Showing posts with label நல்லாயிர திவ்ய பிரபந்தம். Show all posts
Showing posts with label நல்லாயிர திவ்ய பிரபந்தம். Show all posts

Monday, September 27, 2021

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - இருமும்பொழுதேத்தி

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - இருமும்பொழுதேத்தி 


குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முதல் திருமொழி, பாசுரம் எண் 653 


பக்தி செய்ய வேண்டும். இறைவனைத் தொழ வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். 


முடியணுமே. எவ்வளவு வேலைகள் இருக்கிறது. அதெல்லாம் செய்து விட்டு, இறை வணக்கம் செய்வது என்பது  ஒரு நடவாத காரியமாகவே படுகிறது. 


சரி, எப்படியோ கொஞ்ச நேரம் ஒதுக்கி இறை வணக்கம் செய்யலாம் என்றால், மனம் எங்கே விடுகிறது. 


ஆயிரம் சிந்தனைகள், கவலைகள், கெட்ட எண்ணங்கள்...ஒன்றை அடுத்து ஒன்றாய் வந்து நிற்கின்றன. இதில் பக்தி எங்கே வரும். 


சரி, எப்படியோ மனதை கொஞ்சம் நிலைப் படுத்தினாலும், புலன்கள் விடுதா? பூஜை செய்யும் சமையல் வாசம் மூக்கைத் துளைக்கிறது, அருகில் யார் வீட்டிலோ உள்ள தொலைகாட்சி அலறுகிறது, அடுத்த வீட்டில் நடக்கும் சண்டை காதில் விழுகிறது...புலன்கள் தூண்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. 


நேரம் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் மனம் ஒன்றுவதில்லை, மனம் ஒன்றினாலும் புலன்கள் விடுவதில்லை...இதில் எங்கிருந்து பக்தி செய்வது?


இதற்குத்தான் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்றால்,  இறை வணக்கம் செய்வதற்கு என்று நேரத்தை ஒதுக்கினார்கள். அதுவும் ஒரு வேலை தான். மற்ற வேலைகளை செய்து முடித்து விட்டு ஒழிந்த நேரத்தில் பக்தி செய்வது என்று இல்லாமல், பக்திக்கு என்று நேரம் ஒதுக்கினார்கள். 


"உன்னுடைய அடியவர்களோடு கூடி, உன்னை நான் காண்பது எந்நாளோ" என்று கண்ணீர் மல்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_27.html


(Please click the above link to continue reading)



மறந்திகழு மனமொழித்து = மறம் திகழும் மனம் ஒழித்து. அறத்துக்கு எதிர் மறம். கோபம், காமம், போர்க் குணங்கள் கொண்ட மனதை மாற்றி 


வஞ்ச மாற்றி  = மனதில் உள்ள வஞ்சகங்களை அகற்றி 


ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி 


யிடர்ப் பாரத் துன்பம் துறந்து = இடர் பாரத் துன்பம் துறந்து = இடர் என்றால் தடை. பாரம் என்றால் பெரிய சுமை. எது பெரிய சுமை? நம் வினைப் பயன்தான் பெரிய சுமை. நினைத்தாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. எவ்வளவு துன்பம் என்றாலும் நாமே தூக்கி சுமக்க வேண்டியது தான். அதையும் துறக்க முடியும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 



இருமுப் பொழுதேத்தி = இரு + முப்பொழுது ஏத்தி. இரண்டு + மூன்று = ஐந்து பொழுதில் இறைவனைத் துதித்து 


யெல்லை யில்லாத் = எல்லை இல்லாத. இங்கே, தொடக்கம் இல்லாத என்று கொள்ள வேண்டும் 


தொன்னெறிக்கண் = பழைய வழியின் கண் 


நிலைநின்ற = நிலையாக நின்ற. எப்போதும் கடை பிடிக்கும் 


தொண்ட ரான = தொண்டர்களான 


அறம் திகழும்  மனத்தவர்தம் = மனதில் எப்போதும் அறம் நிலைத்து நிற்கும் அந்த அடியவர்களின் 


 கதியைப்  = இலக்கை, சென்று அடையும் இடத்தை 


பொன்னி  = காவிரி 


அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


நிறம் திகழும் = கரிய நிறத்தோடு திகழும் 


மாயோனைக் = மாயோனை 


கண்டென்  = கண்டு என் 


கண்கள் நீர்மல்க = கண்களில் கண்ணீர் பெருக 


என்றுகொலோ நிற்கும் நாளே = என்று வணங்கும் நாளோ? 


சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருப்பதால், இதன் தொடர்ச்சியை அடுத்த ப்ளாகில் காணலாம்.