தேவாரம் - திருவீழிமழலை - விழி காட்டும்
திருவீழிமழலை
ஒரு பெரிய தெளிவான நீர் தேக்கத்தை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். உங்களூர் ஏரியோ, குளமோ, நீர்த் தொட்டியோ...ஏதோ ஒன்று. தெளிந்த நீர். அதில் தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத்து இருக்கின்றன. அதில் பவளப் பாறைகள் சூரிய ஒளி பட்டு செக்க செவேல் என்று இருக்கிறது. சில பல மீன்கள் அந்த நீரில் விளையாடுகின்றன.
கற்பனை செய்து கொண்டீர்களா?
அந்த கற்பனையை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து திருவீழிமழலை என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் பிரகாரத்தின் மேல் வையுங்கள்.
இளம் பெண்கள் கோவிலை சுற்றி வருகிறார்கள். அவர்கள் முகம் தாமரை மலர் போல் இருக்கிறது. அவர்களது இதழ்கள் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது. அவர்கள் கண்கள் மீன்கள் போல் அங்கும் இங்கும் அலை பாய்கின்றன.
என்ன இது, கோவிலுக்குப் போனோமா, இறைவனை தர்சித்தோமா என்று இல்லாமல் இது என்ன வர்ணனை என்று நீங்கள் கேட்கலாம்.
செய்தது நான் அல்ல. திருஞான சம்பந்தர்.
அது சிவன் கோவில். எப்படிப்பட்டவன் சிவன்,
உலகமெல்லாம் துன்பப் படி மக்களை இம்சை செய்த அசுரர்களின் கோட்டைகளை, கண்ணாடியின் மேல் உளுந்தைப் போட்டால் எவ்வளவு சீக்கிரம் அது உருண்டு ஓடி விழுந்து விடுமோ, அத்தனை குறுகிய நேரத்தில் அந்தக் கொடிய அசுரர்களை அழித்த சிவன் வாழும் கோவில். அந்தக் கோவில்தான் பெண்கள் வழிபட்டதை ஞான சம்பந்தப் பெருமான் கூறுகிறார்.
பாடல்
எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி
உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.
சீர் பிரித்த பின்
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கடம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின் உள் எரி கொள வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்டக் கோகநகம் முகம் காட்டக் குதித்து நீர் மேல்
விழுந்த கயல் விழி காட்ட விற் பவளம் வாய் காட்டும் மிழலையாமே.
எழுந்து = அழிப்பதற்கு எழுந்து
உலகை = இந்த உலகை
நலிந்து = நலியச் செய்து
உழலும் = திரியும்
அவுணர் = அரக்கர்கள்
கடம் புரம் = பெரிய கோட்டைகள்
மூன்றும் = மூன்றும்
எழில் = அழகான
கண்ணாடி = கண்ணாடி
உழுந்து உருளும் = அதன் மேல் உளுந்து உருண்டு கீழே விழும்
அளவைன் = அந்த குறுகிய நேரத்தில்
உள் = உள்ளாக
எரி கொள = அவற்றை எரித்த
வெஞ்சிலை = வீரமான வில்லை
வளைத்தோன் = வளைத்த அந்த சிவன்
உறையும் கோயில் = இருக்கும் கோவில், அது எது தெரியுமா?
கொழுந் = சிறந்த
தரளம் = முத்துக்கள்
நகை காட்டக் = புன்னகையில் தெரியும் பற்கள் காட்ட
கோகநகம் = தாமரை
முகம் காட்டக் = முகத்தில் காட்ட
குதித்து = குதித்து
நீர் மேல் = நீரின் மேல்
விழுந்த = விழும்
கயல் = மீன்
விழி காட்ட = விழியில் காட்ட
விற் பவளம் வாய் காட்டும் = வில் போல் வளைந்த இதழ்கள் பவளத்தைக் காட்ட
மிழலையாமே. = திருவீழிமழலை என்ற ஊர்
இந்தத் தலத்தில் உள்ள அம்பாளின் பெயர் ப்ரிஹந்த்குஜாம்பிகை. ஏதாவது புரிகிறதா?
ப்ரிஹுந் = என்றால் பெரிய, சிறந்த. ப்ருஹந்த்நாயகி = பெரியநாயகி
குஜம் என்றால் மார்பு.
அம்பிகை = அம்பாள்.
அழகிய முலையம்மை.
ஒரே பாடலில் சிவன் பெருமை, வழிபடும் பெண்கள் உவமை என்று இரண்டு செய்திகளா!
ReplyDeleteஅம்மன் பெயர்க் குறிப்பும் சுவாரசியம் ஆனது.
நன்றி.