Showing posts with label Thiru Vasagam. Show all posts
Showing posts with label Thiru Vasagam. Show all posts

Tuesday, January 3, 2023

திருவாசகம் - திரு அம்மானை - சேர்ந்து அறியாக் கையானை

             

திருவாசகம் - திரு அம்மானை  -    சேர்ந்து அறியாக் கையானை




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் அவனுக்கும் ஒன்று தெரியாது. அது, இன்னொருவர் முன்னால் கை கூப்புவது. இறைவன் யார் முன்னால் எதற்காக கை கூப்பப் போகிறான். 


மணிவாசகர் சொல்கிறார் "சேர்ந்தறியா கையானை" என்று. 


இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற கேள்வி அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. 


அவன் இருக்கிறான், இல்லாமலும் இருக்கிறான். 


உள்ளதில் அன்பு இருந்தால் அவன் இருப்பது தெரியும். அன்பு இல்லாவிட்டால் இறையை உணர முடியாது. 


அன்பே சிவம். 


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே


என்பார் திருமூலர். 


அன்புதான் சிவம். 



பாடல் 


கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட

மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்

செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


(pl click the above link to continue reading)


கைஆர் வளை சிலம்பக் = கைகளில் அணிந்த வளையல்கள் ஒலிக்க 


 காதுஆர் குழை ஆட = காதில் அணிந்த குழை ஆட 


மைஆர் குழல் புரழத் = மை போல் கறுத்த குழல் அலை பாய 



தேன் பாய = அந்தக் குழலில் சூடிய மலர்களில் இருந்து தேன் பாய்ந்து வர 


வண்டு ஒலிப்பச் = அந்தத் தேனை உருசிக்க வண்டுகள் ரீங்காரம் இட்டு வர 


செய்யானை = சிவந்த மேனி கொண்டவனை 


வெண் நீறு அணிந்தானைச் = திரு வெண்நீறு அணிந்தவனை 



சேர்ந்து அறியாக் கையானை  = இரண்டு கைகளை கூப்பி அறியாதவனை 



எங்கும் செறிந்தானை = எங்கும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனை 


அன்பர்க்கு மெய்யானை  = உள்ளதில் அன்பு உள்ளவர்களுக்கு உண்மையானவனை 



அல்லாதார்க்கு அல்லாத வேதியனை = உள்ளதில் அன்பு இல்லாதவர்களுக்கு அவனும் இல்லாமல் இருப்பவனை 


ஐயாறு அமர்ந்தானைப் = திருவையாற்றில் இருப்பவனை 


 பாடுதும் காண் அம்மானை! = பாடுவோம் அம்மானாய் 







முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


Tuesday, October 7, 2014

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 2


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 


-------------------------------------------------/பாகம் 2 /-----------------------------------------------------------

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

காக்கும் என்னுடைய காவலனே. 
காண்பதற்கு அரிதான பேரொளியே. 

இதில் அர்த்தம் சொல்ல என்ன இருக்கிறது ?

நாம் நம் பிள்ளைகளை வெளியே அனுப்பும் போது "பாத்து போ, சாலையை கடக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்து அப்புறம் கடந்தால் போதும்" என்று சில  பல புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புவோம்.

நாம் நம் பிள்ளைகளை காப்பது நம் வீட்டு வாசல் வரைதான். அதைத்தாண்டி நம்மால் அவர்கள் பின்னாலேயே போய் எல்லா இடத்திலும் அவர்களை பாதுகாக்க முடியாது. 

ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது ?

அங்கங்கே போலீஸ் நிலையம் வைத்து நாட்டுக்குள் அதன் மக்களை காக்கிறது. 

இராணுவத்தின் துணை கொண்டு வெளி நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கிறது. 

நீதி மன்றங்களை நிறுவி கெட்டவர்களை தண்டித்து நல்லவர்களை காக்கிறது. 

எச்சரிக்கை பலகைகளை வைத்து நமக்குத் துன்பம் வராமல் காக்கிறது. 

ஒரு அரசாங்கம் அவ்வளவுதான் செய்ய முடியும். 

ஒரு அரசாங்கத்தின் எல்லை அதன் அரசு உள்ள வரைதான். வெளி நாட்டுக்குப்போய் விட்டால் உள் நாட்டு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. 

பிறப்புக்கு முன், இறப்புக்கு பின் அது ஒன்றும் செய்ய முடியாது. 

இறைவனுக்கு அப்படி ஒன்றும் எல்லை கிடையாது. அவன் எப்போதும் , எல்லா இடத்திலும், எல்லா நிலையிலும் நம்மை காக்கிறான். 

எனவே, காக்கும் என் காவலனே என்றார். 

எல்லா நேரமும் அவன் நம்மை காக்கிறான் என்றால் எங்கே அவன் ? அவனை நாம் கண்டதே இல்லையே 

"காண்பரிய"வன் அவன். காண்பதற்கு அரியவன் அவன். 

ஒரு வேளை காண முடியாத படி ஒரே இருள் வடிவாக இருப்பானோ என்றால் 

"பேரொளி" அவன்.

காண்பரிய பேரொளியே 

அது எப்படி, பேரொளி என்றால் காண முடியாமல் எப்படி இருக்கும் ? 

எவ்வளவு பெரிய ஒளி என்றாலும் நாம் கண்ணை மூடிக் கொண்டால் ஒன்றும் தெரியாது. 

விழித்தால் தானே சூரிய சூரிய ஒளியே தெரியும்.

தூங்குபவனுக்கு பகல் என்ன இரவு என்ன.

கண்ணை மூடிக் கொண்டு சூரியன் ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லுபவர்களை என்ன சொல்ல ?

அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்

திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!


என்பார் மணிவாசகர் திருப்பள்ளி எழுச்சியில்

இறைவன் கருணை சூரிய ஒளி போல் எங்கும் பரவி இருப்பதை அடிகள் காண்கிறார்.


உதிக்கின்ற செங்கதிர் என்று அபிராமியின் முகத்தை கூறுவார் அபிராமி பட்டர்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

கண் விழித்துப் பார்த்தால் தெரியும்.

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்....

மேலும் சிந்திப்போம்




Monday, August 4, 2014

சிவ புராணம் - வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

சிவ புராணம் - வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க 


வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

சிவ புராணத்தில், அடுத்த ஐந்து வரிகள்

வேகம்  கெடுத்து ஆண்ட  வேந்தன் அடி வெல்க 

எல்லாவற்றிலும் ஒரு வேகம். போகும் இடம் தெரிந்த மாதிரி ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். யாரையாவது நிறுத்தி எங்கே போய் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், எல்லோரும் போகிறார்கள் நானும் போகிறேன் என்பதே பதிலாக இருக்கும்.

நம் ஊரில் காய் கறி அங்காடி (மார்கெட்) இருக்கும். அங்கு சில நாய்கள் அலைந்து கொண்டிருக்கும். முதலில் ஒரு வாசலில் இருந்து குறைக்கும். பின் அங்கும் இங்கும் ஓடும். பின் வேறு ஏதோ வாசலில் இன்னொரு நாய் குரைப்பதைக்  கேட்கும். அங்கு ஓடும். அங்குள்ள நாய்களோடு சண்டை போடும். இப்படி நாள் முழுவதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாளின் முடிவில் தளர்ந்து போகும். என்ன செய்து விட்டாய் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது.

மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே என்பார் பட்டினத்தடிகள். 

உடல் அலைவது, ஓடுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மனம் இருக்கிறதே, அது ஒரு கணம் ஒரு இடத்தில் நிற்கிறதா ? ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த ஓட்டத்தை நிறுத்தினால் அல்லவா மனதை எதிலாவது ஒருமுகப் படுத்த முடியும். 

என்ன செய்யட்டும் என்று கேட்ட அருணகிரி நாதரை , ஒண்ணும் செய்யாதே "சும்மா இரு" என்றான் முருகன். 

மணிவாசகர் சொல்கிறார் - என் வேகத்தை கெடுத்து என்னை ஆட்கொண்ட தலைவன் அடி வெல்க  என்கிறார்.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

பிறந்து இறந்து பிறந்து இறந்து என்ற சுழலை நிறுத்தி, அதை வேறோரோடு அறுப்பவன் அவன்.  கிளையை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும். வேரோடு அறுக்க  வேண்டும்.  பிஞ்ஞகன் என்றால் தலைக் கோலம் கொண்டவன் என்று பொருள். ஆகாய கங்கை, பிறைச் சந்திரன், என்று தலையில் கொண்டவன் அவன். 

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

தன்னிடம் வராதவர்களுக்கு அவன் தூரத்தில் நிற்கிறான். சொல்லப் போனால் அவன் அவர்களை விடுவது இல்லை. அவர்கள்தான் அவனை விட்டு விலகிப் போகிறார்கள். புறத்தில் உள்ளவர்களுக்கு சேயோன் (அண்மை என்றால் அருகில். சேய்மை என்றால் தூரத்தில்) அவன். 

கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
   
கரம் குவித்து வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்களுக்கு மகிழ்ந்து அருள் புரிபவன். 


சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க


இறைவன் இருக்கும் இடம் இரண்டு என்று சைவ சித்தாந்தம்  கூறுகிறது. ஒன்று நம் மனம். இன்னொன்று தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குல தூரத்தில் உள்ளது.  இதனால் தான் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வணங்க  வேண்டும் என்று சொல்வது. அது பேரம்பலம், இது சிற்றம்பலம். 

Saturday, April 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை 


விலங்குகளை வலை வைத்துப் பிடிப்பார்கள். வலையில் மாட்டிக் கொண்ட விலங்குகள்  அதில் இருந்து விடுபட துள்ளும், தவிக்கும், தாவும் என்னென்னவோ செய்யும். அது எவ்வளவு முயற்சி செய்கிறதோ, அந்த அளவு மேலும் வலையில் சிக்கிக் கொள்ளும். வலை வைத்தவன் மனது வைத்தால் ஒழிய அந்த விலங்கு வலையில் இருந்து விடு பட முடியாது.

அது போல

இந்த உடல் என்ற  வலையில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உடலில் உள்ள பொறிகள் நாளும் பலப் பல அனுபவங்கள் மூலம் நான் என்ற எண்ணத்தை மேலும் மேலும் வலுப்  படுத்துகிறது. பின், நான் என்ற அகம்பாவத்தில் இருந்து வெளி வர முடியாமல் தவிக்கிறோம்.

அதைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் , ஒரு  கணம் கூட இந்த உடம்பு என்ற வலிமையான வலை தரும் துயரை பொறுக்க முடியாது என்கிறார்.

பாடல்


தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.


பொருள் 

தனித் துணை நீ நிற்க =  தனிச் சிறப்பான துணையான நீ இருக்கும் போது


யான் = நான்

தருக்கி = தலைக் கனம் கொண்டு

தலையால் நடந்த = காலால் நடக்காமல் தலையால் நடந்த

வினைத் துணையேனை = வினைகளையே துணையாகக் கொண்ட  என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வினையேனுடைய = வினை உடையவனான என்

மனத் துணையே = மனதிற்கு துனையாணவனே

என் தன் வாழ் முதலே = என் வாழ்வின் முதலே. (போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பதும் அவர் வாக்கே )

எனக்கு = எனக்கு

எய்ப்பில்= நலிந்த நேரத்தில்

வைப்பே = (கிடைத்த ) சொத்தே

தினைத்துணையேனும் பொறேன் = சிறிது நேரம் கூட பொறுக்க மாட்டேன்

துயர் = துயர் தரும்

ஆக்கையின் = உடம்பின்

திண்  = வலிமையான

வலையே = வலையே