கம்ப இராமாயணம் - உயிரினும் இனியாளை
சீதையைத் தேடிக் கொண்டு அனுமன் இலங்கையை சுற்றி வரும் வேளையில், இறுதியில் இராவணன் அரண்மனையை அடைகிறான்.
அனுமன் நினைக்கிறான், "என் நாயகன் இராமனின் உயிரை விட இனியவளை கொண்டு வந்த இராவணன் அவளை ஒரு மிக உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறான்" என்று.
அனுமனுகுத் தெரியாது சீதை அசோகவனத்தில் இருக்கிறாள் என்று. அவனே நினைத்துக் கொள்கிறான் சீதை இந்தப் பெரிய அரண்மனையில் இருக்கிறாள் என்று.
பாடல்
கண்டு,கண்ணொடும் கருத்தொடும் கடாவினன்,
காரணம்கடைநின்றது
உண்டு வேறுஒருசிறப்பு; எங்கள் நாயகற்கு
உயிரினும்இனியாளைக்
கொண்டுபோந்தவன் வைத்தது ஓர் உறையுள் கொல்?
குலமணிமனைக்கு எல்லாம்
விண்டுவின்தடமார்பினின் மணி ஒத்தது
'இது' எனவியப்புற்றான்.
பொருள்
கண்டு = பார்த்து
கண்ணொடும் = கண்ணாலும்
கருத்தொடும் = மனத்தாலும் (சிந்தித்து)
கடாவினன் = செலுத்தினான். கண்ணால் பார்த்து, சிந்தையை செலுத்தி சிந்தித்தான்.
காரணம் = பொருள்
கடை நின்றது = இறுதியில் புரிந்தது
உண்டு வேறுஒருசிறப்பு = இங்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது
எங்கள் நாயகற்கு = என்னுடைய நாயகனான இராமனின்
உயிரினும்இனியாளைக் = உயிரை விட இனியவளை
கொண்டு போந்தவன் = தூக்கிக் கொண்டு வந்தவன்
வைத்தது = வைத்து இருப்பது
ஓர் உறையுள் கொல்? = இந்த இடமாக இருக்குமா ?
குலமணி = சிறந்த மணிகள்
மனைக்கு = (பதிக்கப்பற்ற) வீடுகள்
எல்லாம் = அனைத்தையும் விட
விண்டுவின் = விஷ்ணுவின்
தட மார்பினின் = பெரிய மார்பில் ஒளி விடும்
மணி ஒத்தது = (கௌத்துப) மணி போல சிறந்தது
'இது' = இந்த மாளிகை
என வியப்புற்றான். = என்று வியந்தான்
வாழ்க்கையில் நெருக்கடிகள், பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். எல்லாம் தீர்ந்த பின் நிம்மதியாக இருப்போம் என்று நினைக்கக் கூடாது. அது ஒரு போதும் தீராது.
ஆயிரம் பிரச்சனைகளுக்கு இடையேயும், வாழ்க்கையில் நடக்கும் நல்லவற்றை இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு புறம் இராமன் மனைவியைப் பிரிந்து தவிக்கிறான்.
இன்னொரு புறம் சீதை கடத்தி வரப் பெற்று சிறை இருக்கிறாள்.
அனுமன் அவளை இன்னும் காணவில்லை.
சிக்கலான இடம்.
கம்பன் நினைத்து இருந்தால், இதை எல்லாம் விட்டு விட்டு நேரே அசோக வனத்துக்குப் போய் இருக்கலாம். இல்லை, வாழ்கையை இரசித்துக் கொண்டே போகிறான். நல்லதை பார்த்து வியப்பதும், அதை பாராட்டுவதும் நடக்க வேண்டும்.
வர்ணனணைகள் பொழுது போகாமல் எழுதுவது அல்ல.அவை சொல்லும் பாடம் "வாழ்கையை இரசி ...பிரச்சனைகள், சங்கடங்கள், துன்பங்கள் இருக்கத்தான் செய்யும்."
அருமை அருமை
ReplyDelete