கந்தர் அநுபூதி - அறிவு
நாம் அறிவு என்று எதைச் சொல்கிறோம்? எதையாவது ஒன்றிற்கு பேர் வைத்து விட்டால் அது அறிவு என்கிறோம்.
உதாரணமாக, நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்கிறோம். பெரிய அறிவாளி, அதைக் கண்டு பிடித்தவர் என்கிறோம்.
மரத்தில் இருந்து ஆப்பிள் விழுகிறது. ஏன் விழுகிறது என்று தெரியவில்லை. ஆனால், அப்படி விழுவதற்கு பெயர் புவி ஈர்ப்பு விசை என்று பெயர் வைத்தார்.
தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கிறது? அதில் குளோரோபில் என்ற ஒரு பொருள் இருக்கிறது. எனவே பச்சையாக இருக்கிறது. ஏன் குளோரோபில் பச்சையாக இருக்கிறது என்று கேட்டால் பதில் இல்லை.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கும் பெயர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு இந்த உலகம் பற்றி என்ன தெரியும்?
அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்.
உங்கள் பெயர், உங்கள் படிப்பு, நீங்கள் செய்யும் வேலை இந்த மூன்றும் இல்லாமல் உங்களை மற்றவர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?
அது இது என்ற பெயர்களைத் தாண்டி பொருளில் என்ன இருக்கிறது? உலகில் என்ன இருக்கிறது? அது உண்மையான அறிவு.
அந்த அறிவு யாருக்கு வரும்?
அப்படிப்பட்ட அறிவாளிகள், ஞானிகள் எப்படி இருப்பார்கள்? அந்த ஞானத்தை அடைந்தால் நாம் எப்படி இருப்போம்?
இவற்றை விளக்குகிறார் அருணகிரியார்.
பாடல்
அறிவொன்றற நின்றறிவா ரறிவிற்
பிறிவொன்றற நின்ற பிரானலையோ
செறிவொன்றற வந்திருளே சிதைய
வெறிவென்ற வரோறுேம் வேலவனே .
அறிவு ஒன்று அற நின்ற அறிவார் அறிவில்
பிறிது ஒன்று அற நின்ற பிரான் நீ அலையோ
செறிவொன்று அற வந்த இருளே சிதைய
வெறி வென்றவர் உறும் வேலவனே .
பொருள்
அறிவு ஒன்று = புற அறிவுகள், உலகப் பொருள்களைப் பற்றிய அறிவுகள்
அற = நீங்க
நின்ற அறிவார் அறிவில் = நிலைத்து நிற்கும் அறிவால் அறிவார்
பிறிது ஒன்று அற = உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத
நின்ற பிரான் = நிலைத்து நிற்கும் பிரான்
நீ அலையோ = நீ அல்லவா
செறிவொன்று அற = செறி என்றால் அடர்ந்த. ஞானத்தை மூடி மறைக்க.
வந்த இருளே சிதைய = வந்த அஞ்ஞானம் என்ற இருள் விலக
வெறி = காமம், கோபம் போன்ற வெறித்தனமான உணர்வுகளை
வென்றவர் = வென்ற ஞானிகள்
உறும் வேலவனே = அடையும் வேலவனே
என்ன சொல்ல வருகிறார்?
உலக அறிவு மாறிக் கொண்டே இருக்கும். இன்று இருப்பது நாளை இருக்காது. புதிதாக வேறு ஒன்று வந்து விடும். இவற்றின் பின்னால் போனால், அதற்கு ஒரு முடிவே இல்லை.
மாறாத, நிலைத்த ஞானம் ஒன்று இருக்கிறது. அதை அடைய வேண்டும். அது எப்போது வரும் என்றால், காமம், குரோதம், போன்ற உணர்வுகள் விலகி மனம் அமைதி அடைந்தால் வரும். அப்படி, அந்த நிலையை அடைந்தவர்கள் வணங்கும் வேலவனே என்று அவனைத் துதிக்கிறார்.
எது உண்மையான அறிவு என்று சிந்திக்க வைக்கிறார்.
No comments:
Post a Comment