பெரிய புராணம் - மனிதப் பிறவியின் நோக்கம்
https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post.html
மனிதர்களுக்கு விலங்குகளுக்கும் உள்ள பெரிய வேற்றுமை என்று சொன்னால், மனிதன் சிரிக்கத் தெரிந்தவன், விலங்குகளுக்கு சிரிக்கத் தெரியாது என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
அது மட்டும்தான் வேறுபாடா?
மனிதர்களால் சிந்திக்க முடியும். விலங்குகளும் சிந்திக்கும். மனிதன் அளவுக்கு இல்லை என்றாலும் அடிப்படை சிந்தனை இருக்கிறது. எதிர்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைக்கின்றன, கூடு கட்டுகின்றன, குஞ்சுகளை பாதுகாக்கின்றன, குட்டிகளுக்கு இரை தேடித் தருகின்றன.
இருந்தும்,
அவற்றின் சிந்தனை ஒரு எல்லையில் நின்று விடுகிறது. மனிதனின் சிந்தனை விரிந்து கொண்டே போகிறது. அதற்கு ஒரு எல்லை இல்லை.
எதை அடைய இந்த பிறவி நமக்கு கிடைத்து இருக்கிறது என்று மனிதன் சிந்திக்கிறான். பொருள் சேர்க்கவா? இன்பங்களை அனுபவிக்கவா? அதிகாரம் செய்யவா? இன விருத்தி செய்யவா? என்று கேட்டுக் கொண்டே போன மனிதனுக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்தது.
இவை எல்லாம் அழியக் கூடியன. செல்வம், இளமை, அதிகாரம், செல்வாக்கு, உறவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவை. இன்று இருக்கும், நாளை போகும். அவற்றை அடைவதால் என்ன பயன். நாளை நம்மை விட்டுப் போய் விடும். அதற்காக நேரத்தை செலவழிப்பானேன் என்று நினைத்த மனிதன், இறுதியாக ஒன்றை கண்டு கொண்டான்.
என்ன ஆனாலும் சரி, அழியாத, மாறாத, நிரந்தரமான ஒரு உறுதியான பொருளை அடைவதுதான் பிறவியின் நோக்கம். அது என்ன என்று சிந்திக்கத் தலைப்பட்டான்.
அதை எப்படி அடைவது என்று சிந்தித்து, சிந்தித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இறைவனின் திருவடிகளே உறுதியான பொருள். அதை அடைவதான் பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான்.
பாடல்
ஊன டைந்த உடம்பின் பிறவியே
தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழிற் றில்லையுள்
மாந டஞ்செய் வரதர்பொற் றாடொழ.
பொருள்
ஊன டைந்த = ஊனை அடைந்த, பெற்ற
உடம்பின் = இந்த உடம்பின்
பிறவியே = பிறவியின் நோக்கம் என்பது
தான டைந்த = தான் இந்தப் பிறவியை அடைந்ததின்
உறுதியைச் = நோக்கம் என்பது உறுதிப் பொருளை
சாருமால் = சார்ந்து இருப்பதே. அதை எப்படி அடைவது என்றால்
தேன டைந்த = தேன் நிறைந்த
மலர்ப் = மலர்கள் உள்ள
பொழிற் றில்லையுள் = சோலைகள் உள்ள தில்லையில்
மாந டஞ்செய் = பெரிய நடனம் செய்யும்
வரதர் = வரம் தருபவர் (சிவன்)
பொற் றாடொழ = பொன் போன்ற பாதங்களைத் தொழுவதே
அதை விட்டு விட்டு மற்றதெல்லாம் தேவை இல்லாத ஒன்று என்கிறார் சேக்கிழார் பெருமான்.
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்
என்பார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
படி. நிறைய படி. படிக்க படிக்க, வரும் ஞானம் உன்னை இறைவனிடம் இட்டுச் செல்லும்.
இதையே அப்பரடிகளும்
"...இனித்தமுடன் எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே"
என்பார். இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால், மனித பிறவி வேண்டும்.
ஞானம் என்பது தமிழ் படிப்பதாலோ, பக்தி இலக்கியம் படிப்பதாலோ மட்டும் வருவது அல்ல. எந்தத் துறையில், எதைப் படித்தாலும், அது முடிவில் இறைவன் திருவடிகளையே சென்று அடையும் என்பது அவர்கள் முடிவு.
பயணத்தை தொடங்குவோம். முடிவு வரும் போது வரட்டும்.
சிந்திக்கத் தூண்டும் கருத்துரை. நன்றி.
ReplyDeleteஅழகாக விளக்கி உள்ளீர்கள். சேக்கிழாருடன் நிற்காமல் மற்ற தெய்வ புலவர்களுடைய அதையே சார்ந்த சிந்தனைகளையும் மேற்கோள் காட்டியுள்ளது சிறப்பாக உள்ளது.
ReplyDelete