திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள்
https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post.html
ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும்?
கதை புத்தகம் என்றால் எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
பாட நூல்கள், அறிவு நூல்கள், அற நூல்கள் போன்றவற்றை எப்படிப் படிப்பது?
ஏன், அதில் என்ன சிக்கல்? மற்ற நூல்களைப் போல அவற்றையும் படிக்க வேண்டியதுதானே? புரியாவிட்டால் அகராதி, இன்டர்நெட் எல்லாம் இருக்கே. அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று நாம் நினைக்கலாம்.
சரி, தெரிந்து கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அது சரிதானா என்று எப்படி அறிவது? நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கிறோம். அதுதான் சரி என்று நம் வாழ்வை நடத்தலாம். ஒரு வேளை நம் புரிதல் தவறாக இருந்து விட்டால்? வாழ் நாள் பூராவும் தவறாகவே வாழ்ந்திருப்போம் அல்லவா? எவ்வளவு பெரிய தவறு அது.
உயரிய நூல்களை ஒரு சிறந்த ஆசிரியர் மூலம் படிக்க வேண்டும் என்று நம் முன்னவர்கள் நினைத்தார்கள். தானாக படித்துத் தெரிந்து கொள்ள முடியாது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
வள்ளுவர் சொல்கிறார் "நான் மெய்யாக கண்டவற்றில் வாய்மையை விட சிறந்த ஒன்றும் எதுவும் இல்லை" என்று.
பாடல்
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.
பொருள்
யாமெய்யாக் = யாம் மெய்யாக
கண்டவற்று ளில்லை = கண்டவற்றுள் இல்லை
யெனைத்தொன்றும் = வேறு ஒன்றும்
வாய்மையி னல்ல பிற = வாய்மையைத் தவிர பிற ஒன்று.
நாம் படித்துக் கொண்டு போனால், "சத்தியமாகச் சொல்கிறேன். வாய்மைதான் உயர்ந்த அறம்" என்று வள்ளுவர் கூறுவதாக நினைத்துக் கொண்டு மேலே போய் விடுவோம்.
பரிமேலழகர் போன்ற உயர்ந்த உரை ஆசிரியர்கள் மூலம் படிப்பதன் மூலம் இதில் எவ்வளவு நுண்ணிய, ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது என்று புரியும்.
"மெய்யா" என்பதற்கு என்ன அர்த்தம்? உண்மையாக, சத்தியமாக என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார் "மெய் நூல்களாக கண்டவற்றுள்" என்று. உலகில் எவ்வளவோ உண்மை பற்றி ஆராய்ந்து சொல்லும் நூல்கள் இருக்கின்றன. அந்த அனைத்து நூல்களிலும் என்கிறார்.
எதுக்கு அனாவசியமா நேரத்தை வீணாக்குகிறாய். நான் எல்லா நூல்களையும் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்கிறார் வள்ளுவர்.
அது சரி, மெய் நூல்கள் என்றால் என்ன என்ற கேள்வி வரும் அல்லவா? ஆளாளுக்கு ஒரு நூலை கொண்டு வருவார்கள். இதுதான் உண்மையான மெய் நூல் என்று. எப்படி இனம் காண்பது?
பரிமேலழகர் சொல்கிறார். பிரமிக்க வைக்கிறது.
"தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள்"
அவர் உரைக்கு, நாம் உரை காணவேண்டும். ...:)
"தம்கண் மயக்கம் இன்மையின்" - அதாவது தனக்கு ஒரு குழப்பமும் இல்லாமல். எது சரி, எது தவறு என்ற குழப்பம் எதுவும் இல்லாமல்.
"பொருள்களை" உலகில் உள்ள பொருள்களை
உள்ளவாறு உணரவல்லராய்க் = அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே உணர வல்லவர்கள்.
காம வெகுளிகள் இன்மையின் = காமமும், கோபமும் இல்லாமல். அதாவது விருப்பு, வெறுப்பு, இல்லாமல்
அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் = அந்தப் பொருள்களை உண்மையாக உணர்ந்தது மட்டும் அல்ல, உணர்ந்தவாறே சொல்லவும். சிலருக்கு உண்மை தெரியும். இருந்தாலும், சுய இலாபம் கருதி உண்மையை மறைத்து, திரித்துச் சொல்லி விடுவார்கள். அப்படி அல்லாமல்.
வல்லராய = திறமை உள்ளவர்களாக
இறைவர் = அப்படி இருக்கக் கூடியவர் உலகிலேயே ஒருவர்தான். அவர்தான் கடவுள்.
அருளான் = அந்தக் கடவுளின் அருள் பெற்ற
உலகத்தார் = உலகில் உள்ளவர்கள்
உறுதி = நிலையான வீடு பேறு
எய்துதற் பொருட்டுக் = அடைவதற்காக
கூறிய ஆகமங்கள் = கூறப்பட்ட ஆகமங்கள்
அதாவது, இறை அருள் பெற்ற பெரியவர்கள், சான்றோர்கள், , உலக மக்கள் நன்மை அடையும் படி சொல்லப்பட்ட ஆகம நூல்கள்தான் மெய்யான நூல்கள் என்கிறார்.
அப்படி என்றால், மற்றவை உண்மையை எடுத்துச் சொல்லும் நூல்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட அனைத்து மெய் நூல்களிலும், வாய்மையை விட உயர்ந்த அறம் ஒன்றும் இல்லை என்கிறார்.
கவனிக்க வேண்டியது, மெய் நூல்கள் பல இருக்கின்றன. நான் படிக்கும் நூல்தான் மெய் நூல் என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் நினைக்கக் கூடாது. வள்ளுவர் அவற்றை எல்லாம் படித்து இருக்கிறார்.
இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் தெரிந்தே இருக்காது.
எனவே, உயரிய நூல்களை ஆசிரியர் துணை கொண்டு அணுகுவது நலம்.
வாய்மை அதிகாரம் முற்றிற்று.
No comments:
Post a Comment