Tuesday, October 13, 2026

திருக்குறள் - கொல்லாமை சூழ்வான் தலை

 

திருக்குறள் - கொல்லாமை சூழ்வான் தலை



இந்தப் பிறப்பு இன்பமானதா? துன்பம் நிறைந்ததா? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள். 


இரண்டும் கலந்ததுதான் என்று சொல்லுவீர்கள். சில சமயம் இன்பம், சில சமயம் துன்பம் இரண்டும் இருக்கிறது என்று தான் பெரும்பாலானோர் சொல்லுவார்கள். 


வள்ளுவரும், அவருக்கு உரை செய்த பரிமேல் அழகரும், அது அப்படி அல்ல. இந்தப் பிறவியானது துன்பமே ஆனது என்கிறார். 


அது எப்படி?  மனைவி/கணவன்/பிள்ளைகள், நட்பு, சுற்றம், உணவு, உடை, ஊர் சுற்றல், இசை, கலை, என்று எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எப்படி துன்பமே என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். 


ஒவ்வொரு இன்பத்தின் கருவிலும், துன்பம் இருக்கிறது. ஒவ்வொரு இன்பமும் துன்பத்தை கூடவே கொண்டு வருகிறது. 


நல்ல உணவு இன்பம்தானே?  இன்பம் தான். ஆனால், அது கூடவே சர்க்கரை வியாதி, உடல் பருமன், என்று பல உபாதைகள் வரும். உடனே வருமா என்றால் இல்லை. ஆனால், வரும். கட்டாயம் வரும். உடல் அத்தனை இன்பத்தையும் அனுபவிக்கிறது. அனுபவிக்க அனுபவிக்க அது தேய்கிறது. நோய் வருகிறது. மூப்பு வருகிறது. வரும் போது தெரியும் அதன் வலி. 


ஆண் பெண் உறவு இன்பம்தான். ஆனால், அதில் உள்ள சிக்கல்கள் எவ்வளவு? 


அதெல்லாம் இருக்கட்டும். இன்பம் இருக்கிறதே என்று வாதம் செய்தால், அவர்களிடம் ஒரு கேள்வி. பிறவி இன்பமானதுதானே, இன்னும் பல பிறவிகள் தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? இன்பமானதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?  இன்னும் ஒரு நூறு பிறவி எடுத்து இன்பங்களை அனுபவிக்கலாமே?  


யாரும் மேலும் மேலும்  பிறவி வேண்டும் என்று சொல்லுவது இல்லை. 


பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், இல்லறத்தை விடுத்து துறவறம் மேற்கொள்கிறார்கள். அப்படி துறவறம் பூண்டோர்களில், கொல்லாமை என்ற அறத்தை கடை பிடிப்பவர்கள், அவர்களுள் தலை சிறந்தவர் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை


பொருள் 


நிலைஅஞ்சி = பிறப்பு என்ற நிலையை அஞ்சி 


நீத்தாருள் = மனை அறத்தை விட்டு நீங்கியவர்களில் 


எல்லாம் =  அவர்களுக்குள் 


கொலைஅஞ்சிக் = பிற உயிர்களை கொல்லுவதை அஞ்சி 


கொல்லாமை = கொல்லாமை என்ற அறத்தை 


சூழ்வான்= கடைபிடிப்பவன் 


தலை = தலையானவன், சிறந்தவன் 


அது என்ன துறவிகளில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உண்டா என்று கேட்டால், "துறவு என்பது ஒன்றுதான் என்றாலும், சமயங்கள் பலவாகலின் அவற்றுள் எல்லாம் தலை" என்று உரை செய்கிறார். 


முதலில் பிறவி துன்பம் நிறைந்தது என்று அறிய வேண்டும். 


அதில் இருந்து விடுபட எண்ண வேண்டும். 


அதற்கு துறவு வழி என்று அறிய வேண்டும். 


துறந்த பின்னும், பிற உயிர்களை கொல்லாமல் இருக்கும் அருள் மனதில் சுரக்க வேண்டும். 


எல்லாம் நடக்கட்டும். 




Monday, October 12, 2026

கம்ப இராமாயணம் - நல் மருந்து போல்

 கம்ப இராமாயணம் - நல் மருந்து போல் 



வாழ்க்கை இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. நிற்க நேரம் இல்லை. பார்த்து இரசிக்க நேரம் இல்லை. யாரிடமும் இருந்து பேச நேராம் இல்லை. எந்நேரமும் ஒரே ஓட்டம். பின் அசதி.


மழையை இரசிக்க, அதிகாலையில் நடக்க, நடக்கும் போது வழியில் உள்ள பறவைகளை பார்க்க, அவற்றின் குரலை கேட்க என்று நேரம் ஒதுக்க முடிவதில்லை. 


இராமாயணம் போன்ற காப்பியங்களை நிறுத்தி, நிதானமாக, ஒவ்வொரு பாடலாக இரசித்துக் கொண்டே போகலாம்.


அவற்றில் உள்ள உணர்சிகள், உவமைகள், கவி நயம், சொல் நயம், ஓசை நயம், என்று இரசிக்க அவ்வளவு இருக்கிறது. 


காப்பிய ஓட்டத்தை பாதிக்காத பகுதிகளை அப்படியே தள்ளி விட்டுப் போய் விடுகிறோம். எத்தனை பேர் யுத்த காண்டம் முழுவதையும் வாசித்து இருக்கிறோம். பொறுமை இருப்பது இல்லை. 


காட்சிப் படலம் என்ற பகுதி மிக சுவையான பகுதி. சோகமான பகுதியும் கூட. 


இங்கே சீதையின் துயரத்தை கம்பன் பிழிகிறான். நம் கண்ணில் நீர் வரும். இராவணன் வருகிறான். சீதையை மிரட்டுகிறான். பின் கெஞ்சுகிறான். திரிசடை ஆறுதல் கூறுகிறாள். இவற்றை எல்லாம் அனுமன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  உணர்ச்சி மிகுந்த பகுதி. 


மெல்ல வாசிப்போமே. என்ன அவசரம்...


அரக்கியர் சூழ்ந்து இருக்க சீதை உடலும் உள்ளமும் நலிந்து இருக்கிறாள். 


பாடல் 



வன்மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு

                                  இருந்தாள்;

கல் மருங்கு,எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா

நல்மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,

மென்மருங்குபோல், வேறு உள அங்கமும்

                                 மெலிந்தாள்.


பொருள் 



வன்மருங்குல்  = மருங்குல் என்றால் இடை. வன் மருங்குல் என்றால் பெரிய இடை. வயிறு பெருத்த உருவம் 


வாள் அரக்கியர் = வாள் போன்ற கூரிய கொடிய அரக்கிகள் 


நெருக்க = அருகில் வர, சுற்றி சூழ்ந்து இருக்க 

 

அங்கு  இருந்தாள் = அங்கே சீதை இருந்தாள் 


கல் மருங்கு = கல்லின், பாறையின் பக்கத்தில் 


எழுந்து = வளர்ந்து 


என்றும் = எப்போதும் 


ஓர் துளி வரக் காணா = ஒரு துளி நீர் கூட வராத 


நல்மருந்துபோல் = நல்ல மருந்து போல 


 நலன் அற = அனைத்து நலன்களும் அற்று 


உணங்கிய நங்கை = மெலிந்த, வற்றிய சீதை 


மென்மருங்குபோல் = மெலிந்த இடை போல் 


வேறு உள அங்கமும் = உடலின் மற்ற பாகங்களும் 


மெலிந்தாள் = மெலிந்து இருந்தாள் 


இடை மெலிந்து இருந்தால் அழகு. உடம்பே மெலிந்து இருந்தால் எப்படி இருக்கும். 


பாறைகளின் நடுவே வளரும் மூலிகை செடி போல, கரிய பெரிய அரக்கியரின் நடுவில் பிராட்டி இருந்தாள்.





Saturday, October 10, 2026

திருக்குறள் - நல்லாறு எனப்படுவது

திருக்குறள் - நல்லாறு எனப்படுவது



உலகில் எவ்வளவோ சமயங்கள் இருக்கின்றன, கோட்பாடுகள் இருக்கின்றன. இதில் எது உயர்ந்தது என்று எப்படி கண்டுபிடிப்பது? யாரைக் கேட்டாலும் அவர்கள் மதம் தான் உயர்த்து என்று சொல்லுவார்கள். அவர்கள் கடவுள்தான் சக்தி வாய்ந்த கடவுள் என்று சொல்லுவார்கள். 


அது உண்மை என்று அவர்கள் நம்பவும் நம்புவார்கள். எப்படி நம் மதம், நம் கடவுள் உயர்ந்ததாக இருக்க முடியும் என்ற கேள்வி அவர்களுக்குள் எழுவது இல்லை. 


வள்ளுவர் ஒரு அறிவியல் பூர்வமான விடை தருகிறார். 


நாம் ஒரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், எந்த வழி சிறந்தது என்று எப்படி கண்டு பிடிக்கிறோம்?  எது சீக்கிரம் கொண்டு போய் சேர்க்குமோ, எதில் போனால் சிரமம் இல்லாமல் போகலாமோ, அந்த வழி சிறந்தது என்று முடிவு செய்து கொள்ளலாம் அல்லவா. 


அது போல, சிறந்த மதம், வழி, கோட்பாடு எது என்று கேட்டால், எந்த நெறி கொல்லாமையை போதிக்கிறதோ அதுவே சிறந்த நெறி என்கிறார். 


ஏன்? கொன்றால் என்ன? என்று கேட்டால், 


நமது வாழ்வின் குறிக்கோள் வீடு பேறு அடைவது. அதாவது இறைவனை அடைவது. அதில் எந்த மதத்துக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 


இறைவனை அடைய வேண்டும் என்றால் அவன் படைத்த உயிர்களை கொல்லாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான். 


பாடல் 



 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி


பொருள் 


நல்லாறு = ஆறு என்றால் வழி. நல்லாறு என்றால் நல்ல வழி.  


எனப்படுவது = என்று சொல்லபடுவது 


யாதெனின் = எது என்றால் 


யாதொன்றும் = எந்த ஒன்றையும் 



கொல்லாமை = கொல்லாமையாகிய அறத்தை 


சூழும் நெறி = பாதுகாக்கும் வழி 


இந்தக் குறளுக்கு பரிமேல் அழகர் மிக நுணுக்கமாக உரை செய்கிறார். 


"நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்,"


என்று உரை செய்கிறார். 


மேற்கதி என்றால் வீடு பேறு. 


குறளில் நல்லாறு என்று தானே சொல்லி இருக்கிறது. வீடு பேறு என்று எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். 


ஆறு என்றால் வழி. 


நல்லாறு என்றால் நல்ல வழி. 


வழி என்றால் எங்கோ செல்வதற்கு உண்டானது. 


நல்ல வழி என்றால் ஏதோ ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். 


உள்ளதுக்குள்ளேயே நல்ல இடம் எது?


இறைவன் திருவடி. எனவே, நாலாறு என்றால் இறைவனிடம் நம்மை கொண்டு சேர்க்கும் வழி என்று அர்த்தம் கொள்கிறார் பரிமேல் அழகர். 


யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.


"யாது ஒன்றும்" என்றால் எந்த உயிரையும். மனித உயிர் மட்டும் அல்ல. அனைத்து உயிர்களையும். 


"கொல்லாமை சூழும் நெறி". கொல்லாதே என்று கூறினால் அது ஒரு மதமாகாது. அது ஒரு கட்டளை. அவ்வளவுதான். திருடாதே, பொய் சொல்லாதே என்று சொல்லுவது மதமாகாது. 


கொல்லாமை என்ற அறத்தை எந்த மதம் கட்டிக் காக்கிறதோ, அந்த மதமே சிறந்த மதம். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள். 





Friday, October 9, 2026

கம்ப இராமாயணம் - வானவர் பூமழை பொழிந்தனர்

 கம்ப இராமாயணம் - வானவர் பூமழை பொழிந்தனர் 

https://interestingtamilpoems.blogspot.com/2026/10/blog-post_09.html



அசோக வனத்தை அடைந்த அனுமன், இங்கும் பிராட்டியை காணவில்லை என்றால் உயிரை விடுவதே சிறந்தது என்று எண்ணிக் கொண்டு அந்த சோலையை அடைகிறான். 


அவன் அங்கே சென்றதும், வானவர் பூ மழை பொழிந்தனர். "அங்கே சீதை இருந்த நிலை பற்றி கூறுவோம்" என்று கம்பர் கவிக் கூற்றாக சீதையின் நிலை பற்றி கூற இருக்கிறார். 


பாடல் 


என்று,சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;

ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்;

அன்று, அவ் வாள்அரக்கன் சிறை அவ் வழி வைத்த

துன்று அல்ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான்

                                  துணிந்தாம்.



பொருள் 


என்று = சீதையைக் இங்கும் காணவில்லை என்றால் உயிரை விடுவது என்று நினைத்துக் கொண்டு 


சோலை புக்கு எய்தினன் = அனுமன் அந்த சோலையை அடைந்தான் 


இராகவன் தூதன் = அடைந்தவன் யார் ? இராம தூதன் 


ஒன்றி = ஒன்றாக 


வானவர் = வானில் உள்ள தேவர்கள் 


பூமழை பொழிந்தனர் = பூ மழை பொழிந்தனர் 


உவந்தார் = மகிழ்ச்சியோடு 


அன்று = அன்று 


அவ் வாள்அரக்கன் = வாளை உடைய அரக்கனான இராவணன் 


 சிறை அவ் வழி வைத்த = சிறை வைத்த 


துன்று அல்ஓதி = கரிய நீண்ட கூந்தலை உடைய சீதையின் 


தன் நிலை = நிலையை 


இனிச் சொல்லுவான் துணிந்தாம் = இனி நாம் எடுத்துச் சொல்லுவோம் 


எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உண்டு. 


இந்த வானவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா? யாராவது எதாவது நல்லது செய்தால், உடனே பூ மாறிப் பொழிவது. இது ஒரு வேலையா என்று. 


ஆழமான அர்த்தம் அதுவல்ல.


நமக்கு வாழ்வில் பல புதிய, பெரிய விடயங்களை தொடங்க தயக்கம், பயம் இருக்கும். 


அது சரியா வருமா? தப்பாக போய் விட்டால், நமக்கோ அதில் அனுபவம் கிடையாது, யார் நமக்கு உதவி செய்வார்கள், ஒரு வேளை சொதப்பி விட்டால் ...என்று ஆயிரம் பயம், தயக்கம் இருக்கும். 


புது வேலையாக இருக்கட்டும், புது இடத்துக்குப் போவதாக இருக்கட்டும், வீடு வாங்குவது, கட்டுவதாக இருக்கட்டும், தொழில் தொடங்குவதாக இருக்கட்டும், புத்தகம் எழுதுவது, இசை படிப்பது...எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும். 


இந்த வயதில், இந்த நிலையில் அது தேவையா என்ற கேள்வி பெரிதாக முன்னே நிற்கும். 


ஆரம்பியுங்கள். செய்யத் தொடங்குகள். நீங்கள் கேட்காமலேயே உதவி வரும். எங்கிருந்து, எப்படி என்று தெரியாது. வரும். நீங்கள் மேலே தொடர தொடர வாய்ப்புகளும், உதவிகளும் வந்து கொண்டே இருக்கும். 


ஒரு நல்ல காரியம் செய்யத் தொடங்குகள்...அறக் கட்டளை,  எளியவர்களுக்கு, வறியவர்களுக்கு உதவி செய்வது என்று ஆரம்பியுங்கள். உதவி தானே வரும். 


தேவர்கள் பூ மாறிப் பொழிந்தார்கள் என்றால், இந்த உலகும், அந்த உலகமும் உங்களை வாழ்த்தி, உங்களுக்கு வலு சேர்க்கும். 


யோசித்துப் பாருங்கள். நீங்கள் தொடங்கி செய்து கொண்டிருக்கும் எவ்வளவோ நல்ல காரியங்கள், தொடங்கும் போது இல்லாத உதவிகள் நாளடைவில் வந்து சேர்ந்து இருக்கும். 


உதவி உங்களைத் தேடி வரும். 


இவ்வளவு மெனக்கெட்டு கம்பர் இந்தப் பாடலை எழுதியதன் நோக்கம் அதுதான். 


Thursday, October 8, 2026

திருக்குறள் - கொல்லாமை, பொய்யாமை எது சிறந்தது ?

 திருக்குறள் - கொல்லாமை, பொய்யாமை எது சிறந்தது ?



வாய்மை என்ற அதிகாரத்தில் வாய்மையே சிறந்த அறம் என்றார். இங்கே, கொல்லாமை என்ற அதிகாரத்தில் கொல்லாமையே பெரிய அறம் என்கிறார். எது உண்மையிலேயே பெரிய அறம் என்ற குழப்பம் வாசகனுக்கு வரும் அல்லவா?  


இங்கே அதை தெளிவு செய்கிறார். 


பாடல் 


ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று


பொருள் 



ஒன்றாக நல்லது = முதல் இடத்தில் வருவது 


கொல்லாமை = கொல்லாமை என்ற அறம் 


 மற்றதன் = மற்றபடி அதன் 

 


பின்சாரப் = பின்னால் வருவது 


பொய்யாமை நன்று = பொய்யாமை என்ற அறம் 


அதாவது பொய்யாமை சிறந்த அறம் தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால், அது கொல்லாமை என்ற அறத்தின் பின்னால் என்கிறார். 


அது எப்படிச் சொல்லலாம் என்றால் 


சில சமயம், பொய் கூட உண்மையாகிவிடும், உண்மை கூட போய் ஆகி விடும். 


பொய்மையும் வாய்மையிடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்  என்று சொல்லி இருக்கிறார். 


நன்மை பயக்கும் என்றால் பொய் கூட வாய்மை என்று கருத இடம் இருக்கிறது. 


ஆனால், எந்த ஒரு காலத்திலும் கொல்லுவது சரியாகாது. இவனைக் கொல்வது, இதைக் கொல்வது சரியா தவறா என்ற சந்தேகமே வரக் கூடாது. கொல்வது என்பது எல்லா காலத்திலும், யார் மாட்டும் தவறுதான் என்பதால், கொல்லாமை ஆகச் சிறந்த அறமாகப் போற்றப் படுகிறது. 


இதையே இன்னொரு விதமாக யோசித்துப் பார்ப்பபோம். 


உயிர் என்பது இறைவனால் தரப்பட்டது. நம்மால் ஒரு உயிரை படைக்க முடியாது. அப்படி இருக்க, ஒரு உயிரை எடுக்கும் அதிகாரம் நமக்கு எப்படி வரும்?  


உயிர் கொலை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 


ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி, கொல்வது சரி என்று நிரூபித்து விட்டால் அது எங்கு போய் முடியும்?  


எனவேதான் கருணைக் கொலை கூட கூடாது என்று கடுமையான சட்ட திட்டங்களைப் போடுகிறார்கள். 


தூக்கு தண்டனை, போன்ற உயிரை எடுக்கும் தண்டனைகளை பல நாடுகள் அங்கீகரிப்பது இல்லை. மரண தண்டனை விதிப்பது கூட மிக மிக அரிதான சமயத்தில்தான் செய்கிறார்கள். முடிந்தவரை தவிர்க்க நினைக்கிறார்கள். 


உயிர் உன்னதமானது. 





Wednesday, October 7, 2026

கம்ப இராமாயணம் - தீரும் என் சிறுமை

 கம்ப இராமாயணம் - தீரும் என் சிறுமை

https://interestingtamilpoems.blogspot.com/2026/10/blog-post.html


இலங்கை எங்கும் தேடித் பார்த்து விட்டு, இறுதியில் , அனுமன் அசோகவனத்தை அடைகிறான். அங்கும் சீதை இருப்பாளா என்று தெரியாது. அனுமன் சோர்ந்து விட்டான். இங்கும் இல்லை என்றால் என்ன செய்வது ? இராமனிடம் சென்று என்ன சொல்லுவது?  சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று எப்படிச சொல்வது? அதை விட இங்கேயே உயிரை விடுவதே மேல் என்று நினைக்கிறான். 


இராமன் மேல் அவ்வளவு காதல், பக்தி. அவன் துன்பத்தை அனுமனால் சகிக்க முடியவில்லை. 


பாடல் 


மாடு நின்றஅம் மணி மலர்ச் சோலையை மருவி,

'தேடி, அவ்வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;

ஊடுகண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;

வீடுவேன், மற்றுஇவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி'.



பொருள் 


மாடு நின்ற = அருகில் உள்ள 


அம்  = அந்த 


மணி மலர்ச் சோலையை மருவி = மணி போல் ஒளி விடும் மலர்கள் நிறைந்த அந்தச் சோலையை அடைந்து 


'தேடி, = அங்கு தேடி 


அவ்வழிக் காண்பெனேல் = அங்கே பிராட்டியை கண்டால் 


தீரும் என் சிறுமை = என் துன்பம் அனைத்தும் தீரும் 


ஊடுகண்டிலென்என்னின் = சோலையின் உள்ளே காணவில்லை என்றால் 


பின், உரியது ஒன்று இல்லை = அப்புறம் செய்வதற்கு ஒன்றும் இல்லை 


வீடுவேன் = உயிரை விடுவேன் 


மற்று = மேலும் 


இவ் விலங்கல்மேல்= இந்த திரிகூட மலையின் மேல் உள்ள 


இலங்கையை வீட்டி = இலங்கையை அழித்து 


விரக்தியின் உச்சம். தன்னையும் அழித்துக் கொண்டு, இலங்கையையும் அழித்து விடுவேன் என்று நினைக்கிறான். 


ஒரு வேலை சொன்னால், அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும். ஏன் முடிக்கவில்லை என்று காரணம் தேடிக் கொண்டு இருக்கக் கூடாது. 


இராமன் சொன்னால் அதைச் செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று நினைக்கிறான் அனுமன். 




 


Tuesday, September 29, 2026

திருக்குறள் - பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

 திருக்குறள் - பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்



கொல்லாமை என்பது ஒரு அறமாகச் சொன்னது நம் தமிழ் மரபு. 


அதிலும் ஒரு படி மேலே போகிறது இன்றைய குறள். 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


அதாவது, நமக்கு கிடைத்த உணவை மற்ற உயிர்களுக்கும் பிரித்துக் கொடுத்து, அவற்றை காப்பது உலகில் உள்ள அனைத்து அற நூல்களிலும் சொல்லப் பட்டவைகளில் தலை சிறந்தது என்கிறது இன்றைய குறள்.


பாடல் 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


பொருள் 



பகுத்துண்டு = பகுத்தல் = பிரித்தல். பிரித்துக் கொடுத்து பின் தான் உண்டல் 


பல்லுயிர் ஓம்புதல் = பல உயிர்களை பாதுகாத்தல் 


நூலோர் = அற நூல்களை செய்தவர்கள் 


தொகுத்தவற்றுள் = தொகுத்துச் சொன்னவற்றுள் 


எல்லாம் தலை = அனைத்திலும் சிறப்பானது 


சற்று உள்ளே சென்று பரிமேலழகர் போன்ற உரை ஆசிரியர்கள் கூறியவற்றை பார்ப்போம். 


பகுத்து உண்டு. 


பல பேர், வீட்டில் மிச்சம்  மீதி உள்ளது, அவர்களால் உண்ண முடியாதது போன்றவற்றை வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுப்பார்கள். அல்லது பிச்சை என்று வருபவர்களுக்கு போடுவார்கள். பழைய சாதம், மூன்று நாள் வைத்து இருந்த உணவுப் பண்டங்கள் போன்றவற்றை. 


அது அல்ல வள்ளுவர் சொல்லுவது. நீ என்ன சாப்பிடுகிறாயோ, அதைப் பிரித்துக் கொடுத்து உண். கொடுபத்திலும் ஒரு அறம் வேண்டும். 


யாருக்குக் கொடுப்பது? அலுவலகத்தில் நம் மேலதிகாரியை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வந்து உணவு தந்து உபசரிப்பது இதில் அடங்குமா என்றால் அது பலன் கருதி செய்யப் படுவது. அது கொல்லாமை என்ற அறத்தில் வராது. 


"பல்லுயிர் ஓம்புதல்"....உயிர்களை பாதுகாக்க வேண்டும். பசித்து வாடும் உயிர்களுக்கு உணவு அளித்து அவற்றை பாதுக்காக்க வேண்டும். 


எல்லா நாளும் தடபுடலாக விருந்து சமைத்துப் போட முடியுமா? வசதி வேண்டாமா?  


"பகுத்துண்டு"


நீ என்ன சாப்பிடுகிறாயோ, அதில் ஒரு பங்கு. அவ்வளவுதான். ஒரு சோறும், கறியும் தான் இருக்கிறதா? பரவாயில்லை. அதில் ஒரு பிடி மற்ற ஒரு உயிருக்கு. காப்பி போடுகிறாயா, வீட்டில் வேலை செய்யும் அந்த பெண்ணுக்கும் சேர்த்துப் போடு. அவ்வளவுதான். 


நூலோர் = அறம் பற்றி எழுதிய நூலோர்.  கொலை, கொள்ளை போன்ற மர்ம நாவல் எழுதுபவர்களை அல்ல இங்கே சொல்லப்பட்ட நூலோர். 


தொகுத்தவற்றுள் = உலகில் உள்ள பல சமயங்கள், பல மார்க்கங்கள், பல மொழி, கலாசாரம் இவற்றுள் உள்ள அனைத்து நல்ல நூல்களையும் எடுத்து, அவற்றுள் உள்ள நல்ல கருத்துகளை தொகுத்தால், அந்தத் தொகுதியில்


எல்லாம் தலை = அந்தத் தொகுதியில் மிகச் சிறப்பாக சொல்லபடுவது, கொல்லாமை என்ற இந்த அறமே. 


அதெல்லாம் சரி, இந்த அதிகாராம் கொல்லாமை பற்றியது. இந்தக் குறளில் எங்கே கொல்லாமை வருகிறது? 


எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து உண் என்று தானே வருகிறது. இதில் எங்கே கொல்லுதல் வருகிறது ?


சிந்திக்க வேண்டிய விடயம். 


உலகில் எவ்வளவோ பேர் உண்ண உணவு இல்லாமல் பட்டினியோடு இருக்கிறார்கள். சிறு பிள்ளைகள், வயதான வர்கள், உடல் ஊனம் உற்றவர்கள் என்று எவ்வளவோ பேர் பசியால் வாடுகிறார்கள். 


நாம் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை தவறாமல் உண்கிறோம். இதில் நடுவில் நொறுக்குத் தீனி, காப்பி, டீ என்று உள்ளே தள்ளுகிறோம். 


நாம் ஒருவேளை உணவைக் குறைத்தால், ஒரு கோடிப் பேர் ஒருவேளை உணவை குறைத்தால், ஒரு கோடி உணவு மிச்சப்படும். உணவின் விலை குறையும். எல்லோராலும் முடியாவிட்டாலும், நிறைய பேர் அதை வாங்கி உண்ண முடியும். பத்து கோடி பேர் ஒரு வேளை உணவை வேண்டாம் என்று வைத்தால் ? நூறு கோடி பேர் ஒரு வேளை உணவைக் குறைத்தால்...?


அதுவும் பகுத்து உண்பதுதான். 


பசியால் ஒரு உயிர் போவதை நாம் தடுக்க முடியும். நம் உணவைக் குறைத்தாலே போதும், அந்த உணவு வேறு ஏதோ உயிருக்குப் போய் கிடைக்கும். 


நம் வீட்டில் உள்ள உணவுப் பொருள்களின் அளவைப் பார்க்க வேண்டும்.


ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, புளி, மிளகாய், எண்ணெய், என்று வாங்கி அடைத்து வைக்கிறோம். இப்படி எல்லோரும் ஒரு மாதத்துக்கு, ஒரு வருடத்துக்கு என்று வாங்கி அடைத்து வைத்துக் கொண்டால், உணவுத் தட்டுபாடு வருமா? வராதா? 


கட்டாயம் வரும். 


கடைக்கார்கள் மட்டும் அல்ல உணவைப் பதுக்குபவர்கள். நாமும் தான். நாம் செய்வதால் அது நமக்குத் தெரிவதில்லை.


அளவுக்கு அதிகமான உணவுப் பொருகளை சேர்த்து வைப்பது, தேவைக்கு அதிகமான ஆடைகள், எத்தனை கைப் பைகள், எத்தனை பாதுகைகள் (செருப்பு) வாங்கிக் குவிக்கிறோம். 


நம் தேவைகளை குறைத்தால் அது மற்றவர்களுக்குக் கிடைக்க வழி செய்யும்.


இதை, கொல்லாமை என்ற அதிகாரத்தில் வைத்ததன் காரணம் அதுதான். 


 


 

Monday, September 28, 2026

தேவாரம் - செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி

 தேவாரம் - செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_28.html

இந்த வாழ்க்கை இன்பமானதா? இனிமையானதா?  இதே வாழ்க்கை மீண்டும் கிடைக்கும் என்றால், நமக்குச் சம்மதமா? 


இந்த வாழக்கை இன்பமும் துன்பமும் நிறைந்ததாகத்தான் தெரிகிறது. வெறும் இன்பம் மட்டுமே உள்ள வாழக்கை என்று யார்க்கும் இல்லை. அது போல் வெறும் துன்பம் மட்டுமே உள்ள வாழ்க்கையும் யார்க்கும் இல்லை. 


சரி, அப்படி என்றால் எவ்வளவு இன்பம், எவ்வளவு துன்பம், என்ற கேள்வி எழும். 


பிறந்து, வளர்ந்து, பள்ளி சென்று பாடம் பயின்று, வேலை கிடைக்கும் வரை எதுவும் நம் கையில் இல்லை. எந்த நாட்டில், வீட்டில், மதத்தில், உட் பிரிவில் பிறப்போம் என்பது நம் கையில் இல்லை. பிறந்த பின் தாய் மொழி, பின் பள்ளிக் கூடம், ஆசிரியர், பாடம் என்பது எல்லாம் நம் கையில் இல்லை. 


படித்து முடித்த பின் வேலைக்குப் போகிறோம். அங்காவது நாம் நினைத்தபடி செய்ய முடியுமா என்றால் அதுவும் முடியாது. நாம் நினைத்த போது விடுமறை எடுக்க முடியாது, இரண்டு நாள் சேர்ந்தார் போல் காலம் தாழ்த்தி வர முடியாது. 


திருமணம் நம் கையில் ஓரளவு இருக்கலாம்.  பின் அவனோ, அவளோ எப்படி மாறுவார்கள் என்பது நம் கையில் இல்லை. பிள்ளை பேறு நம் கையில் இல்லை. பிள்ளைகள் எப்படி வளர்வார்கள், படிப்பார்கள், ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதும் நம் கையில் இல்லை. 


முதுமையில் வரும் நோய், தளர்ச்சி, அதுவும் நம் கையில் இல்லை. எப்போது இறப்போம், அதுவும் தெரியாது. 


இதில், மகிழ்ச்சி என்று நாம் எதைச் சொல்வது? ஏதோ அங்கொன்றும், இங்கொன்றும் தட்டுப் படும் நிகழ்வுகளை மகிழ்ச்சி என்று கொண்டாடிக் கொள்கிறோம். 


இந்த வாழ்வை மீண்டும் மீண்டும் வாழ்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?  


சரி, இனி பிறவி வேண்டாம் என்றால் என்ன செய்வது ? 


திருநாவுகரசர் சொல்கிறார் 


"கோவிலுக்கு  ஒரு நாள் கூட போவது கிடையாது. சாப்பிடப் போவதற்கு முன், இறைவனுக்கு இரண்டு மலரை இட்டு தொழுவது கிடையாது. பெரிய நோய்கள் எதுவும் வராமல் இருக்க நெற்றியில் திருநீறு அணிவது கிடையாது. அப்படிப் பட்டவர்கள் இந்த உலகில் எதற்காக பிறக்கிறார்கள் தெரியுமா? பெரிய நோய்கள் வந்து , துன்பப்பட்டு, மீண்டும் மீண்டும் இறந்தும் பிறந்தும் உழல்வதற்கே பிறக்கிறார்கள்" 


என்கிறார். 


அதாவது, இனி பிறவி வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும், 


- கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும். போட்டோ எடுத்து facebook ல் போட அல்ல. 


- உணவு உண்ணும் முன், ஆண்டாவ உன் புண்ணியத்தில் இன்று இந்த உணவு உண்ணும் பாக்கியம் கிடைத்தது என்று மனதுள் நன்றி சொல்லி, இரண்டு மலரை இட்டு இறைவனை வணங்க வேண்டும்.


- திருவாய் பொலிய சிவாயநம என்று நீறணிய வேண்டும். 


அப்படிச் செய்தால் இப்பிறவியில் நோய் முதலிய துன்பங்கள் வாரா. 

பின், மறு பிறவியும் வராது. 


பாடல் 



ஒரு காலும் திருக்கோயில் சூழா ராகில் 

    உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்

அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்

    அவனியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் 

    செத்துப்பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே


பொருள் 


ஒரு காலும் = ஒரு பொழுது கூட 


திருக்கோயில் சூழா ராகில் = கோவிலுக்குப் போகாமல் இருந்தாலும் 


உண்பதன்முன் = சாப்பிடும் முன் 


மலர்பறித்திட் டுண்ணா ராகில் = மலர் + பறித்து + இட்டு + உண்னாராகில். மலரை பறித்து வந்து, இறைவன் திருவடியில் இட்டு வணங்கிய பின் உண்ணும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் 


அருநோய்கள் = கொடிய நோய்கள் 


கெட = கெட்டுப் போகும் படி 


வெண்ணீ றணியா ராகில் = திரு வெண்ணீற்றை நெற்றியில் இட்டுக் கொள்ளமால் இருந்தால் 


அவனியற்றார்= அவனியில், இந்த உலகில் அப்படிப்பட்டவர்கள் 


பிறந்தவா றேதோ வென்னில் = ஏன் பிறந்தார்கள் என்றால் 


பெருநோய்கள் மிகநலியப் = பெரிய பெரிய நோய்க்கள் உடலில் ஒரு சேர வந்து வருத்தவும் 


பெயர்த்துஞ் = மீண்டும் மீண்டும் 

 

செத்துப்பிறப்பதற்கே = இறந்து இறந்து, பிறப்பதற்கே 


தொழிலாகி யிறக்கின் றாரே = அதே தொழிலாகி இருப்பார்கள் 


கோவிலுக்குப் போவது, இரண்டு மலரிட்டு பின் உண்பது, திருநீறு அணிவது...அவ்வளவு கடினமான காரியமா என்ன?




Sunday, September 27, 2026

சிறுபஞ்சமூலம் - எது துன்பம் தரக் கூடியது

 சிறுபஞ்சமூலம் - எது துன்பம் தரக் கூடியது 



நண்பர்களுக்கு வரும் துன்பம், நமக்கு ஒரு பெரிய துன்பம். 


நம்மிடம் ஒரு உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் இருப்பது ஒரு துன்பம். 


வஞ்சகர்களோடு கொண்ட தொடர்பு துன்பம் தரக் கூடியது. 


நல்லவர்களுக்கு வரும் வறுமை துன்பமானது.


ஒரு விடயத்தை செய்வதற்கு உறுதி பூண்டபின், அதில் இருந்து பின் வாங்குவது துன்பமானது. 


பாடல் 


  “இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா,

தொடர்புஇன்னா கள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா,

கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே

கொண்ட விரதம் குறைவு.”.   


பொருள் 


இடர் இன்னா நட்டார்கண் = நண்பர்களுக்கு வரும் துன்பம், நமக்கு துன்பம் தரக் கூடியது.  


ஈயாமை இன்னா = உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு, உதவி செய்ய முடியாமல் இருப்பது துன்பம். 



தொடர்புஇன்னா கள்ளார்கண் = கள்ளர்கள், வஞ்சக எண்ணம் கொண்டவர்களோடு  கொண்ட தொடர்பு துன்பமானது 


தூயார்ப் படர்பு இன்னா = நல்லவர்களுக்கு வரும் வறுமை துன்பமானது 



கண்டல் அவிர்பூங் கதுப்பினாய் = தாழை மலர் அணிந்த கூந்தலை கொண்ட பெண்ணே 


இன்னாதே = துன்பமானதே 



கொண்ட விரதம் குறைவு = செயலை முடிக்க வேண்டும் என்று எடுத்த உறுதியில் கொண்ட குறைவு. 


உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து தொடங்குவது...பின் சிறிது நாளில் நாளில் அதை விட்டு விடுவது.


உணவு கட்டுப்பாடு என்று ஆரம்பிப்பது...அப்புறம் அதை நாளடைவில் விட்டு விடுவது. 


ஒரு நாளைக்கு பத்து பக்கம் படிப்பது என்று உறுதி கொள்வது, பின் அதை விட்டு விடுவது. 


கொண்ட விரதத்தில் இருந்து பிறழ்வது பெரிய துன்பம் தரும் என்கிறது சிறுபஞ்ச மூலம். 


   

Saturday, September 26, 2026

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீள் செல்வம் வேண்டாதான்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நீள் செல்வம் வேண்டாதான் 

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_26.html


யாருக்குத்தான் செல்வம் வேண்டாம்?  எல்லோரும் செல்வம் வேண்டும் என்றுதான் இரவு பகலாய் உழைக்கிறார்கள். ஆனால், செல்வம் எல்லோரிடமும் வந்து விடுகிறதா?  அதற்குத் தெரியும் யாரிடம் போக வேண்டும் என்று. 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், 


"யார் ஒருவர் இறைவனையே நாடி, செல்வம் வேண்டாம் என்று இருப்பார்களோ, அவர்களிடம் செல்லும் செல்வம் போல், இறைவா, நீ என்னை வேண்டாம் என்று தள்ளி விட்டாலும், அந்த செல்வம் போல் நான் உன்னையே வந்து பற்றிக் கொள்வேன் " 


பாடல் 


நின்னையே தான் வேண்டி,நீள் செல்வம் வேண்டாதான்

தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்,மாயத்தால்

மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே!

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.


பொருள் 



நின்னையே தான் வேண்டி = இறைவா, உன்னை மட்டுமே வேண்டி 


நீள் செல்வம் = பெரிய செல்வம் 


வேண்டாதான் = வேண்டாதவன் 


தன்னையே = எவனோ, அவனையே 


தான் வேண்டும்= தனக்கு வேண்டும் என்று சென்று அடையும் 


செல்வம்போல் = செல்வத்தைப் போல 


மாயத்தால் = மாயையால் 


மின்னையே சேர்  = மின்னல் போல் ஒளி உமிழும் 


திகிரி = சக்கர ஆயுதத்தைக் கொண்ட 


வித்துவக்கோட்டு அம்மானே! = திரு வித்துவ கோடு என்ற தலத்தில் உறைபவனே 


நின்னையே  தான் = உன்னை மட்டுமே 


வேண்டி நிற்பன் = வேண்டும் என்று நிற்பேன் 


அடியேனே = அடியவனான நான்


உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு, யார் இறைவனைப் பற்றிக் கொள்கிறார்களோ அவர்களை செல்வம் பற்றிக் கொள்ளும். 



Thursday, September 24, 2026

திருக்குறள் - கொல்லாமை - அறவினை யாதெனில்

 திருக்குறள் - கொல்லாமை - அறவினை யாதெனில் 

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_24.html


அறம் என்று எடுத்துக் கொண்டால் அது விரிந்து கொண்டே போகும். இதுதான் எல்லை என்று சொல்ல முடியாது. மேலும், அது காலம், இடம் பொறுத்து மாறும் தன்மை உடையது. 


பெண்ணைக் கொல்வது சத்ரிய அறம் அல்ல. விசுவாமித்திரன், இராமனிடம் தாடகை என்ற பெண்ணைக் கொல் என்கிறான். இராமன் கொன்றான். அது அறம் பிறழ்ந்த செயலா ?  வசிட்டன் சொல்லித் தந்த அறம், பெண்ணைக் கொல்லாதே என்று. விசுவாமித்திரன் சொல்லித் தந்த அறம், பெண்ணைக் கொல் என்பது. 


எது சரி என்று எப்படி விடை காண்பது. 


வள்ளுவரிடம் கேட்டார்கள்...ஐயா இப்படி மிகச் சிக்கலான, மிகப் பெரிய விடயத்தைச் சொன்னால் எங்களால் அதை அறிந்து தெரிந்து கடை பிடிக்க முடியாது. 


ஏதாவது ஒரே ஒரு அறம் சொல்லுங்கள். அதை கடைப் பிடிக்கறோம் என்று. 


வள்ளுவர் சிந்தித்து , "சரி, ஒரே ஒரு அறம் சொல்கிறேன். அதை கடை பிடித்தால் உங்களுக்கு எல்லா அறமும் கடைப் பிடித்த பலன் கிடைக்கும்" என்றார். 


"ஆகா, இது எளிமையாக இருக்கிறதே...அது என்ன சொல்லுங்கள் ஐயா" என்ற கேட்டார்கள். 


அவர் , 'நீங்கள் அதை செய்யக் கூட வேண்டாம், செய்யாமல் இருந்தாலே போதும்" என்றார். 


"ஐயா, ஒன்றும் செய்யாமல் இருப்பது எப்படி அறமாகும்" என்று கேட்டார்கள்.


"எந்த உயிரையும் கொல்லாதே". அதுவே அறங்களில் எல்லாம் பெரிய அறம். அந்த ஒன்றைக் கடைப் பிடித்தாலே நீங்கள் மற்ற எல்லா அறங்களும் செய்த பலன் கிடைக்கும் என்றார். 


பாடல் 


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்


பொருள் 



அறவினை = அறம் செய்யும் வினை 


யாதெனில் = எது என்று கேட்டால் 


கொல்லாமை = எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பது 


கோறல் = கொன்றால் 


பிறவினை = மற்றவினை 


எல்லாம் தரும் = அனைத்தையும் தரும் 


முதல் பாதி புரிகிறது. "அறவினை யாதெனில் கொல்லாமை" அது புரிகிறது. 


கோறல் = கொலை செய்வது. அதுவும் புரிகிறது. 


"பிறவினை எல்லாம் தரும்" ...இது என்ன ? புரியவில்லை. 


பரிமேலழகர் உரை செய்கிறார். அவர் இல்லாமல் இது எல்லாம் நமக்கு புரியவே புரியாது. 


அறவினை - நமக்குப் புரிகிறது. 


அறம் அல்லாத வினை, பிறவினை. 


சரியா? புரிகிறதா?


சரி. 


அறவினை யாதெனில் கொல்லாமை.


எனவே, பிறவினை என்னவாக இருக்கும்?  கொல்லுதல்.


எல்லாம் தரும் என்றால் என்ன ?  


அறம் செய்வது என்பது நல்லது செய்வது. நல்லது செய்தால் புண்ணியம் சேரும். புண்ணியம் சேர்ந்தால் இன்பம் கிடைக்கும். 


எனவே

அறம் அல்லாத பிறவினை செய்தால் தீமை செய்வது ஆகும். தீமை செய்தால் பாவம் சேரும். பாவம் சேர்ந்தால் துன்பம் பிறக்கும். 


அறவினை எல்லாம் இன்பத்தையும் தரும். எனவே, 

பிறவினை எல்லா துன்பத்தையும் தரும். 


பிறவினை என்றது அறம் அல்லாத வினைகளை செய்வதால் வரும் பயன்களை. 


சரி, வினை என்றாலே செய்வது தானே. கொல்லாமை என்பது கொலை செய்யாமல் இருப்பது. அதாவது வினை செய்யாமல் இருப்பது. அது எப்படி அறமாகும்? என்று கேட்டால் அதற்கு முன்பே அவர் விளக்கம் செய்து இருக்கிறார். 


அறம் எனப்படுவது யாதெனின் 


மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தாலும் 

விலக்கியன ஒழிதலுமாம் 


என்று. 


எது செய்யக் கூடாதோ, அதை செய்யாமல் இருப்பதும் அறம் தான். 


திருடாமல் இருப்பது ஒரு அறம். 

பொய் சொல்லாமல் இருப்பது ஒரு அறம். 

கொல்லாமல் இருப்பதும் ஒரு அறம். 


யோசித்துப் பார்ப்போம்...கொல்லாமை என்று ஒன்று எல்லோராலும் கடைபிடிக்கப் பட்டால் எப்படி இருக்கும்?


நாடுகளுக்கு இடையே போர் இருக்காது. இன்று எவ்வளவு பேர் சண்டையில் இறக்கிறார்கள். 


உள்நாட்டில் சாதிக் கலவரம், அரசியல் சண்டைகள் , இவற்றின் மூலம் ஒருவரை வெட்டுவதும், கொல்லுவதும் இருக்காது. 


பணம் வேண்டி, பொருள் வேண்டி உயிர் கொலை இருக்காது. 


ஆயுத உற்பத்தி அறவே நின்று விடும். இராணுவங்கள் தேவை இல்லை. அந்தப் பணம் முழுவதும் மக்களின் நலத் திட்டங்களுக்குப் போகும். 


உலகமே அமைதிப் பூங்காவாக மாறும். 


ஒரே ஒரு அறம். அதுவும் செய்யாமல் செய்யும் அறம். 


யார் சொல்லித் தருவார் இதெல்லாம்....

Tuesday, September 22, 2026

திருக்குறள் - கொல்லாமை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - கொல்லாமை - ஒரு முன்னோட்டம் 


இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தின் பின் கொல்லாமை என்ற அதிகாரம் வருகிறது. 


துன்பம் செய்யக் கூடாது என்று சொன்ன பின், உயிர்க் கொலை பற்றிப் பேசுகிறார் வள்ளுவப் பேராசான்.


இது ஒரு சிக்கலான அதிகாரம். 


புலால் உண்பவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏற்றுக் கொண்டால் மாமிசம் சாப்பிட முடியாது. விலங்குகளை கொல்வது மட்டும்தான் கொலையா? தாவரங்களுகுக் கூடத்தான் உயிர் இருக்கிறது. அவற்றை கொல்லலாமா ? அவற்றைக் கொல்லலாம் என்றால் விலங்குகளை கொன்று தின்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று வாதம் செய்யலாம். 


அதற்குப்  பதில் இல்லை. 


இருந்தும், கொல்லாமை பற்றி வள்ளுவர் கூறியதை நாம் பார்ப்போம். 


ஏற்றுக் கொல்வதும், கடை பிடிப்பதும் அவரவர் விருப்பம். 



Monday, September 21, 2026

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_21.html


நாச்சியார் திருமொழி. 


அவளுக்கு அவன் மேல் காதல். 


காலம் - கை பேசியும், இணைய தளங்களும் இல்லாத காலம். பெண்கள் இவ்வளவு சுதந்திரமாக இல்லாத காலம். 


ஆனால், காதலுக்கு காலம் ஏது. அது தன் பாட்டுக்கு வருகிறது. யாருக்கு வருகிறதோ, அவர்களைப் படுத்துகிறது. 


அவள், காம தேவனை, மன்மதனை வேண்டுகிறாள். எப்படியாவது போய் என் காதலை அவனிடம் சொல்லி, என்னை அவனோடு சேர்த்து வை என்று வேண்டுகிறாள். 


காதலுக்கு ஏற்ற நேரம் மாலை நேரம். 


இவள் காதல் சற்று வித்தியாசமானது. 


காதலும் பக்தியும் நிறைந்தது. 


அதி காலையிலேயே அவன் நினைப்பு வந்து விடுகிறது. இப்போதெல்லாம் காதலிப்பவர்கள் "good morning " மெசேஜ் போடுவது மாதிரி. 


அது ஒரு சின்ன கிராமம். மின் வசதி இல்லாக் காலம். 


அவள் அதி காலையில் எழுந்து, அந்த இருள் பிரியா நேரத்தில் ஆற்றில் முழுகி எழுந்து, ஈர உடையுடன் மேலேறி வருகிறாள். வந்தவள், அங்கிருந்த சின்ன சின்ன மரச் சுள்ளிகளை எடுத்து வைத்து, தீ மூட்டுகிறாள். 


தீயின் முன் நின்று காமதேவனை வேண்டுகிறாள்....


"தேன் சொட்டும் மலர்கள் கொண்ட மன்மத அம்புகளை எடுத்துக் கொண்டு, 'கடல் வண்ணன்' என்று அவன் பெயரை அந்த அம்பினில் எழுதி அவன் மேல் அந்த அம்பை விடு. எதற்குத் தெரியுமா, அவனுக்கு என் மேல் காதல் வர வேண்டும். நான் அவனைச் சென்று அடைய வேண்டும்".


பாடல் 



வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து


முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா


கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி


புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே


பொருள் 



வெள்ளை = வெண்மையான 


நுண் மணற் = பொடியான மணல். அதாவது, கோலப் பொடி 


கொண்டு = அந்த கோலப் பொடியைக் கொண்டு 


தெருவணிந்து = தெருவினில் கோலம் இட்டு 


வெள்வரைப் பதன்முன்னம் = அதிகாலை சூரியன் உதிக்கும் முன் 


துறைபடிந்து = ஆற்றில் சென்று குளித்து 



முள்ளுமில் லாச்சுள்ளி = முள் இல்லாத சிறு சிறு சுள்ளிகளை எடுத்து 


யெரிமடுத்து = எரி மடுத்து. தீ மூட்டி 


முயன்று = முயற்சி செய்து 


உன்னை நோற்கின்றேன் = உன்னை வணங்குகின்றேன் 


காமதேவா = காமதேவா 



கள்ளவிழ் = கள் வடியும் 


பூங்கணை = பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பினை 


தொடுத்துக்கொண்டு = வில்லில் பூட்டி 


 கடல்வண்ணண் = கடல் நிற வண்ணம் கொண்டவன் 


னென்பதோர் பேரெழுதி = என்ற பேரை அந்த அம்பின் மேல் எழுதி 




புள்ளினை வாய்பிளந் தான் = புள்ளின் வாயைப் பிளந்தவன் 


னென்பதோர் = என்ற


இலக்கினில் = இருக்கும் இடத்தில் 


 புகவென்னை யெய்கிற்றியே = நான் சென்று அடையுமாறு 


ஒரு இளம் பெண்ணின், பக்தியோடு கலந்த காதல், காலங்களை கடந்து இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 


காதல் தவிர்த்து வேறு என்ன இருக்கிறது இங்கே....


Saturday, September 19, 2026

திருக்குறள் - நோய்

 திருக்குறள் - நோய் 



துன்பமே இல்லாத வாழ்வை யார்தான் விரும்ப மாட்டார்கள்?  துன்பத்தைக் கண்டால் காத தூரம் ஓடுவோம் நாம். சின்ன தலைவலியில் இருந்து பெரிய துன்பங்கள் வரை, எதுவுமே நமக்கு உடன்பாடு இல்லை. 




நமக்கு ஏதாவது துன்பம் வந்து விட்டால், வருந்துவோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று நம் மேலேயே நாம் பரிதாபம் கொள்வோம். யாருக்கு நான் என்ன தீமை செய்தேன், எனக்கேன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று அங்கலாயித்துக் கொள்வோம். 


சரி, துன்பமே இல்லாத வாழ்க்கை சாத்தியமா?  துன்பமே வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும்?  உடலால், மனதால், பணத்தால், உறவால், இயற்கை சீற்றத்தால் என்று பல வகைகளில் வரும் துன்பத்தை எப்படி வராமல் தடுப்பது?


வந்த துன்பங்களுக்குக் காரணம், இனி துன்பம் வராமல் இருக்க வழி என்ற இரண்டையும் வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி முடிக்கிறார். ஏழே ஏழு வார்த்தைகளில் துன்பமில்லா வாழ்வுக்கு வழி காட்டுகிறார் ஐயன் வள்ளுவன். 







வள்ளுவர் சொல்கிறார், 


"உனக்கு துன்பம் வருகிறதா?  நீ யாருக்கோ எப்போதோ செய்த துன்பம் இப்போது உன்னிடம் வருகிறது என்று உணர். அது மட்டும் அல்ல, உனக்கு இனி துன்பமே வரக் கூடாது என்று விரும்புகிறாயா?  யாருக்கும் துன்பம் செய்யாதே. உனக்கு துன்பம் வராது"



பாடல் 


நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோய்இன்மை வேண்டு பவர்


பொருள் 


நோய்எல்லாம் = வருகின்ற துன்பம் எல்லாம் 


நோய்செய்தார் மேலவாம் = துன்பம் செய்பவர்களுக்கே வரும் 


நோய்செய்யார் = பிறருக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் 


நோய்இன்மை = தனக்கு துன்பம் இல்லாமையை 


வேண்டு பவர் = விரும்புகிறவர்கள் 


(நோய் = துன்பம்)


உனக்கு வரும் துன்பங்களுகுக் காரணம், நீ பிறருக்குச் செய்த துன்பம் 


நீ பிறருக்குத் துன்பம் செய்யாவிட்டால் உனக்கு துன்பம் வராது. 


நான் யாருக்கும் ஒரு துன்பமும் செய்யவில்லையே...பின் எனக்கு எப்படி இந்தத் துன்பம் வந்தது என்று கேட்டால், செய்து இருப்பீர்கள். மறந்திருக்கும். 


அல்லது அது துன்பம் என்று கூட உங்களுக்குத் தெரிந்து இருக்காது. 


நம் கணக்கு தவறாகலாம். இயற்கையின் கணக்கு தவறாது. 


எது எப்படியோ, இனி மேல் பிறருக்கு துன்பம் செய்யாமல் இருப்போம். அவர்கள் மேல் உள்ள கருணையால் அல்ல, நமக்கு துன்பம் வரக் கூடாது என்ற சுயநலத்தால். 





Friday, September 18, 2026

50 இலட்சம் page views

 Today, this blog reached 50,00,000 page views.


Thanks to all the readers.



கம்ப இராமாயணம் - அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே

கம்ப இராமாயணம் - அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே 

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_18.html



தீதும் நன்றும் பிறர் தர வாரா 


என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. 


நமக்கு வரும் நன்மையும் தீமையும் நாமே தேடிக் கொள்வது அல்லாமல் பிறர் நமக்குச் செய்வது அல்ல. 


ஆனால், நாம் நினைப்பது வேறு மாதிரி. 


நன்மை வந்தால், எல்லாம் என் செயல் என்று இறுமாப்பு கொள்கிறோம். என் திறமை, என் அறிவு, என் ஆற்றலால் வந்தது என்று நினைக்கிறோம். 


துன்பம் வந்தால், விதி, மற்றவர்கள் செய்த சதி, பொறாமை பிடித்தவர்கள் செயல், காலம் சரி இல்லை, நாளும் கோளும் சரி இல்லை, தெய்வ குற்றம் என்று எல்லாவற்றின் மேலும் பழி போடுகிறோம்.


என்ன செய்வது. மனிதனின் பலவீனம். 


இராவணன் பேராற்றல் பெற்றவன். அவனை யாராலும் அழிக்க முடியாது. 


முக்கோடி வாழ்நாள், முயன்று உடைய பெரும் தவம், எக்கோடி யாராலும் வெள்ளப்படாய் என்ற வரம் எல்லாம் உடையவன். 


அவனை அழிக்கும் ஆற்றல் ஒரே ஒரு சக்த்திக்குத்தான் உண்டு. 


அதுதான் - அறம். 


அறம் பிறழ்ந்தால் அழிவு வரும். அது யாராக இருந்தாலும். எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், எவ்வளவு தவம் இருந்தாலும் , அறம் தப்பினால் அழிவு நிச்சயம். 


இராவணன் அழிவு, அவன் மாற்றான் மனைவியை அபகரித்து வந்தது. 


"தான் கெட்டது மட்டும் அல்லாமல், இந்த மூன்று உலகங்களையும் அறம் தவறி நடக்க வைத்த பாவியான இராவணனின் உயிரைக் கொல்ல நடந்தது இது.  பாம்பணையில் துயின்ற பரமன் இராமனே. இந்த சீதை அந்தக் கமலச் செல்வியே"


என்று அனுமன் நினைக்கிறான். 


பாடல்  


 'மூவகை உலகையும் முறையின் நீக்கிய

பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு

                                  இதால்;

ஆவதே;அரவணைத் துயிலின் நீங்கிய

தேவனே அவன்;இவள் கமலச்செல்வியே.


பொருள் 


 'மூவகை  = மூன்று வகைப்பட்ட 


உலகையும்= உலகங்களையும் 


முறையின் நீக்கிய = அறத்தில் இருந்து விலகிச் செல்லும் படி செய்த 


பாவி = பாவியான இராவணன் 


தன் உயிர்கொள்வான் = தன்னுடைய உயிரைப் போக்கிக் கொள்ள 


 இழைத்த பண்பு  இதால்; = செய்த செயல் இது (சீதையைக் கடத்தி வந்தது) 


ஆவதே = நடக்கப் போகிறது 


அரவணைத் = பாம்பு அணையில் 


 துயிலின் நீங்கிய = உறக்கம் விட்டு நீங்கிய 


தேவனே அவன் = கடவுளே அந்த இராமன் 


இவள் = இந்த சீதை 


 கமலச்செல்வியே = தாமரையில் வசிக்கும் செல்வத்தின் திருமகளே 


பணம் இருந்தால், அதிகாரம் இருந்தால், பக்தி செய்தால், தான தர்மம் செய்தால் செய்த பாவம் போய் விடும், சமாளித்துக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள். 


இராவணனிடம் இல்லாத செல்வமா, அவனிடம் இல்லாத வீரமா, அதிகாரமா, அவன் செய்யாத தவமா...என்ன இருந்தாலும் என்ன, அறம் பிழைத்தால் அழிவு வரும். யாரும் தப்ப முடியாது. 


நம் இலக்கியம், வாழும் முறை, கலாச்சாரம், பண்பாடு, எல்லாமே அறம் அறம் என்று அறம் சார்ந்தே வந்திருக்கிறது.


அறம் தான் எல்லாவற்றிற்கும் அடி நாதம். 





Tuesday, September 15, 2026

திருக்குறள் - தானே வரும்

 திருக்குறள் - தானே வரும் 



பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். 


மற்றவர்களுக்கு நாம் துன்பம் செய்தால், நமக்கு துன்பம் தானே வரும். 


அதுவும், காலையில் செய்தால், மாலையில் வரும் என்கிறார் வள்ளுவர். 


மற்றவர்களுக்குத் துன்பம் செய்தால் நமக்கு துன்பம் வரும் என்பது தெரிந்த விடயம் தானே. இதைச் சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா என்று நினைக்கலாம். 


பாடல் 


பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்


பொருள் 


பிறர்க்கு = மற்றவர்களுக்கு 


இன்னா = துன்பத்தை 


முற்பகல் = காலையில் 


செய்யின் = செய்தால் 


தமக்குஇன்னா = செய்தவனுக்கு துன்பம் 


பிற்பகல் = மாலையில் 


தாமே வரும் = தானே வரும் 


இதற்கு பரிமேல் அழகர் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போம். 


இந்தக் குறள், துறவறத்தில் உள்ளது. எனவே இது துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்கிறார். 


ஒரு துறவி, முனிவன், பிறருக்கு துன்பம் செய்யவே கூடாது. எல்லார் மேலும் அவன் அன்பு செலுத்த வேண்டும். துறவிகள் பிறருக்கு துன்பம் செய்யமாட்டார்கள் என்பதால் 


"செய்யின்" என்று கூறினார். அதாவது செய்தால் என்ற அர்த்தத்தில். செய்ய மாட்டார்கள், ஒருவேளை செய்தால்.


அது என்ன முற்பகல் , பிற்பகல் ?


ஒரு துறவி தவறு செய்தால், அவன் செய்த தவம் உடனே அழியும் என்பதால், முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்றார். 


இன்று ஒரு தவறு செய்தால், ஒரு நாலைந்து வருடம் கழித்து அதற்கு உண்டான தண்டனை கிட்டும் என்று அல்ல. இன்று செய்தால், இன்றே விளையும்.


செய்யின், தானே. என்று இரண்டு வார்த்தைகள். 


செய்வது - நாமே சென்று செய்வது. 


ஆனால், நமக்குத் துன்பம் யாரும் செய்ய வேண்டாம். அது தானே வரும். நம்மை விட எளிய ஒரு ஆளுக்கு துன்பம் செய்கிறோம். இவன் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறோம். அவன் பதிலுக்கு துன்பம் செய்ய வேண்டாம். நமக்குத் துன்பம் தானே வரும்.


மனைவியை சுடு சொல் கூறுகிறாயா? அவளால் திருப்பிச் சொல்ல முடியாமல் இருக்கலாம்...ஆனால் அலுவலகத்தில் மேலதிகாரி உன்னை திட்டலாம். அது வலிக்கும். ஏன் இவர் நம்மைத் திட்டுகிறார் என்று நினைத்தால், யாரையோ, எங்கேயோ நம் சொல்லால் வருத்தி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


வலி வரும்போது தெரியாது ஏன் அது வருகிறது என்று. எப்போதோ செய்த வினை, இப்போது வருகிறது. சில சமயம் உடனே வரும், சில சமயம் நேரம் தாழ்த்து வரும். ஆனால், கட்டாயம் வரும். 


"தானே" என்பதற்கு பரிமேலழகர் , "நீ (துறவி) ஒருவனுக்கு துன்பம் செய்கிறாயா? உனக்கு இன்னொருவன் , வேறு ஒரு துன்பம் செய்ய வேண்டாம். நீ செய்த துன்பமே, உன் தவத்தை அழித்து உனக்கு துன்பத்தைத் தரும். தானே என்றால் நீ செய்த அந்த துன்பமே" என்று பொருள் கூறுகிறார். 


பிறருக்கு துன்பம் செய்யும் போது, நினைத்துக் கொள்ள வேண்டும்....இது எனக்கு திருப்பி வரும் என்று. 


அந்த நினைவு வந்தால், துன்பம் செய்வோமா? 


யாருக்குமே துன்பம் செய்யாமல் இருக்கும் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும். நாம் யாருக்கும் துன்பம் செய்யாவிட்டால், எல்லோரும் நம்மிடம் அன்போடு இருப்பார்கள். அந்த வாழ்க்கை எவ்வளவு இனிதாக இருக்கும் ?


நாளை பூஜை செய்யும் போது, வள்ளுவரை நினைத்து ஒரு பூ எடுத்துப் போட வேண்டும்.




Monday, September 14, 2026

கம்ப இராமாயணம் - உள்உறை உயிரினை

 கம்ப இராமாயணம் - உள்உறை உயிரினை 



சீதையைத் தேடி அனுமன் அசோக வனத்துக்கு வந்து விட்டான். சீதையைப் பார்க்கிறான். 


அந்தக் காலத்தில் புகைப் படம் எல்லாம் ஏது ?


சீதையின் திவ்யமான அந்த அருள் மிகு தோற்றத்தைப் பார்கிறான். இவள் சீதையாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறான். மேலும், இராமன் , சீதையைப் பற்றி சொன்ன அடையாளங்களையும் சேர்த்துப் பார்த்து, இவள் சீதைதான் என்று முடிவு செய்கிறான். 


அனுமன் நினைக்கிறான் , "இந்த கள்ள அரக்கர்கள், சீதையைக் கொண்டு வந்து வைக்கவில்லை, அந்த இராமனின் உயிரை அல்லவா இங்கே கொண்டு வந்து ஒளித்து வைத்து இருக்கிறார்கள்" என்று. 


பாடல் 



எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,

வள்ளல் தன்உரையொடு மாறு கொண்டில,

கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்

உள்உறை உயிரினைஒளித்து வைத்தவா !


பொருள் 



எள் அரும் = குறை ஒன்றும் இல்லாத 


உருவின் = உருவத்தின் 


அவ் இலக்கணங்களும் = அங்க இலக்கணங்களும் 


வள்ளல் = வள்ளலாகிய இராமன் 


தன்உரையொடு = சொன்ன அடையாளங்களோடு 


மாறு கொண்டில = மாறுபாடு இல்லாமல் அப்படியே இருக்கிறாள் 


கள்ள வாள் அரக்கன் = கள்ளம் கொண்ட அரக்கனாகிய இராவணன் 


அக் கமலக் கண்ணனார் = அந்த தாமரை போன்ற கண்களை உடைய இராமனின் 


உள்உறை = உள்ளே குடியிருக்கும் 


உயிரினை = உயிரை 


ஒளித்து வைத்தவா ! = இங்கேயா ஒளித்து வைத்து இருக்கிறார்கள் 


உள் உறை உயிர் - எவ்வளவு அழகான சொற்றொடர் !


அங்கே இராமன் உயிர் இல்லாமல் நடை பிணமாக இருக்கிறான். 


இங்கே சீதை உடல் இல்லாத உயிர் போல் தனித்து இருக்கிறாள். 


இருவருக்கும் உள்ள அந்தப் பிணைப்பை எவ்வளவு அழகாக கம்பன் படம் பிடிக்கிறான். 


மனைவியை உயிராக நினைக்கும் கணவன் இருந்தால் அந்த இல்லறம் எப்படி சிறந்து விளங்கும்....




Wednesday, September 9, 2026

திருக்குறள் - தான் அறிவான்

 திருக்குறள் - தான் அறிவான் 



பிறருக்குத் துன்பம் செய்யக் கூடாது என்று ஏதாவது அற நூல்களில் சொல்லி இருக்கிறதா?  நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் படிப்பு அறிவு இல்லைங்க.  நமக்கு கீழே உள்ளவன் சரியா வேலை செய்யாவிட்டால், மண்டையில உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டா எல்லாம் சரியாப் போயிரும். அப்படி திட்டக் கூடாது என்று எந்த நூலில் சொல்லி இருக்கிறது என்று சிலர் வாதம் செய்யலாம். 


இதுக்கு எல்லாம் புத்தகம் எழுத முடியாது.....


நமக்கு ஒருவர் துன்பம் செய்தால் அது நமக்கு வலிக்கிறது அல்லவா. அதை அறிந்த பின், அதே துன்பத்தை நாம் மற்றவருக்குச் செய்தால் அவர்களுக்கும் அதே மாதிரி வலிக்கும் என்பது புரியும் அல்லவா? அப்படி அறிந்த பின், எதற்காக அதை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் ?


துன்பம் என்றால் ஏதோ கை நீட்டி அடிப்பது என்று நினைக்க வேண்டியது இல்லை. 


நம்மிடம் ஒருவர் கோபமாக பேசுகிறார், நம்மை பற்றி கேலி பேசுகிறார், தாழ்வாகப் பேசுகிறார், நம் நம்பிக்கையை கிண்டல் செய்கிறார்...அப்போதெல்லாம் நமக்கு அது ஒரு வலியைத் தரும் அல்லவா ? 


அப்படி என்றால், நாம் மற்றவர்களிடம் கோபமாகவோ, அவர்களைப் பற்றி தாழ்வாகவோ, கிண்டல் செய்தோ பேசக் கூடாது. 


இப்படியே ஒவ்வொரு இன்னா செயலையும் புரிந்து கொள்ள வேண்டும். 


நமக்கு வலிப்பது மாதிரித்தானே மற்ற உயிர்களுக்கும் வலிக்கும் என்று நினைக்க வேண்டும். 


பாடல் 


தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்


பொருள் 


தன்னுயிர்க்கு = தனக்கு 


இன்னாமை = துன்பம் என்று 


தான்அறிவான் = எவன் அறிந்து கொள்வானோ 


என்கொலோ = எதனால்  


மன்னுயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு 


இன்னா செயல் = துன்பம் தரும் செயல்களை செய்வது  


சர்கரை வைத்திருக்கும் டப்பாவில் எறும்பு வந்து விட்டால், அதைத் தூக்கி வெயிலில் வைக்கிறோம். சூட்டில் அந்த எறும்புகள் சாகட்டும் என்று. நம்மை தூக்கி ஒருவர் அப்படி வெயிலில் போட்டால் நமக்கு எப்படி இருக்கும். அது எவ்வளவு துன்பமாக இருக்கும் என்று நினைத்தால் அப்படிச் செய்வோமா? 


வீட்டில் வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் திட்டுகிறோம். அவர்கள் உடலும் மனமும் கூசும் படி பேசுகிறோம். நம்மை யாராவது அப்படித் திட்டினால் நம் மனம் என்ன பாடு படும் என்று ஒரு கணம் நினைத்தால் அப்படிச் செய்வோமா?


மற்றவர்களை என்ன மற்றவர்களை - மனைவியை, குழந்தைகளை, மருமகளை, உடன் பிறப்புகளை எல்லாம் எப்படி நடத்துகிறோம். அவர்களுக்கும் மனம் இருக்கும் தானே?


எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைத்தால் யாருக்கும் தீங்கு செய்யும் எண்ணம் வராது. 




Tuesday, September 8, 2026

அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

 அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post.html


ஒரு நாள் பச்சை நிறத்தில் பட்டுப் புடவை. மறு நாள் மஞ்சள் கலரில் சுடிதார். மற்றொரு நாள் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ்...என்ன போட்டாலும் அவளுக்கு அழகா இருக்கு. எப்படித்தான் எல்லா நிறமும் அவளுக்கு ஒத்துப் போகிறதோ....


தினமும் அபிராமியை தரிசிக்கிறார் பட்டர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறாள். அது எப்படி முடியும்?  அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ, அப்படியே அபிராமி அவருக்கு காட்சி தருகிறாள். 


காக்கைச் சிறகினிலே

பார்க்கும் இடமெல்லாம் நின்றன் பச்சை நிறம் 

தீக்குள் விரலை வைத்தால் தோன்றும் இன்பம் 


என்று பாரதிக்குத் தோன்றிய மாதிரி எப்படியெல்லாம் நினைக்கிறோமோ அப்படியெல்லாம் அவள் தோன்றுகிறாள். 


பாடல் 


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே




பொருள் 

மங்கலை = மங்களகரமானவள் 

செங்கலசம் = செம்மையான கலசம் போன்ற 

முலையாள் = மார்பகம் உடையவள் 

மலையாள் = மலைமகள் 

வருணச் = வருணனின் இருப்பிடமான (கடல். அதில் உள்ள ) 

சங்கலை  = சங்குகள் 

செங்கைச்= சிவந்த கைகளை உடையவள் 

சகலகலாமயில் தாவு = சகல கலைகளையும் அறிந்த மயில் போன்ற சாயல் உடையவளே 


கங்கை பொங்கி = பொங்கி வரும்  வருகின்ற கங்கையையும் 

கலை = பிறை நிலவையும்  

தங்கும் = குடி இருக்கும் 
 

புரிசடையோன் = சடை முடி கொண்ட சிவனின் 

புடையாள் = அவனின் இடப்பாகம் உடையவளே 


பிங்கலை =   பார்வதியே 

நீலி = கரிய நிறம் கொண்டவள் 


செய்யாள் = சிவந்த நிறம் கொண்ட இலக்குமி 

வெளியாள் = வெள்ளை நிறம் கொண்ட சரஸ்வதி 

பசும் = பசுமையான 

பெண்கொடியே = கொடி போன்ற பெண்ணே 


பார்த்து பார்த்து முடியவில்லை. 

ஒரு நாள் கோபமாக, கருமையாக பார்வதி போல இருக்கிறாள் 

இன்னொரு நாள் சிவந்த நிறமாக, இலக்குமி போல செல்வத்தோடு ஜொலிக்கிறாள் 

இன்னொருநாள் வெள்ளையான தாமரை மேல் அமர்ந்து இருக்கும் அறிவே வடிவான சரஸ்வதி போல இருக்கிறாள். 

இவளை என்ன என்ன என்று சொல்லுவது. 

மயில் போல, கொடி போல இருக்கிறாள். 

அவளை எப்படியாவது முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால்தானே. 



பெண் என்பவள் புரிந்து கொள்ள அல்ல. 

அன்பைச் செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் உருவானவளோ ?

வார்த்தைகளில் அகப்படுபவள் அல்ல அவள். அன்பால் உணர்ந்து கொள்ளப் படுபவள். 

அபிராமி அந்தாதிக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் கேட்கக் கூடாது. 

கண்மூடி, மனதுக்குள் கரைய வேண்டிய ஒன்று அது. 




Wednesday, July 15, 2026

திருக்குறள் - தலையாய அறம்

 திருக்குறள் - தலையாய அறம் 



இரவு நேரம். முக மூடி அணிந்த சிலர் ஒருவனை கத்தியால் குத்தி, அவன் வயிற்றை கிழித்து...கொஞ்ச நேரத்தில் அவன் இறந்து போகிறான். 


அப்படி கத்தியால் குத்தியவர்களை என்ன செய்வது?


குத்தியவர்கள் மருத்துவர்கள். அவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. பாவம், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனான். மருத்துவர்களை குறை சொல்வோமா?


ஏன்? கத்தியால் குத்தி , உயிர் பிரிந்து விட்டதே?


செயல் என்னவோ அதுதான். ஆனால், கொல்ல வேண்டும் என்பது மருத்துவர்களின் நோக்கம் அல்ல. மனதளவில் அவர்கள் அந்த நோயாளி சுகமாக பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்துதான் செய்தார்கள். 


செயல் முக்கியம் அல்ல. நோக்கம் தான் முக்கியம். 


வள்ளுவர் சொல்கிறார், மனதளவில் கூட யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று. எல்லா குற்றமும் மனதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்"


என்பார் வள்ளுவர். 


மனதால் செய்யக் கூடாது. 


யாருக்கும் செய்யக் கூடாது. 


எப்போதும் செய்யக் கூடாது. 


பாடல் 

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை


பொருள் 


எனைத்தானும் = எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் 


எஞ்ஞான்றும் = எப்போதும் 


யார்க்கும் = யாருக்கும் 


மனத்தானாம் = மனதால் கூட 


மாணா = மாட்சிமை இல்லாத செயல்களை 


செய்யாமை தலை = செய்யாமல் இருப்பது சிறந்த அறம் 


யாருக்கும் செய்யக் கூடாது

எப்போதும் செய்யக் கூடாது 

எந்த அளவும் செய்யக் கூடாது 

மனதால் கூட செய்யக் கூடாது. 


மனம் என்றால் நம் மனம் மட்டும் அல்ல. பிறர் மனமும் புண் படும்படி செய்யக் கூடாது. 


சில சமயம், நாம் கேலி, கிண்டல், நையாண்டி என்று சில பேரை மனதளவில் காயப் படுத்தி விடுவோம். உடலளவில் துன்பம் இல்லை. இருந்தும் மனதளவில் வலி இருக்கும். 


சில பேர் ஏதாவது கேட்டால், முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். கணனி, கை பேசியை பார்த்துக் கொண்டே பதில் சொல்வார்கள். அது ஒரு மரியாதை இல்லாத்தனம். மற்றவரை காயப் படுத்தும். 


வேலைக் காரர்கள், நமக்கு கீழே வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது, பேசுவது. கூடாது. எனவேதான் "யார்க்கும்" என்றார். 


நம்மை விட பெரியவர்களை நாம் வருத்த மாட்டோம். நினைத்தாலும் முடியாது. சிறியவர்களை, எளியவர்களை எளிதாக வருத்த முடியும். கூடாது என்கிறார் வள்ளுவர். 


இதை எல்லோரும் கடைபிடித்தால் எப்படி இருக்கும். 


மற்றவர்கள் எப்படியும் போகட்டும். நாம் கடைபிடிப்போம். 


உலகில் இன்றில் இருந்து நல்லவர்களின் தொகை ஒன்று கூடட்டும். 









Tuesday, June 30, 2026

கம்ப இராமாயணம் - ஆவி நாயகன்

 கம்ப இராமாயணம் - ஆவி நாயகன்


https://interestingtamilpoems.blogspot.com/2026/06/blog-post_30.html 


எது நல்ல சகுனம். வலது கண் துடிப்பதா, இடது கண் துடிப்பதா?


எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சுருக்கு வழி.


பெண்கள் முதன் முதலாக வீட்டுக்கு வரும் போது வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும் என்பார்கள். வலது கால் எடுத்து வைப்பது நல்லது. அதோடு இடது கண் துடிப்பது நலம். இது ஐதீகம். 


பெண்ணுக்கு வலது கண் துடித்தால் நல்லது அல்ல என்பது ஒரு நம்பிக்கை. 


சீதை சொல்கிறாள் 


"என் ஆவி நாயகன் இராமன், தனக்கு வர வேண்டிய அரசை தம்பிக்குத் தந்து, கானகம் புறப்பட்ட அந்த நாள் எனக்கு வலது கண் துடித்தது. அது நல்ல சகுனம் அல்ல."


இன்று இடது கண் துடித்தது. அது நல்லது என்று சொல்ல வருகிறாள் சீதை. 


பாடல் 


'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்;

அறம் தரு சிந்தைஎன் ஆவி நாயகன்,

பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்

துறந்து, கான்புகுந்த நாள், வலம் துடித்ததே.


பொருள் 


'மறந்தனென்; = இன்னொன்னு சொல்ல மறந்து விட்டேன் 


இதுவும் = இதையும் 


ஓர் மாற்றம் கேட்டியால் = ஒரு மாற்றம் நிகழ்ந்தது, அதையும் கேள் ;



அறம் தரு சிந்தை = அறத்தை தரும், செய்யும் மனம் கொண்ட 


என் ஆவி நாயகன் = என் உயிர் நாயகன் 


பிறந்த பார்முழுவதும் = தலை மகனாக பிறந்ததால் அடைய வேண்டிய உலகம் முழுவதையும் 


 தம்பியே பெறத் = தம்பியான பரதனே பெற்றுக் கொள்ள 


துறந்து = அவற்றைத்  துறந்து , 


கான்புகுந்த நாள் = காட்டுக்குப் போன அந்த நாள் 


வலம் துடித்ததே = வலக் கண் துடித்தது 


இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது ?


நமக்கு இரண்டு விதமான ஞாபகங்கள் இருக்கிறது என்கிறது. 


ஒன்று தர்க ரீதியாக, நாம் யோசித்து, அலசி ஆராய்ந்து அறிந்து, அதை மனதில் நிறுத்திக் கொள்வது. 


இன்னொன்று உணர்ச்சி பூர்வமான அறிவு. சில விடயங்கள் மனதில் அழியாமல் இடம் பிடித்துக் கொள்கின்றன. நாம் வேண்டி விரும்பி பதிய வைப்பதால் அல்ல. அது உணர்வு சம்பந்தப் பட்டது. 


ஒரு உதாரணம் பார்ப்போம்.


சில பேரைக் கண்டாலே நமக்குப் பிடிக்காது. ஒரு வெறுப்பும், கோபமும், எரிச்சலும் வரும். ஏன்?  தெரியாது. எங்கோ நம் மனதில், அது போன்ற அல்லது அவர் செய்வது போன்ற, அல்லது அவர் குரல் போல உள்ள ஒருவர் மீது நமக்கு என்றோ, ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பு நிகழ்ந்து இருக்கலாம். நமக்கு தெரிந்த ஞாபகத்தில் அது இல்லை. ஆனால், நம் உடல் அதை நினைவு வைத்து இருக்கும். காரணம் சொல்லத் தெரியாது. இருந்தும் அவரைப் பிடிக்காது. அல்லது சில பேரை பார்த்தவுடனேயே பிடித்துப் போய் விடும். அதற்கும் காரணம் தெரியாது. 


நம் அறிவுக்குத் தெரியாது. உடம்புக்குத் தெரியும். உடம்புக்குத் தெரியும் என்பது அறிவுக்குத் தெரியாது. 




ஒரு வாசனை, ஒரு சத்தம், ஒரு வார்த்தை ஏதேதோ நினைவுகளை கொண்டு வரும். நாம் 


முயற்சி செய்து ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டோம். 



இது பற்றி நிறைய ஆராய்சிகள் செய்து இருக்கிறார்கள். 


நேரம் இருப்பின், ஒரு நாள் அவற்றை பற்றி சிந்திக்கலாம். 


கண் துடிக்கிறது என்றால், உடல் அறிந்து இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் உடம்பில் அந்த சக்தி இருக்கிறது. 


இந்த சகுனம் என்பது அப்படித்தான். 


சீதைக்கு, இடது கண் துடிக்கிறது. ஏதோ நல்லது வரப் போகிறது என்று நினைக்கிறாள். 



Saturday, June 20, 2026

திருக்குறள் - இன்னா என தான் உணர்ந்தவை

திருக்குறள் - இன்னா என தான் உணர்ந்தவை 

https://interestingtamilpoems.blogspot.com/2026/06/blog-post_20.html

இந்த இன்னா செய்யாமை, இன்னா செய்யாமை என்று சொல்கிறோமே, இன்னா என்றால் என்ன? அதற்கு ஒரு பட்டியல் இருக்கிறதா?  அந்தப் பட்டியலை யார் செய்தது? அது எல்லா ஊருக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்துமா? என்ற கேள்விகள் வரலாம்.


எல்லா நாட்டுக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு ஒரு வரையறை தர வேண்டும். முடியுமா? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். 


புலால் உண்பதால் என்ன தவறு?  விலங்குகளை கொன்று தின்பது பாவமா? பாவம் என்று எங்கே சொல்லி இருக்கிறது ?  அது சட்டப்படி குற்றமா? என்றெல்லாம் கேள்வி எழும். மரம், செடி, கொடிகளுக்குக் கூடத்தான் உயிர் இருக்கிறது...என்ற வாதமும் ஏற்புடையதே. 


எல்லாவற்றிற்கும் வள்ளுவரும், பரிமேலழகரும் பதில் சொல்கிறார்கள். 


பாடல் 


இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்


பொருள் 



இன்னா = துன்பம் தருபவை, தீங்கு இழைப்பவை 


எனத் = என்று 


தான் = ஒருவன் தனக்குத் தானே 


உணர்ந்தவை = உணர்ந்தவற்றை 


துன்னாமை = செய்யாமல் இருக்க 


வேண்டும் = வேண்டும் 


பிறன்கண் செயல் = மற்றவற்றிற்கு அந்தச் செயலை 


பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


மற்ற ஒரு உயிருக்கு துன்பம் என்று நமக்கு எப்படித் தெரியும்?  ஒருவன் முகத்தைப் பார்த்து, அவன் செய்யும் செயல்களை வைத்து அவன் துன்பத்தில் இருக்கிறானா, இல்லையா என்று நாம் அறிய முடியாது. நாம் செய்யும் ஒன்று அவனுக்கு துன்பம் தருமா இல்லையா என்று எப்படி அறிந்து கொள்வது?


வள்ளுவர் சொல்கிறார் 


இன்னா எனத்தான் "உணர்ந்தவை" : அதாவது ஒன்று நமக்குத் துன்பம் தருகிறதா இல்லையா என்று நமக்குத் தெரியும். யாரும் சொல்ல வேண்டாம். எந்த சட்டமும் தேவை இல்லை. நம் உணர்சிகள் நமக்குத் தெரியும் அல்லவா. எது நமக்குத் துன்பம் தருகிறதோ, அதை மற்ற உயிர்களுக்குச் செய்யக் கூடாது. 


நம்மை ஒருவன் முட்டாள் என்று திட்டினால் நமக்கு வருத்தம் வரும்தானே. எனவே, நாம் மற்றவர்களை அப்படித் திட்டக் கூடாது. 


"பிறன்கண் செயல்": பிறர் கண் என்று சொல்லி இருக்கலாம். இல்லை. பிறன் என்று சொல்கிறார். எல்லா உயிரும் அதில் அடங்கும். 


நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இந்த அளவுகோல் கொண்டு சிந்திக்க வேண்டும். நான் இப்படிச் செய்வது மற்றவருக்கு துன்பம் தருமா என்று அறிய வேண்டும். எப்படி அறிவது என்றால், அந்தச் செயலை நமக்கு பிறர் செய்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டும். அது நமக்கு வருத்தம் தரும் என்றால், அந்தச் செயலை, சொல்லை நாம் மற்றவர் மேல் செய்யவோ, சொல்லவோ கூடாது. 


யோசித்துப் பார்போம்...


எவ்வளவு நக்கல், நையாண்டி, ஏளனம், பரிகாசம், திமிராக பதில் சொல்லுவது, கேட்டும் கேளாத மாதிரி இருப்பது, முகம் சுழிப்பது, திட்டு, குத்தல், மட்டம் தட்டுவது, குறை கூறுவது, என்று எவ்வளவு செய்கிறோம். 


செய்யலாமா ?



Friday, June 19, 2026

கம்ப இராமாயணம் - நனி துடிக்கின்றன

 கம்ப இராமாயணம் - நனி துடிக்கின்றன 


ஒரு நாள் காகம் கரைகிறது. அன்று விருந்தினர் வருகின்றனர். 


மறுபடியும் மற்றொரு நாள் காகம் கரைகிறது, அன்றும் விருந்தினர் வருகின்றனர்.


இப்படி பல தடவை நடந்தால், நமக்கு என்ன தோன்றும்?  இந்த காகம் கரைவதற்கும், விருந்தினர் வருவதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நம் மனம் எண்ணும் அல்லவா?  


அது மனித இயற்கை. 


கரிய மேகம் சூழ்ந்தால், மழை வரும். 


நம்பிக்கைதான். 


விரக்தியின் எல்லையில் சில சமயம் நம்பிக்கைகள்தான் நமக்கு துணை புரிகின்றன. வாழ்வை மேலும் கொண்டு செல்ல நம்பிக்கைகள் உதவுகின்றன. 


நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை கையில் அகப்பட்டால் போல். 


சீதையின் இடது கண் துடிக்கிறது. அப்படி துடித்தால் நல்லது நடக்குமா?  


முன்பு இராமன் மிதிலை வந்தபோது இதே மாதிரி துடித்தது. திருமணம் நடந்தது. அதே போல் இப்போதும் துடிக்கிறது. ஏதோ நல்லது நடக்கப் போகிறதோ என்று எண்ணி மகிழ்கிறாள் சீதை. 


பாடல் 



‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,

துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,

இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்



பொருள்


‘முனியொடு = கௌசிகன் என்ற முனிவனோடு 


மிதிலையில் = மிதிலை மாநகரில் 


முதல்வன் = இராமன் 


முந்து நாள் = முன்பு ஒரு நாள் 


துனி அறு = குற்றம் அற்ற 


புருவமும் = புருவங்களும் 


தோளும் = தோளும் 


நாட்டமும் = கண்ணும் 


இனியன துடித்தன = இன்பமாகத் துடித்தன 


ஈண்டும் = இப்போதும் 


ஆண்டு என் = அதே போல் 


நனி துடிக்கின்றன = நன்றாக துடிக்கின்றன 


ஆய்ந்து நல்குவாய் = காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து சொல்வாய் (திரிசடை) என்கிறாள் சீதாப் பிராட்டி


இதெல்லாம் ஏன் கம்பர் சொல்கிறார். காப்பிய ஓட்டத்திற்கு இது தேவையா?  மிகப் பெரிய காப்பியம் செய்து கொண்டு போகும்போது, இது என்ன சின்னப் பிள்ளைத் தனமாக இருக்கிறதே என்று தோன்றும். யார் வாசிக்கப் போகிறார்கள். இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்து விட்டால், கதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும் அல்லவா?


காரணம் இல்லாமல் கம்பர் இதை வைக்கவில்லை. 


என்ன காரணமாக இருக்கும்?


 



Thursday, June 11, 2026

திருக்குறள் - அறிவின் பயன்

 திருக்குறள் - அறிவின் பயன் 


இன்று செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பற்றி பெரிய அளவில் பேசப் படுகிறது. 


அறிவு என்றால் என்ன? அறிவு உள்ளவன் என்ன செய்வான்? யாரை அறிவு இல்லாதவன் என்று சொல்ல முடியும்?


நிறைய படித்து, பட்டம் பெற்றவன் அறிவு உள்ளவனா? பள்ளிப் பக்கமே போகாதவன் அறிவு இல்லாதவனா? 


இது ஒரு புறம் இருக்கட்டும். 


அறிவு பெறுவதால் என்ன பயன்?


அறிவுக்கும், இந்த இன்னா செய்யாமை என்ற இந்த அதிகாரத்துக்கும் என்ன தொடர்பு. 


குறளைப் பார்க்கலாம். 


 

பாடல் 


அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை


பொருள் 


அறிவினான் = ஒருவன் தான் பெற்ற அறிவினால் 


ஆகுவது உண்டோ = பெற்ற பயன் என்ன ?


பிறிதின்நோய் = பிற ஒன்றின் துன்பத்தை 


தம்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல் எண்ணி 


போற்றாக் கடை = அத்துன்பத்தை நீக்காவிட்டால் 


இதை ஏன் துறவறத்தில் வைக்க வேண்டும். இல்லறத்தில் உள்ளவன் பிற உயிர்களை காக்க வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார், ஒரு துறவி உயிரின் நுட்பத்தை அறிவான். இல்லறத்தில் உள்ளவனுக்கு அந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்காது. 


"அறிவினான் ஆகுவது உண்டோ" என்றால் எந்த அறிவு? எனக்கு சிலை செய்யத் தெரியும், வண்டி ஓட்டும் அறிவு இருக்கிறது, சமைக்கத் தெரியும், கணனியில் வேலை செய்யும் அறிவு இருக்கிறது. அந்த அறிவால் உயிர்களை துன்பத்தில் இருந்து காப்பது எப்படி?


பரிமேலழகர் சொல்கிறார், இங்கே அறிவு என்பது , உயிர்களின் தன்மை பற்றி அறிந்த அறிவு என்று. 


"உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ"


"பிறிதின்" என்று ஏன் கூறினார்?


மற்ற மக்கள் மட்டும் அல்ல. மற்ற உயிர்களும் அதில் அடங்கும். எறும்பு, ஈ, போன்ற சிற்றுயிர்களும் அடங்கும். 


குசேலர், கண்ணனைப் பார்க்கப் போகும் போது, மர நிழலில் போகாமல், வெயிலில் நடந்து போனாராம். காரணம், நிழலில் எறும்பு போன்ற சிறிய உயிர்கள் உலாவும். தெரியாமல் அவற்றை மிதித்து அவற்றிற்கு துன்பம் செய்து விடக் கூடாதே என்ற கருணையால். 


சிவ இலிங்கத்துக்கு கண்ணில் இருந்து இரத்தம் வந்ததால், தன் கண்ணையே எடுத்துக் கொடுத்தான் கண்ணப்பன். ஒன்றல்ல, இரண்டையும். கல்லுக்கும் இரங்கியது அவன் கருணை. 


நோய் என்றால் துன்பம். 


தெரியாமல் கூட ஒரு உயிருக்கு தீங்கு செய்து விடக் கூடாது. நமக்கு யாராவது தெரியாமல் தீங்கு செய்தால், "பாவம் தெரியாமல் செய்து விட்டான் " என்று சும்மா இருப்போமா? எவ்வளவு வலி, கோபம் வருகிறது. மற்ற உயிர்களுக்கும் அப்படித்தானே வலியும் , கோபமும் இருக்கும். 


அதை உணர வேண்டும் என்கிறார். 


பிற உயிர்களுக்கு நாம் துன்பம் செய்யக் கூடாது என்பது மட்டும் அல்ல. அந்த உயிர்களுக்கு துன்பம் வராமால் காக்க வேண்டும். 


நமக்கு ஒரு துன்பம் வந்தால் என்ன செய்வோம்? வந்த துன்பத்தை போக்க நினைப்போம். இனி அந்த மாதிரி துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம் அல்லவா. 


தன் நோய் (தன்னுடைய துன்பம்) போல் போற்றாக் கடை என்றார். 


உயிர்கள் மேல் அன்பு வேண்டும். அவைகளும் துன்பம் இன்றி தீங்கு இன்றி வாழ வேண்டும். 



Tuesday, May 26, 2026

கம்ப இராமாயணம் - நலம் துடிக்கின்றதோ ?

 கம்ப இராமாயணம் - நலம் துடிக்கின்றதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2026/05/blog-post_26.html



வெளியில் இருந்து வரும் செய்திகள் நம் மூளைக்கு சென்று , அது அந்த செய்திகளை அலசி ஆராய்ந்து பார்த்து விடை சொல்வதற்கு முன்பே, நம் உடல் அந்த செய்தியின் தரத்தை அறிந்து விடுகிறது. 


உதாரணமாக, ஒரு சிலரை பார்த்தவுடன் சட்டென்று பிடித்து விடும். சிலரை பார்த்த உடனேயே ஒரு வெறுப்பு வரும். இவன் சரி இல்லை என்று ஏதோ ஒன்று நமக்குச் சொல்லும். The first impression is the best impression என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 


நாம் அவர்களைப் பற்றி ஆராயவில்லை. பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது. அது நம் உடல் சார்த்த கணிப்பு. அதில் மூளையின் பங்கு இல்லை. நம் உடலில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. நமக்கு வேண்டியவர்கள் எங்கோ இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இங்கு நம் மனதுக்கு என்னவோ செய்யும். வயிறு சரியா இருக்காது. மனம் எதிலும் ஒட்டாது. இது உடல் சார்ந்த அறிவு. 


ஆபத்து வரும் முன்னே வயற்றைக் கலக்கும். ஏன்?  உடல் சார்ந்த அறிவு என்று ஒன்று இருக்கிறது. 


வயதான ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளை பாருங்கள். ஒருவரின் குணம் மற்றவரிடம் இருக்கும். குரல், நடை , பாவனை, சில குறிப்பிட்ட சொற்களை கூறுவது, என்று. எப்படி இது நிகழ்கிறது. நம் வயிற்றில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் செயல்களை தீர்மானிக்கின்றன. வயிற்றில் சில பல மில்லியன் நியுரான்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கணவன், மனைவி இடையே இந்த நியுரான்கள் இட மாற்றம் நிகழ்கின்றன. எப்படி என்று திருமணம் ஆனவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 


நியூரான்கள் இடம் மாறும் போது, ஒருவரின் உடல் சார்ந்த பழக்க வழக்கங்கள் இன்னொருவருக்கு வந்து விடுகிறது. 


நம் உடல் சொல்வதை உற்றுக் கேட்டால் நமக்கு பல விடயம் புரியும். 


ஏன் திடீரென்று தலைவலை வருகிறது ? ஏன் சிலரிடம் பேசிவிட்டு வந்தால் ஒரு எரிச்சல் வருகிறது, சிலரிடம் பேசிவிட்டு வந்தால் ஒரு உற்சாகம் வருகிறது?  உன்னித்துப் பார்க்க வேண்டும். உடல் சொல்வதை கேட்க வேண்டும். உடலின் மொழியை நாம் மறந்து விட்டோம். 

 


இதை முன்பு சகுனம் என்றார்கள். புருவம் துடிப்பது, கண் துடிப்பது போன்றவை இந்த உடல் சார்ந்த அறிவின் கூறுகள். 


அசோகவனத்தில் சீதை தனித்து இருக்கிறாள். 


திடீரென்று அவளது இடது கண்ணும் புருவமும் துடிக்கின்றன. அப்படி என்றால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். சீதை கேட்கிறாள், திரிசடையிடம்  


"என்னுடைய வலப்பக்கக் கண்ணும், புருவமும் துடிக்கவில்லை. இடப்பக்கம் துடிக்கின்றது. ஏதோ நல்லது வரப் போகிறது போல இருக்கு. அல்லது, நான் செய்த தீவினை தான் இன்னும் வந்து என்னை துன்பம் செய்யப் போகின்றதோ ? ஒன்றும் விளங்கவில்லையே "


என்று.


பாடல் 

‘நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை

சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?

பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்

வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்!



பொருள் 

‘நலம் துடிக்கின்றதோ?  = நன்மைகள் என்னை நாடி வரத் துடி துடித்துக் கொன்றுக்கிறதா? 

நான் = நான் 

செய் தீவினை = செய்த தீய வினைகள் 

சலம் = கோபம் கொண்டு 

துடித்து = துடித்து 

 இன்னமும்  = மேலும் 

தருவது = (தீமைகளைத்) தருவது 

 உண்மையோ? = ஒரு வேளை உண்மையாக இருக்குமோ?

பொலம் = பொன்னால் செய்யப்பட்ட 

துடி மருங்குலாய்! = சிறிய இடையை உள்ள பெண்ணே (திரிசடை) 

புருவம் = புருவம் 

கண் நுதல் = கண், நெற்றி 

வலம் துடிக்கின்றில = வலப்பக்கம் துடிக்கவில்லை 

வருவது ஓர்கிலேன்! = என்ன வரப் போகிறதோ 





Wednesday, May 20, 2026

திருக்குறள் - செய்து விடல்

திருக்குறள் - செய்து விடல் 


நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கு பதிலுக்கு கெடுதல் செய்யாமல் அவர்கள் நாணும்படி அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிறது அடுத்த குறள் 


 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


நாம் அறிந்த குறள்தான். 


மேலோட்டமாகப் பாத்தால் அவ்வளவுதான் தோன்றும். 


சில சமயம், இது என்ன கூத்தாக இருக்கிறது. கெடுதல் செய்தவனுக்கு நல்லது செய்வதாவது...நம்மை அவன் கிறுக்கன் என்று நினைக்க மாட்டானா? 


சற்று ஆழமாக சிந்திப்போம்.


குழந்தை நம்மை எட்டி உதைக்கிறது. இரவில் தூங்க விடாமல் அழது பாடாய் படுத்துகிறது. பதிலுக்கு நாம் அதற்கு துன்பம் செய்வோமா? ஐயோ, பாவம் அதுக்கு என்ன வலியோ? பசிக்குதோ ? வயித்து வலி இருக்குமோ என்று அதன் துன்பத்தைத் குறைக்க நாம் முயல்வோம். அல்லாமல், நான் தூங்கும் போது என்னை தூங்க விடாமால் பண்ணினாய் அல்லவா, நீ தூங்கும் போது நாம் எப்படி உன்னை தூங்க விடாமல் பண்ணுகிறேன் என்று நாம் நினைப்பது இல்லை. 


கணவனோ மனைவியோ கோபத்தில் ஏதாவது சொல்லி விட்டாலும், பதிலுக்கு சண்டை போடுவது இல்லை. (பொதுவாக). மாறாக, மீண்டும் அவர்களிடம் சென்று சமாதனப் படுத்த முயல்வோம். ப்ச்ச் ...நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று அவர்கள் உள்ளுக்குள் வருந்துவார்கள். 


அதெல்லாம் சரி. வீட்டுக்குள் பெற்றோர், பிள்ளை, கணவன்/மனைவி யும் வெளி ஆட்களும் ஒன்றா? 


இல்லறத்தில் இருப்பவன் தன்னைச் சார்ந்தவர்களிடம் காட்டுவது அன்பு. 


அதே அன்பு உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மேலும் சென்றால் அது கருணை. துறவி எல்லா உயிரையும் ஒன்றாக நினைப்பவன். தனக்கு கெடுதல் செய்தவன் மேலும் கருணை பொழிவதுதான் துறவிக்கு அடையாளம். இந்த அதிகாரம் இருப்பது துறவறத்தில். 


எனவே இது துறவிக்குச் சொன்னது. 


இருந்தாலும், முடிந்தவரை இல்லறத்தில் உள்ளவனும் இதைக் கடைப் பிடிக்கலாம். 


கணவன்/மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று முடிந்தவரை இதை விரிவுபடுத்திப் பார்கலாம். 


"செய்து விடல்" என்று ஏன் கூறினார் என்று பரிமேலழகர் விளக்குகிறார். 


தீமை செய்தவனுக்கும் நன்மை செய்து, அப்படி நன்மை செய்ததையும், அவன் நமக்கு தீமை செய்ததையும் மறந்து விடல் என்கிறார். 


பிறர் நமக்குச் செய்த தீமைகளை  மறக்கலாம். நாம் அவர்களுக்குச் செய்த நன்மைகளை ஏன் மறக்க வேண்டும்? 


வள்ளுவர் சொல்கிறார், செய்த நல்லதை மனதில் வைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் இருந்து ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பின் மூலம் ஒரு பற்று இருக்கும். 


எனவே, மற்றவர் செய்த கெடுதலையும் மறந்து விட வேண்டும், அவர்களுக்கு நாம் செய்த நன்மையையும் மறந்து விட வேண்டும். 


மேலும், ஏதோ தீமை செய்தவர்களை மன்னித்து விடுவது அல்ல. 'ஒறுத்தல்' என்றால் தண்டித்தல் என்று பொருள். அவர்கள் வெட்கப்படும் படி அவர்களுக்கு நன்மை செய்வதே அவர்களுக்கு நாம் தரும் பெரிய தண்டனை என்கிறார். 


கெடுதல் செய்தவனுக்கு மறுபடியும் ஒரு கெடுதல் நாம் செய்தால், அவன் அதை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு கொடுமையை நமக்குச் செய்வான். நாம் பதிலுக்கு இன்னொரு தீமை செய்வோம். செய்து கொண்டே இருக்கலாம். 


அதுவா வாழ்வின் குறிக்கோள் ?  இப்படி ஒவ்வொருவர் செய்த தீமைக்கும் பதில் தீமை செய்து கொண்டிருந்தால் என்று இது முடிவது?  


வாழ்வின் நோக்கம், வீடு பேறு அடைவது.  


காரில் நீண்ட தூர பயணம் சென்று கொண்டிருப்போம். வழியில் சில நாய்கள் குரைக்கலாம். அதற்காக, வண்டியை விட்டு இறங்கிச் சென்று அதைப் பார்த்து குரைத்து  விட்டு வர வேண்டுமா என்ன?  


அதன் வேலை குரைப்பது. நம் வேலை நம் இலக்கை அடைவது. 


 



Friday, April 3, 2026

திருக்குறள் - விழுமம் தரும்

 திருக்குறள் - விழுமம் தரும் 



ஏன் இன்னா செய்யாமையை பெரிய அறமாக வள்ளுவர் கூறுகிறார். நமக்கு ஒருவன் தீங்கு செய்தான் என்றால் அவனுக்கு திருப்பி ஒரு தீங்கு செய்வதில் என்ன தவறு. நம்மை ஒருவன் அடித்தான் என்றால் பதிலுக்கு அவனுக்கு ஒரு அடி கொடுத்தால் அடுத்த முறை நம்மை அடிக்க யோசிப்பான் அல்லவா?


அது ஒரு நன்மை தானே. அதை ஏன் வள்ளுவர் வேண்டாம் என்கிறார்?


பாடல் 


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்


பொருள்

செய்யாமல் செற்றார்க்கும் = நாம் ஒரு தீங்கும் செய்யாமல் இருந்த போதும், நம் மேல் பகை பாராட்டி நமக்கு ஒருவன் தீங்கு செய்தால் 


 இன்னாத செய்தபின் = அவனுக்கு நாம் பதிலுக்கு ஒரு தீங்கு செய்தால் 


உய்யா விழுமம் தரும் = நாம் செய்த அந்த தீங்கு ஆனது மீள முடியாத துன்பத்தைக் கொடுக்கும். 


விழுமம் என்பது இங்கே துன்பம் என்ற பொருள் தாங்கி நின்றது. 


ஏன் அப்படி நிகழும் என்று வள்ளுவர் சொல்லவில்லை. பரிமேலழகர் சொல்கிறார். 


ஒரு துறவி, மிகுந்த தவம் செய்து, தன் ஆன்மீக பயணத்தில் முன்னே சென்று கொண்டு இருக்கும் போது, அவனுக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்தால், பதிலுக்கு அவனுக்கு ஒரு தீங்கு செய்ய முனையும் போது, அந்தத் துறவி இதுவரை பெற்ற தவத்தின் பலனை இழக்க நேரிடும். சாபம் கொடுப்பதின் மூலமும், தண்டிப்பதின் மூலமும், ஒரு முனிவன் தன் தவ வலிமயை இழக்கிறான். அது மட்டும் அல்ல, மற்றவனுக்கு தீங்கு செய்த பாவமும் வந்து சேரும். 


செய்த தவமும் போய், பாவமும் வந்து சேரும். நரகம் அல்லது மறு பிறவி நிகழும். மீண்டு வர முடியாத துன்பம் அது. 


எனவே "உய்யா விழுமம் தரும்" என்கிறார். 


சரி, அது துறவிக்கு, முனிவனுக்கு பொருந்தும். இல்லறத்தில் இருக்கும் நமக்கு?


ஒருவன் நமக்கு தீங்கு செய்தால், அந்தத் தீங்கை பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம், அவனுக்கு எப்படி பதிலுக்கு தீங்கு செய்யலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டு இருப்போம். சரியான சமயம் பார்த்து பழி வாங்குவோம். எவ்வளவு நேரம் விரயம் ? இந்த நேரத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் செய்து இருக்கலாம். 


சரி, பழி வாங்கியாகிவிட்டது. அதோடு முடியுமா என்றால் முடியாது. அடி வாங்கியவன் மீண்டும் நம்மைப் போல் சிந்திக்க ஆரம்பிப்பான். நாம் கொடுத்ததை விட அதிகமாக எப்படி திருப்பிக் கொடுப்பது என்று யோசிப்பான். 


இதற்கிடையில், அதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து நம் இரத்த அழுத்தம், மன அழுத்தம் எல்லாம் எகிறும். 


எப்படி முனிவனின் தவம் அழிகிறதோ, இல்லறத்தில் இருப்பவனின் நிம்மதி அழியும், உடல் நிலை கெடும். 


தேவையா?



Saturday, March 28, 2026

திருக்குறள் - கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்

 திருக்குறள் - கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்


https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_28.html


இந்த அதிகாரத்தின் முதல் குறளில், எவ்வளவு பெரிய நன்மை கிடைத்தாலும், அதற்காக இன்னொரு உயிருக்கு கெடுதல் செய்யக் கூடாது என்றார். 


சரி, பலன் வேண்டி இன்னா செய்யாமல் இருக்கலாம். 


நமக்கு ஒருவர் தீங்கு செய்தால்? அதுவும், நாம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் இருந்த போதும், அவர் நமக்கு ஒரு தீங்கு செய்தால், சும்மா இருக்க முடியுமா?  


உடலால் முடிந்தால் செய்வோம். இல்லை என்றால் அவன் நாசமாக போக வேண்டும் என்று மனதிலாவது நினைப்போம் அல்லவா?


வள்ளுவர் கூறுகிறார், நாம் ஒன்றும் செய்யாமல் இருந்த போதும், நமக்கு ஒருவர் தீங்கு செய்தாலும், அவருக்கு பதிலுக்கு ஒரு தீமை செய்யாமல் விடுவதே சிறந்தது என்று. 


பாடல் 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


பொருள் 


கறுத்து = நம் மேல் கோபம் கொண்டு, பகை கொண்டு 


இன்னா செய்தவக் கண்ணும்  = நமக்கு துன்பம் செய்தவர்களுக்கும் 


மறுத்து = அதற்கு பதிலாக 


இன்னா செய்யாமை  = அவர்களுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது 


மாசற்றார் கோள் = குற்றமற்ற தூயவர்கள் சொல்லும் நெறி 


இது துறவிகளுக்கு சொல்லப்பட்ட குறள்.


இல்லறத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். 


நடைமுறையில் சாத்தியமா?  ஒருவன் நமக்கு துன்பம் செய்தால், அவனுக்கு திருப்பி துன்பம் செய்யாவிட்டால் அவன் நம்மை ஒரு கையால் ஆகாதவன், கோழை என்று எண்ணி மீண்டும் மீண்டும் நமக்கு துன்பம் செய்யமாட்டானா? அவனைப் பார்த்து மற்றவர்களும் நமக்கு துன்பம் செய்யமாட்டார்களா? 


இதை இப்படி யோசித்துப் பார்ப்போம்.


ஒருவன் நமக்கு தீங்கு செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக் தீங்கு தீங்கு செய்கிறோம். அதற்கு அவன் நமக்கு இன்னொரு தீமை செய்கிறான், நாம் அவனுக்கு மேலும் ஒரு தீமை செய்கிறோம்.


இது எங்கே போய் முடியும்?  வெட்டு, குத்து, கொலை, சிறை, தூக்கு என்று போய் நிற்கும். 


இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான். அவனுக்கு பதிலுக்கு தீமை செய்திருக்கலாம். "இன்று போய் நாளை வா" என்று கருணை செய்தான் இராமன். அவன் திருந்தவில்லை. மீண்டும் போருக்கு வந்து அடிபட்டு இறந்தான். 


தனக்கு இவ்வளவு துன்பங்களைத் தந்த கைகேயியை மன்னித்தான் இராமன். 


மனைவியின் துகிலை சபையில் உரித்தவனை, பதினமூன்று வருடம் காட்டுக்கு அனுப்பியவனை மன்னித்து, ஐந்து வீடாவது கொடு என்று கேட்டான் தர்மன். 



"துரியோதனன் கொடுமைக்கு அல்ல, உன் அருளுக்கு அஞ்சினேன்" என்றான் பீமன். 


இறுதியில் அழிந்தது யார்? பொறுத்தவர்களா அல்லது தீங்கு செய்தவர்களா?


பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே என்றார் பாரதி. 


தனக்கு பிறர் செய்த துன்பங்களை மனதில் கொள்ளாமல் தாண்டிச் செல்வது ஒரு வழி. 


அதை மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி, புரையோட விடுவது இன்னொரு வழி. 


எது சிறந்த வழி ?




Sunday, March 22, 2026

கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள்

 கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_22.html



வார்த்தைகள்.!!



வார்த்தைகள் வலிமை மிக்கவை. 


அவை நம் வாழ்க்கையை மட்டும் அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ்வையும் பாதிக்கும். 


அது நல்லதாகவும் இருக்கலாம். அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம். 


எவ்வளவு பெரிய துன்பத்தில் ஒருவர் இருந்தாலும், ஆறுதலான நாலு வார்த்தை போதும், அவர்கள் துன்பத்தை மாற்ற, அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஊட்ட. 


யோசித்துப் பாருங்கள். 


திருக்குறள், கம்ப இராமாயணம், தேவாரம், பிரபந்தம், விவிலியம் எல்லாம் வார்த்தைகளின் தொகுப்பு. நம் வாழ்க்கைக்கு அவை வழிகாட்டி நிற்கின்றன. நம்மை நல்வழிப் படுத்துகின்றன.


காலம் காலமாய், அணையா விளக்காய், கலங்கரை விளக்காய் நின்று வழி காண்பித்துக் கொண்டிருக்கின்றன.


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். சுற்றிலும் அரக்கியர்கள்.  பேசக் கூட ஆள் இல்லை. தனிமை. சோகம். பயம். விரக்தி. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறி. இதற்கு நடுவில் சீதை. 


அந்த அரக்கியர் நடுவில், திரிசடை என்று ஒரு பெண். வீடணனின் மகள். 


அவளை கம்பன் அறிமுகள் செய்கிறான். 


"இன் சொலின் திருந்தினாள்" என்று. 


அவள் இனிய சொற்களை பேசுவது மட்டும் அல்ல, அவற்றையும் திருத்தமாக, தவறின்றி அழகாகப் பேசுவாளாம். 


பாடல் 


இருந்தனள்;திரிசடை என்னும் இன் சொலின்

திருந்தினாள்ஒழிய, மற்று இருந்த தீவினை

அருந் திறல்அரக்கியர், அல்லும் நள் உறப்

பொருந்தலும்,துயில் நறைக் களி பொருந்தினார்.


பொருள் 


இருந்தனள் = அரக்கியர் நடுவில் இருந்தாள். யார்? 


திரிசடை என்னும் = திரிசடை என்ற 


இன் சொலின் திருந்தினாள் = இனிய சொல்லை திருத்தமாகப் பேசும் பெண் 

 


ஒழிய = அவளைத் தவிர்த்து 


 மற்று இருந்த = மற்ற பெண்கள் 


 தீவினை = தீய வினை புரியும் 


அருந் திறல்அரக்கியர் = பெரிய பலம் கொண்ட அரக்கியர் 


அல்லும்  = இரவு 


நள் உறப் பொருந்தலும் = நடு இரவு வந்த நேரத்தில் 


துயில் = தூக்கத்தோடு 


நறைக் களி பொருந்தினார்  = கள் உண்ட மயக்கத்தில் இருந்தார்கள் 


தண்ணி அடிச்சிட்டு மட்டையாகி விட்டார்கள் என்கிறார். 


கோர தோற்றம் கொண்ட அரக்கியர். வலிமையானவர்கள். மது அருந்திவிட்டு , மயங்கிக் கிடக்கிறார்கள். 


அவர்கள் நடுவில் பிராட்டி. 


தூங்காமல் விழித்து இருக்கிறாள். 


அவளோடு கூட திரிசடையும் விழித்து இருக்கிறாள். 


அப்போது சீதை திரிசடையிடம் சொல்லத் தொடங்குகிறாள் 




Friday, March 20, 2026

இன்னா செய்யாமை - சிறப்பு ஈனும் செல்வம்

இன்னா செய்யாமை - சிறப்பு ஈனும் செல்வம் 




நாம் மற்றவர்களுக்கு ஏன் துன்பம் செய்கிறோம் என்பதற்கு பரிமேலழகர் மூன்று காரணங்கள் கூறினார். 


தனக்கு ஒரு நன்மை வரும் என்றால் 
மறந்து போய் 
பிறர் தனக்கு துன்பம் செய்ததை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு பதிலுக்கு துன்பம் செய்வது 


என்ற மூன்று காரணங்களைச் சொன்னார்.


இதில் முதலில் வரும் நன்மை கருதி பிறருக்கு துன்பம் செய்வதை பற்றி முதலில் கூறுகிறார். 


சின்ன சின்ன இலாபம் வரும் என்றால் அதற்காக மற்றவர்களை துன்பம் செய்யமாட்டோம். 

ஆனால், அதுவே மிகப் பெரிய இலாபம் என்றால்? 

யாருக்கும் சபலம் வரும்.  


"அதெல்லாம் இல்லை...எவ்வளவு இலாபம் என்றாலும் நான் பிறருக்கு துன்பம் செய்ய மாட்டேன்" என்று சிலர் சொல்லலாம். 

எவ்வளவு இலாபம் என்பதில் இருக்கிறது சிக்கல். அது பணமாக, செல்வமாக இருக்க வேண்டும் என்று அல்ல. 

புகழ், பெருமை, உத்தியோக உயர்வு, என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் 

பாடல் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


பொருள்

சிறப்புஈனும்  = சிறப்பில் இருந்து வரும் அல்லது விளையும் 

செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும் 

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 

இன்னா செய்யாமை  = துன்பம் செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள். = குற்றம் அற்றவர்களின் வழி 



செல்வம் பெறினும் என்று சொல்லி இருக்கிறார்...பணத்துக்காக யாராவது மற்றவர்களை துன்பம் செய்வார்களா...நான் செய்ய மாட்டேன் என்று சிலர் சொல்லலாம்.

சிறப்பு, செல்வம் என்பதற்கு பரிமேலழகர் ஒரு தனி விளக்கம் தருகிறார்.  நம்மால் அப்படியெல்லாம் யோசிக்கக் கூட முடியாது. 


சிறப்பு என்றால் யோகம் என்றும் 

அது தரும் செல்வம் என்றால் அணிமா, மகிமா போன்ற வித்தைகள் என்றும் கூறுகிறார். 


அது என்ன அட்டமா சித்திகள் ?


  • அணிமா: அணுவைப் போல் உடலை மிகச் சிறியதாக மாற்றுதல்.
  • மகிமா: மலையைப் போல் உடலைப் பெரிதாக்குதல்.
  • லகிமா (இலகிமா): காற்றைப் போல் உடல் எடையை மிகவும் இலேசாக மாற்றுதல்.
  • கரிமா:
     மலையைப் போல் உடலை மிகவும் கனமாக்குதல்.

யோகத்தை சரிவர செய்தால், இந்த அட்டமா சித்திக்கள் கிடைக்கும் என்கிறார் பரிமேலழகர். 

யோசித்துப் பாருங்கள் - எதையும் அடையலாம், பஞ்ச பூதங்களை வசப்படுத்தலாம், உடலை பெரிதாக ஆக்கலாம், அணுவைப் போல சிறிதாகச் செய்யலாம் என்று பெரிய பெரிய சித்து வேலைகள் எல்லாம் செய்யலாம். 

இவற்றை செல்வம் என்கிறார். 


இந்த செல்வத்தைத் தரும் சிறப்புதான் யோகம். 


சரி, இந்த யோகத்துக்கும், செல்வத்துக்கும், இன்னா செய்யாமைக்கும் என்ன சம்பந்தம் ?


இருக்கிறது. 


யோகம் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. 



எனவே,சிலர் என்ன செய்வார்கள் என்றால், உயிர்களை பலி கொடுத்து, பல சிறிய தேவதைகளை திருப்தி செய்து இந்த சக்திகளை பெற்றுக் கொள்வார்கள். 


உயிர்பலி என்றால் நர பலியும் அதில் அடங்கும். 



அப்படி ஒரு சித்தி கிடைக்கும் என்றால் ஒரு கோழியையோ, ஆட்டையோ வெட்டி பலி கொடுத்தால் நமக்கு அந்த சக்தி கிடைக்கும் என்றால் செய்வோமா? மாட்டோமா?  


விசா இல்லாமல் அமெரிக்கா போகலாம், விமான சீட்டு வாங்க வேண்டாம், நினைத்த மாத்திரத்தில் போய் விடலாம்.  மழை வேண்டும் என்றால் பெய்ய வைக்கலாம், வேண்டாம் என்றால் நிறுத்தலாம் ...யோசித்துப் பாருங்கள் எவ்வளவு பெரிய சக்தி என்று. 



வள்ளுவர் கூறுகிறார், அப்படி ஒரு மத்தான சக்தி கிடைக்கும் என்றாள் கூட மாசற்றார் பிற உயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் என்று. 


ஒரு உயிரை துன்பம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

யார் ?

மாசற்றார்.

மாசற்றார் என்றால் யார்? 


வேத ஆகமங்களை படித்து உணர்ந்தவர்கள்.


சரி, இதெல்லாம் குறளில் இல்லையே, பரிமேலழகர் தன் பாட்டுக்கு உரை எழுதுகிறாரோ என்ற சந்தேகம் வரலாம். 


அறத்துப் பாலை வள்ளுவர், இல்லறம் , துறவறம் என்று இரண்டாகப் பிரித்தார். 


இந்தக் குறள் வருவது துறவறம் என்ற பகுதியில். 


துறவறத்தில் உள்ள ஒருவனுக்கு செல்வம் என்றால் எது?  காசு, பணம், வீடு, வாசல், நகை நட்டு அல்ல. அவனுக்குக் கிடைக்கும் செல்வம் சித்திகள். அந்த சித்தி எப்படி வரும்? அவன் கடைபிடிக்கும் யோகத்தால் வரும். 


எனவே சிறப்பு என்றால் யோகம் என்று, அது ஈனும் செல்வம் என்றால் அட்டமா சித்திகள் என்று கூறினார். 


இன்றைய நிலையை நினைத்துப் பார்ப்போம். 


பாலியல் துன்புறுத்தல்கள், பள்ளி கல்லூரிகளில் ராக்கிங் என்ற பெயரில் துன்பம் செய்வது, கொலை, வெட்டு, குத்து, பெட்ரோல் கிடைக்கும் என்றால் ஒரு நாட்டின் மேல் குண்டு வீசி அந்த நாட்டை அழிப்பது...என்று எவ்வளவோ நடக்கிறது. 


பிற உயிர்களை துன்பம் செய்யாமல் இருக்கப் பழக வேண்டும். 


உடல் துன்பம் மட்டும் அல்ல, மனத் துன்பம் கூட இதில் அடங்கும். 


யாருமே மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருக்கும் ஒரு நாட்டை எண்ணிப் பார்போம். எப்படி இருக்கும்?