திருக்குறள் - தவம் - யார் தவம் செய்ய முடியும்?
https://interestingtamilpoems.blogspot.com/2024/05/blog-post_25.html
எல்லோராலும், எல்லாம் செய்ய முடியுமா? வெறும் முயற்சி மட்டும் இருந்தால், எதையும் சாதித்து விடலாமா?
இது ஒரு கேள்வி.
குரல் வளம் இல்லாத ஒருவர், எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சாதகம் பண்ணினாலும், இனிமையாக பாட முடியுமா? இராகம், தாளம் எல்லாம் சரியாக இருக்கலாம். குரலில் இனிமை வருமா?
இயற்கையிலேயே குரல் இனிமை உள்ளவர்கள், இசையை முறையாகப் பயின்றால், அவர்களின் இசை பலமடங்கு சிறப்பாக இருக்கும்.
அது போல,
வள்ளுவர் சொல்கிறார், தவம் என்பது எல்லோராலும் செய்ய முடியாது. தவ ஒழுக்கம் என்பது இயற்கையாக வர வேண்டும். அந்த தவ இயல்பு இல்லாதவர்கள் தவம் செய்ய நினைப்பது பலன் தராது என்கிறார்.
பாடல்
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது
பொருள்
தவமும் = தவம் செய்வதும்
தவமுடையார்க்கு = முன்பு தவம் செய்தவற்கே
ஆகும் = முமுடியும்
அவம் = வீண் முயற்சி
அதனை = அந்தத் தவத்தை
அஃதிலார் = முன்பு தவம் செய்யாதவர்கள்
மேற்கொள் வது = செய்ய நினைப்பது
இது கொஞ்சம் சிக்கலான குறள்.
நாம் தவம் செய்யலாம் என்று நினைத்தாலும், முன்பு தவம் செய்து இருந்தால் ஒழிய இப்போது தவம் செய்ய முடியாது என்கிறார் வள்ளுவர்.
சரி, முன்பு எப்படி தவம் செய்திருக்க முடியும்? அதற்கு முன்னால் தவம் செய்திருக்க வேண்டும். இப்படியே போனால், ஏதோ ஒரு பிறவியில் முதன் முறையாக தவம் செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டும். அது எப்படி முடிந்தது? அது முடியும் என்றால், இப்போது ஏன் முடியாது என்ற வாதம் ஞாயமானது.
இதற்கு மற்ற உரை ஆசிரியர்கள் தவ வேடம் என்பது தவம் செய்தவர்களுக்கே ஒத்து வரும். தவம் செய்யாதவர்கள், அந்த தவ வேடத்தைப் போடுவது பலன் தராது என்று பொருள் சொல்கிறார்கள்.
அதாவது, காவி உடுத்து, ஜடா முடி வைத்து கொண்டு, தவம் செய்யாமல் இருந்தால், அது போலிச் சாமியார் போல இருக்கும். சரி வராது என்கிறார்.
அது உண்மைதான் என்றாலும், அதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படி சிந்தித்தால் என்ன?
சிலருக்கு வாழ்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நல்ல உணவு, இனிய இசை, நல்ல உடை, உல்லாச பயணம், என்றெல்லாம் ஆசை இருக்கும். அது அவர்களின் இயற்கை குணம். சிலருக்கு இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன, நாம் ஏன் பிறந்தோம், மரணம் என்றால் என்ன, மரணத்தின் பின் என்ன ஆகும், என்ற கேள்விகளுக்கு விடை காணுவதில் ஆர்வம் இருக்கும்.
ஏன் ஒருவர் புலன் இன்பங்களின் பால் போகிறார் இன்னொருவர் உண்மையைத் தேடிப் போகிறார்? வள்ளுவர் சொல்கிறார் அவை முன் செய்த தவத்தின் காரணமாக என்று.
புலன் இன்பங்களில் நாட்டம் உள்ளவர்கள், நானும் தவம் செய்யப் போகிறேன் என்று இறங்கினால் அது பலன் தராது என்கிறார். தவம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இயற்கையாகவே எழ வேண்டும்.
இன்னொரு விதமாக சிந்திக்கலாம்.
தவம் என்பது தனக்குத் தானே ஒருவன் செய்து வருவது. ஒரு ஆளைப் பிடித்து நீ தவம் செய், சாமியாராக மாறு, நீதான் அடுத்த மடாதிபதி, என்று ஆக்க முடியாது. அவருக்கு அதில் நாட்டம் இல்லை என்றால், அவரை தவம் செய்ய வைக்க முயலக் கூடாது. வலுக்கட்டாயமாக செய்யச் சொன்னால், அது பலன் இன்றி முடியும் என்கிறார்.
இவை என் சிந்தனையில் ஓடியவை. சரியா தவறா என்று தெரியவில்லை. உரை ஆசிரியர்கள் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.
உங்கள் சிந்தனையில் தோன்றியதை நீங்கள் விரும்பினால் பதிவு செய்யலாம்.
ஐயா வணக்கம் .
ReplyDeleteதவம் பற்றி எங்கள் கருத்தைக் கேட்டீர்கள் . நன்றி .
தாங்கள் அறியாத ஒன்றா !
பரிமேலழகர் சொல்வாரே :
அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.
என்று . அதுவே நான் ஏற்றேன் ஐயா . தாங்கள் காட்டியதே இதுவும் ,
வணக்கம்
பணிவுடன்
திருநாவுக்கரசு
கடலூர் .