Wednesday, December 31, 2025

திருவெம்பாவை - செங்கணவன்பால்

 திருவெம்பாவை - செங்கணவன்பால்



இந்தத் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி போன்ற பாடல் தொகுதிகளைப் படிக்கும் போது, இதில் என்ன சொல்ல வருகிறார்கள். 


தூங்கும் பெண்களை எழுப்பி கோவிலுக்குப் போவோம் என்று சொல்லுவது ஒரு செய்தியா. அதை ஏன் இந்த தமிழ் உலகம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சரி, தோழிகள் எல்லோரும் குளித்து, கோவிலுக்குப் போய் இறைவனை வழிபட்டார்கள். அதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?


ஏதோ ஒன்று இருக்க வேண்டும். 


சாவிகளை வைத்துக் கொண்டு பூட்டைத் தேடிக் கொண்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் வரும். 


இந்தப் பாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை என்ன சொல்ல வருகின்றன என்று தெரியவில்லை. 


ஒரு வேளை இப்படி இருக்குமோ?


ஏதோ பிறந்தோம், என்ன ஏது என்று புரிவதற்குக்குள் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஒரு பத்து பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. 


படிச்சாச்சு, அடுத்து என்ன? வேலை தேட வேண்டும். வேலை கிடைச்சாச்சு. 


காலையில் எழுந்து வேலைக்குப் போக வேண்டும், மதியம் உணவு, மாலை வீடு வர வேண்டும், மீண்டும் நாளை இதே வேலை, உணவு, வீடு என்று ஒரு முப்பது வருடம் போகிறது. 


ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்துக்குப் போகலாம். வேலை ஒன்றுதான். 


இதில் நடுவில் திருமணம், பிள்ளைகள் என்று அது ஒரு பாகம் ஓடிக் கொண்டு இருக்கும். 


எதுவும் நம் கையில் இருப்பது இல்லை. சாவி கொடுத்த பொம்மை மாதிரி ஓடிக் கொண்டே இருக்கிறோம். 


தூக்கத்தில் நடப்பவர்கள் எப்படி எங்கே போகிறோம், எதற்குப் போகிறோம் என்று தெரியாமல் நடந்து போவதைப் போல, போய் கொண்டே இருக்கிறோம். 


ஒரு நாள் உடம்பு முடியாமல் போய் விடுகிறது. என்ன நடந்தது என்று விழித்துப் பார்க்கிறோம். 


நாட்கள், வாரங்கள்,மாதங்கள், வருடங்கள் உருண்டோடி இருக்கும். மனமும் உடலும் வலு இழந்து இருக்கும். என்ன செய்வது என்ற திகைப்பாய் இருக்கும். 


அந்த நிலை வருமுன், விழித்துக் கொள்ளுங்கள் என்று நம்மை துயில் எழுப்புகின்றனவா இந்தப் பாடல்கள்?


எல்லோரையும் போல, மந்தை போல் போகாமல், சற்றே விழித்துப் பார், என்ன நடக்கின்றது என்று பார், என்ன செய்கிறாய் என்று பார் என்று நம்மை தட்டி எழுப்புகின்றனவோ என்று தோன்றும். 




பாடல் 


செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்,

எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக,

கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,

அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,

நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.


பொருள்


செங்கணவன்பால் = செம்மை +  கண்களைக் கொண்ட அவன் பால். சிவந்த கண்களை உடைய திருமாலிடம் 


 திசைமுகன்பால் = நான்கு திசைகளைப் பார்க்கும் , நான்கு தலைகளை கொண்ட பிரமனிடம் 


தேவர்கள்பால் = தேவர்களிடம் 


எங்கும்  = எங்கு சென்றாலும் 


இலாததோர் இன்பம் = கிடைக்காத ஒரு இன்பம் 


 நம் பாலதாக = நம்முடையதாக 


கொங்குண் = நறுமணம் வீசும் 


கருங்குழலி = கருமையான குழலை உடைய பெண்ணே 


நந்தம்மைக்  = நம்மை எல்லாம் 


கோதாட்டி = குற்றங்களில் இருந்து நீக்கி 


இங்கு = இங்கே 


நம் இல்லங்கள் தோறும்= நம் எல்லோர் வீட்டிலும் 


எழுந்தருளிச் = வந்து அருளி 


செங்கமலப் = சிவந்த தாமரை போன்ற 


பொற்பாதம் = பொன் போன்ற திருவடிகளை 


தந்தருளும் = தந்து அருளும்


சேவகனை = சேவகனை 


அங்கண் அரசை = அழகிய கண்களை உடைய எம் அரசனை 


அடியோங்கட்கு = அடியவர்களுக்கு 


ஆரமுதை = அருமையான அமுதம் போன்றவனை 


நங்கள் = நம்முடைய 


பெருமானைப் பாடி = பெருமானைப் பாடி 


 நலம் திகழப் = நல்லவை நிகழ 


பங்கயப் பூம்புனல் = தாமரை நிறைந்த குளத்தில் 


பாய்ந்து ஆடு , ஏலோர் எம்பாவாய் = பாய்ந்து, நீராடுவோம், வா பெண்ணே 


இறைவனை தேடுகிறேன் என்கிறார்கள். தேடுகிறேன் என்றால் அவன் எப்படி இருப்பான் என்று தெரிய வேண்டும் அல்லவா? எங்கே தேடுவது? தொலைத்த இடத்தில் தானே தேட முடியும்? எங்கே தொலைத்தார்கள்?  அப்படி என்றால் முதலில் அவர்களிடம் இறைவன் இருந்தானா?


அதெல்லாம் புரியாமல் சொல்லுவது. 


அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான் என்றெல்லாம் நமக்குத் தெரியாது. 


ஆனால், நாம் யார், நாம் எங்கே வசிக்கிறோம், நம் வீட்டு விலாசம் என்ன என்று அவனுக்குத் தெரியும். 


மணிவாசகர் சொல்கிறார், "கவலைப் படாதீர்கள், அவனே நம் எல்லோர் வீடுகளுக்கும் வருவான்" என்கிறார். நாம் தேடிப் போக வேண்டாம். அவனே வருவான். 


"நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி"


அவனிடம் எல்லாம் இருக்கிறது. நம்மிடம் ஒன்றும் இல்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். உள்ளதிலேயே பெரிய பேராசைக்காரர்கள் யார் என்றால் உள்ளதிலேயே பெரிதாக கேட்பவர்கள். 


முக்தி கொடு, கைலாயத்தில் இடம் கொடு, வைகுந்தத்தில் இடம் கொடு மிகப் பெரிதாக கேட்கிறார்கள். கேட்டால் எங்களுக்கு ஆசையே இல்லை என்பார்கள். 


எது எப்படியோ...நாம் கேட்டதை எல்லாம் நமக்கு செய்து கொடுக்கும் சேவகனாக இருக்கிறான் இறைவன் 


ஆதி மூலமே என்று ஒரு யானை கூப்பிட்டால் கூட ஓடோடி வருகிறான். 


பக்தன் எப்போது என்ன கேட்ப்பான் என்று இறைவன் காத்துக் கிடக்கிறான். 


"செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை"


சேவகன் என்றால் வீரன் என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இறைவன் யாரிடம் வீரத்தைக் காட்டப் போகிறான். அவனுக்கு நிகர் யார்?  எனவே, அதை விட்டு விடலாம். அவன் நமக்கு உதவி செய்வான் என்பது சரியாக இருக்கும். 


திருமால், பிரமன், மற்றைய தேவர்களை நாம் தேடிப் போக வேண்டும். சிவன், வீடு தேடி வருவான். 


இது ஏதோ அவர்கள் மோசமானவர்கள், சிவன் நல்ல கடவுள் என்று சித்தரிப்பதாகப் படும். அப்படி அல்ல. 


திருமால், இலக்குமியின் கணவன். அவள் செல்வத்துக்கு அதிபதி. எனவே, திருமாலிடம் போவது என்றால் செல்வத்தைத் தேடிப் போவது. 


பிரமன், கலைமகளின் கணவன். அவள் அறிவுக் கடவுள். எனவே, பிரமனிடம் போவது என்றால் அறிவைத் தேடிப் போவது. 


இப்படி ஒவ்வொரு தேவர்களும் ஏதோ ஒன்றின் அதிபதியாக இருக்கிறார்கள். நாம் அந்த செல்வங்களை நோக்கிப் போய் கொண்டே இருக்கிறோம் என்பது ஒரு குறியீடு. 


அவர்களிடம் இல்லாத ஏதோ ஒரு இன்பம் நமக்குக் கிடைக்கும். 


"எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக"


அப்படி அலையாமல், பேசாமல் வீட்டிலேயே இருங்கள். சிவன் உங்கள் வீட்டுக்கு வருவான். 


புற அழுக்குகளை நீக்கி, மனதை தூய்மைப் படுத்தி, அவனை நினைத்துப் பாடுவோம். அவன் வருவான். 


சொல்வது, மணிவாசகர். 



No comments:

Post a Comment