கம்ப இராமாயணம் - நல் மருந்து போல்
வாழ்க்கை இயந்திர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. நிற்க நேரம் இல்லை. பார்த்து இரசிக்க நேரம் இல்லை. யாரிடமும் இருந்து பேச நேராம் இல்லை. எந்நேரமும் ஒரே ஓட்டம். பின் அசதி.
மழையை இரசிக்க, அதிகாலையில் நடக்க, நடக்கும் போது வழியில் உள்ள பறவைகளை பார்க்க, அவற்றின் குரலை கேட்க என்று நேரம் ஒதுக்க முடிவதில்லை.
இராமாயணம் போன்ற காப்பியங்களை நிறுத்தி, நிதானமாக, ஒவ்வொரு பாடலாக இரசித்துக் கொண்டே போகலாம்.
அவற்றில் உள்ள உணர்சிகள், உவமைகள், கவி நயம், சொல் நயம், ஓசை நயம், என்று இரசிக்க அவ்வளவு இருக்கிறது.
காப்பிய ஓட்டத்தை பாதிக்காத பகுதிகளை அப்படியே தள்ளி விட்டுப் போய் விடுகிறோம். எத்தனை பேர் யுத்த காண்டம் முழுவதையும் வாசித்து இருக்கிறோம். பொறுமை இருப்பது இல்லை.
காட்சிப் படலம் என்ற பகுதி மிக சுவையான பகுதி. சோகமான பகுதியும் கூட.
இங்கே சீதையின் துயரத்தை கம்பன் பிழிகிறான். நம் கண்ணில் நீர் வரும். இராவணன் வருகிறான். சீதையை மிரட்டுகிறான். பின் கெஞ்சுகிறான். திரிசடை ஆறுதல் கூறுகிறாள். இவற்றை எல்லாம் அனுமன் பார்த்துக் கொண்டிருக்கிறான். உணர்ச்சி மிகுந்த பகுதி.
மெல்ல வாசிப்போமே. என்ன அவசரம்...
அரக்கியர் சூழ்ந்து இருக்க சீதை உடலும் உள்ளமும் நலிந்து இருக்கிறாள்.
பாடல்
வன்மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு
இருந்தாள்;
கல் மருங்கு,எழுந்து என்றும் ஓர் துளி வரக் காணா
நல்மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மென்மருங்குபோல், வேறு உள அங்கமும்
மெலிந்தாள்.
பொருள்
வன்மருங்குல் = மருங்குல் என்றால் இடை. வன் மருங்குல் என்றால் பெரிய இடை. வயிறு பெருத்த உருவம்
வாள் அரக்கியர் = வாள் போன்ற கூரிய கொடிய அரக்கிகள்
நெருக்க = அருகில் வர, சுற்றி சூழ்ந்து இருக்க
அங்கு இருந்தாள் = அங்கே சீதை இருந்தாள்
கல் மருங்கு = கல்லின், பாறையின் பக்கத்தில்
எழுந்து = வளர்ந்து
என்றும் = எப்போதும்
ஓர் துளி வரக் காணா = ஒரு துளி நீர் கூட வராத
நல்மருந்துபோல் = நல்ல மருந்து போல
நலன் அற = அனைத்து நலன்களும் அற்று
உணங்கிய நங்கை = மெலிந்த, வற்றிய சீதை
மென்மருங்குபோல் = மெலிந்த இடை போல்
வேறு உள அங்கமும் = உடலின் மற்ற பாகங்களும்
மெலிந்தாள் = மெலிந்து இருந்தாள்
இடை மெலிந்து இருந்தால் அழகு. உடம்பே மெலிந்து இருந்தால் எப்படி இருக்கும்.
பாறைகளின் நடுவே வளரும் மூலிகை செடி போல, கரிய பெரிய அரக்கியரின் நடுவில் பிராட்டி இருந்தாள்.
No comments:
Post a Comment