Pages

Monday, December 29, 2025

திருக்குறள் - இறந்தார், துறந்தார்

திருக்குறள் - இறந்தார், துறந்தார் 


மனிதர்களை பல வகைகளில் வகைப் படுத்தலாம். 


ஏழை, பணக்காரன்,

நல்லவன், கெட்டவன் 

படித்தவன், முட்டாள் 


என்று ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்கு மக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 


வள்ளுவர், இன்னொரு வழி சொல்கிறார். 


சினத்தின் எல்லையில் இருப்பவன் ஒருபக்கம்.

சினத்தை அறவே விட்டவன் மறுபக்கம். 


நாம் எந்தப் பக்கத்துக்கு அருகில் இருக்கிறோம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


நமக்கு நல்ல உடல் இருக்கிறது. உறுப்புகள் எல்லாம் சரியாக வேலை செய்கிறது. மூளையும் மனமும் நன்றாக இயங்குகிறது. 


இறந்த ஒருவனுக்கு இவை எல்லாம் வேலை செய்வது இல்லை. 


ஒருவனுக்கு கோபம் வந்து விட்டால், அவன் அறிவு வேலை செய்வது இல்லை. அவன் அவயங்கள் அவன் கட்டுக்குள் இருப்பது இல்லை. எல்லாம் இருந்தும் அவன் ஒன்றும் இல்லாத பிணத்துக்கு சமம் என்கிறார் வள்ளுவர். 


சினத்தின் எல்லையில் இருப்பவன், செத்த பிணத்துக்கு ஒப்பானவன் என்கிறார். 


சரி, சினத்தை அறவே விட்டவன் ? 


அவன் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவன். சினத்தை துறந்ததால் அவனை அனைவரும் விரும்புவார்கள். அவன் அறிவு இழந்து தவறு செய்ய மாட்டான். எனவே அவன் இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடைவான். என்கிறார். 


பாடல் 

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை


பொருள் 



இறந்தார் இறந்தார் அனையர் = இங்கே உள்ள இரண்டு இறந்தார் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. பொதுவாக பெரும்பாலோனோர் சொல்லும் விளக்கம் முதல் இறந்தார் என்ற வார்த்தைக்கு மிகுதியான என்றும் இரண்டாவது இறந்தார் என்ற வார்த்தைக்கு இறந்தவர் என்றும் பொருள் சொல்கிறார்கள். 


அதாவது, "இறந்தார் அனையர்" என்றால் இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று பொருள். அதில் குழப்பம் இல்லை. 


"இறந்தார் இறந்தார் அனையர்" என்றால் சினத்தை மிகுதியாக உள்ளவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று பொருள் சொல்கிறார்கள். 



சினத்தைத் துறந்தார் = சினத்தை விட்டவர்கள்  


 துறந்தார் துணை = முற்றும் துறந்த துறவிகளுக்கு ஒப்பானவர்கள்.


இதோடு, வெகுளாமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது.