திருக்குறள் - தன்னுயிர் நீப்பினும் செய்யற்க
தற்காத்து கொள்வதற்காக கொலை செய்வதை சட்டம் அனுமதிக்கிறது. அது குற்றம் அல்ல என்று சட்டம் சொல்கிறது. கொல்லும் நோக்கம் இல்லை. தற்காப்புதான் நோக்கம் என்றால், அது குற்றம் இல்லை என்பது சட்டம்.
வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார்.
தன்னை கொல்ல வரும் மற்றொரு உயிரையும் கொல்லாதே என்கிறார். மற்ற உயிர் என்பது விலங்காக இருக்கலாம் அல்லது மனிதனாக இருக்கலாம்.
பாடல்
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை
பொருள்
தன்னுயிர் = தன்னுடைய உயிர்
நீப்பினும் = நீங்கும் என்றாலும்
செய்யற்க = செய்யாமல் இருக்க
தான் = ஒருவன்
பிறிது = மற்றொரு
இன்னுயிர்= இனிய உயிரை
நீக்கும் வினை = அதன் உடம்பில் இருந்து நீக்கும் செயல்
அதாவது, ஒருவனுக்கு உயிரே போகும் என்றாலும், இன்னொரு உயிரை கொல்லாதே என்கிறார்.
அது நமக்கு நடைமுறையில் சாத்தியமாகப் படவில்லை. நம் உயிரை காத்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லையா என்ற கேள்வியில் ஞாயம் இருக்கிறது.
அதற்கு பரிமேலழகர் என்ன உரை செய்கிறார் என்றால்,
"தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. "
தான் கொலையுண்டால், ஒருவன் செய்த பாவங்கள் போய் விடும்.
மாறாக
ஒருவன் கொலை செய்தால் (அவன் உயிரை காக்கும் பொருட்டு), அவனுடைய பாவச் சுமை ஏறும்.
கொல்லப்படுவது துயரமான ஒன்றுதான். ஆனால், அது ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும். மாறாக, கொலை செய்தால், அந்தப் பாவம் பற்றி, அதைத் தீர்க்க எத்தனை பிறவி எடுத்து துன்பப் பட வேண்டுமோ என்ற ரீதியில் அவர் விளக்கம் செய்கிறார்.
என் அனுபவத்தில் நான் இப்படிப் பார்க்கிறேன்.
எந்த ஒரு அறத்தையும் முழுமையாகச் செய்யச் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு விதி விலக்கு அளித்தால், அது பெரிதாகிக் கொண்டே போகும். நாளடைவில் அறம் நீர்த்துப் போகும்.
பொய்மையும் வாய்மையிடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
என்று ஒரு விதி விலக்கு தந்தார். நல்லது தரும் என்றால் பொய் சொல்லலாம் என்று சொல்லி விட்டார்.
நல்லது என்றால் என்ன, சின்ன நன்மை, பெரிய நன்மை என்று பாகு பாடு உண்டா, எத்தனை முறை சொல்லலாம், என்றெல்லாம் கேள்வி வரும். ஒவ்வொன்றிற்கும் விளக்கம் தர வேண்டும். கடைசியில், உண்மை சொல்ல வேண்டியது கட்டாயம் இல்லை என்ற அளவில் அது போய் நிற்கும்.
தற்காத்துக் கொள்ள கொலை செய்யலாம் என்று ஒரு விதி விலக்கு வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
இன்னொரு உயிரை காக்க கொலை செய்யலாமா ? என் உயிரை காக்க கொலை செய்யலாம் என்றால் என் மனைவி, குழந்தைகள், உடன்பிறப்புகள்....அவர்கள் உயிரை காக்க கொலை செய்வது எப்படி குற்றமாகும் என்ற கேள்வி வரும்.
சரி, அதுவும் விதி விலக்கு என்றால், நாட்டைக் காக்க, வீட்டைக் காக்க, மதத்தைக் காக்க, இனத்தை காக்க என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
எனவே, வள்ளுவர், எந்த ஒரு காரணத்துக்காகவும் கொலை செய்யக் கூடாது என்று ஒரே ஒரு விதியாக அதைச் சொல்கிறார்.
கோடு போட இடம் கொடுத்தால் ரோடு போட்டு விடுவார்கள் என்று வள்ளுவருக்குத் தெரியும் போல் இருக்கிறது.
கொலை செய்வது பாவம் என்ற ஒரு விதியை கடை பிடித்தால்
போர் இருக்குமா?
சாதிச் சண்டை, மதச் சண்டை, இனச் சண்டை, சொத்துக்காக கொலை செய்வது, அரசியல் ஆதாயத்துக்கு கொலை செய்வது, செய்த தவறை மறைக்கக் கொலை செய்வது என்று ஒரு கொலையும் இருக்காது. அப்படி ஒரு சமுதாயம், நாடு, உலகம் இருக்கும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகளையும் கொலை செய்வது கூடாது என்பது அதில் அடங்கும்.
எல்லா உயிரும் தன்னுயிர் போல் நினைக்கும் அருள் உள்ளம் பிறக்கும்.
No comments:
Post a Comment