப்படி என்று சொல்ல முடியுமா? 


வீடும் = சுவர்க்கத்திலும் 


சுரர்மாமுடி = தேவர்களின் தலையிலும் 


வேதமும் = வேதத்திலும் 


வெங் காடும் = வெம்மையான காட்டிலும் 


புனமும் = அந்தக் காட்டில் உள்ள திணை புனம் உள்ள இடத்திலும் 


 கமழுங் கழலே = மணம் வீசும் திருவடிகளே 


2 comments:

  1. திருவடிகளே சரணம்

    ReplyDelete
  2. Sir I am Dr Rajan babu librarian U Ve swaminatha iyar library sir kindly give me your contact details
    I want talk to you

    ReplyDelete