Pages

Friday, August 23, 2024

திருக்குறள் - வன்கணார் இல்

 திருக்குறள் - வன்கணார் இல் 


ஒரு குழந்தை ஏதோ ஒரு இனிப்புப் பண்டம் தின்று கொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தையை ஒருவன் ஏமாற்றி அதன் கையில் உள்ள இனிப்பை பிடுங்கி தான் தின்றால் என்றால் அவனை பற்றி நாம் என்ன நினைப்போம்?


சரியான அரக்கனா இருக்கானே, சின்ன பிள்ளையை ஏமாற்றி பிடுங்கித் தின்கிறானே, இவன் எல்லாம் ஒரு மனுஷனா, ஒரு ஈவு இரக்கம் இல்லையா, சீ, இப்படியும் ஒரு பிழைப்பா என்று அவனை நிந்தனை செய்வோம் அல்லவா? 


அதே போல், அப்பாவி மக்களை ஏமாற்றி, "நான் பெரிய துறவி, சொர்கத்துக்கு வழி காட்டுகிறேன், முக்தி தருகிறேன்" என்றெல்லாம் சொல்லி அவர்களிடம் உள்ள பொருள்களை பறித்துக் கொள்ளும் போலிச் சாமியார்களைப் போன்ற கொடுமைக்காரர்கள் இந்த உலகில் இல்லை.


என்கிறார் அள்ளுவர். 


பாடல் 


நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்


பொருள் 


நெஞ்சில் துறவார் = மனதால் துறக்க மாட்டார்கள் 


துறந்தார்போல் = ஆனால் முற்றும் துறந்த்வராய் போல் 


வஞ்சித்து = அப்பாவி, ஏழை மக்களை வஞ்சனை செய்து, அவர்களிடம் உள்ள பொருள்களை பறித்துக் கொண்டு 


வாழ்வாரின்  = வாழ்பவர்களைப் போன்ற 


வன்கணார் = கொடியவர்கள், கெட்டவர்கள் 


இல் = இல்லை. 


வஞ்சனை என்று ஏன் சொன்னார் என்றால், 


முதலாவது, துறவி ஆகாமலேயே துறந்துவிட்டேன் என்று பொய் சொல்லியதால். 


இரண்டாவது, கோவில் கட்ட வேண்டும், யாகம் செய்ய வேண்டும், அன்னதானம் செய்ய வேண்டும் என்று சொல்லி மக்கலியம் இருந்து பணம் வசூலிப்பது.


மூன்றாவது, ஏதோ தாங்கள் பெரிய ஆள் போலவும், மற்றவர்கள் எல்லாம் தன்னை விட தாழ்ந்தவர்கள் என்றும் நினைப்பது. அது உண்மை அல்ல. அவர்கள் உழைத்து சம்பாதிக்கிறார்கள். இவர் உழைப்பே இல்லாமல் பொய் சொல்லி சம்பாதிக்கிறார். 


அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதால், அப்படிப்பட்ட போலிச் சாமியார்களைப் போன்ற கொடுமைக்கார்கள் யாரும் இல்லை என்றார். 


வள்ளுவர் காலத்திலேயே இப்படிப்பட்ட போலிச் சாமியார்கள் இருந்து இருக்கிறர்கள் என்றால் இப்போது கேட்கவே வேண்டாம். துறவிக்கு எதற்கு பணம்?  விட்டவந்தானே துறவி. அப்புறம் என்ன நன்கொடை, உண்டியல், கணக்கு, வழக்கு, சொத்து எல்லாம். 


உண்மையான துறவி எப்படி இருப்பான் என்று பட்டினத்தடிகள் சொல்லுவார்


பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் 

நாய் போல் அருந்தி, நரி போல் உழன்று, நன் மங்கையரைத் 

தாய் போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி

சேய் போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!


குழந்தை மாதிரி இருப்பார்களாம். 


மடம், ஆள், அம்பு, சேனை, பல்லக்கு, வாகனம், மூன்று வேளை மூக்குப் பிடிக்க உணவு, கையில் காலில் தங்க நகைகள்...இதெல்லாம் துறவின் இலட்சணமா?


தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு. யார் எப்போது அழாக இருப்பார்கள் என்று...


ஆண்கள் படித்தால் அழகு 

பெண்கள் மணந்தால் அழகு 

துறவிகள் மெலிந்தால் அழகு 

நான்கு கால் பிராணிகள் கொழுத்தால் அழகு 


துறவிகள் மெலிந்து இருக்க வேண்டும். நல்ல வாட்ட சாட்டமா இருந்தால் அவன் துறவி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும். 







2 comments:

  1. நல்ல வாட்டசாட்டமாக இருந்தால் அவன் துறவி அல்ல என்பது தற்கால துறவிகளுக்கு பொருந்தாது. ஊர் ஊராக சுற்றும் துறவிகள் மிகவும் குறைவு. தாங்களாகவே ஆசிரம் அமைத்தோ அல்லது அன்பர்களால் கவனிக்கப்படும் துறவிகள் தியானத்திலும் யோக பயிற்சிகளாலும் உடலை நன்கு பராமரித்து, மக்களுக்கும் நன்மை செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. இரண்டாவதாக எழுதிய "பேய் போல் திரிந்து" என்ற பாடல் அருமையாக இருக்கிறதே. அதை எழுதியவர் யார்?

    ReplyDelete