Wednesday, May 30, 2018

நாலடியார் - நிலையறியா ஆமை போல்

நாலடியார் - நிலையறியா ஆமை போல் 


அவன் ஒரு பேதை என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். பேதை என்றால் என்ன ?

வருகின்ற துன்பத்தை அறியாமல் மகிழ்ந்து இருப்பவன் பேதை.

சிகரெட் பிடிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதனால் வரப் போகும் துன்பத்தை அறியாமல் அந்த சந்தோஷத்தின் பின்னால் போகிறவன் பேதை.

மது அருந்துவதும் அப்படித்தான்.

சூதாடுவது.

படிக்கின்ற காலத்தில், படிக்காமல் நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருப்பது....

இதெல்லாம் பேதைமை.

வருகின்ற துன்பம் அறியாமல், ஆடிப் பாடி சந்தோஷமாக பொழுதை கழிப்பது பேதைமை.

கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள், சில சமயம் ஆமையும் பிடித்து வருவார்கள்.

பெரிய அண்டாவில்,  குளிர்ந்த நீரை விட்டு, அந்த அண்டாவில் ஆமையை நீந்த விட்டு, அண்டாவிற்கு அடியில் நெருப்பை மூட்டி விடுவார்கள். குளிர்ந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏறும். வெது வெதுப்பான நீரில் , அந்த ஆமை அங்கும் இங்கும் நீந்தி மகிழும்.  நீர் சூடு ஏறி கொதிக்கக் தொடங்கும்.  சூடு பொறுக்க மாட்டாமல் ஆமை  வெந்து மடியும்.

அது பேதைமை.

சரி, இது மட்டும் தானா பேதைமை ?

இறப்பு வரும். காலன் வருவான். அது தெரியாமல், ஆடிப் பாடி மகிழும் நாம் செய்வதற்கு என்ன பெயர் வைக்கலாம் ?

பாடல்

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.


பொருள்

கொலைஞர்  = கொலையில் வல்லவர்கள்

உலையேற்றித் = உலையில் நீரை ஏற்றி

தீமடுப்ப = தீ மூட்டி வைத்த பின்

ஆமை = அதில் மிதக்கும் ஆமை

நிலையறியா = தன் நிலை அறியாமல்

தந்நீர் = அந்த நீர்

படிந்தாடி யற்றே = படிந்து ஆடியற்றே

கொலைவல் = கொலையில் வல்ல

பெருங்கூற்றம் = பெரிய கூற்றுவன் (எமன்)

 கோள்பார்ப்ப = நாள் பார்த்து வருவான்

ஈண்டை = இங்கு

வலையகத்துச் = வலையில் மாட்டி

செம்மாப்பார் =  சிறப்பாக மகிழ்ந்து இருப்பவர்

மாண்பு = செயல்

வரும் துன்பம் அறியாமல் , என்னா ஆட்டம்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_30.html

Tuesday, May 29, 2018

திருக்குறள் - தீயும் தீயவையும்

திருக்குறள் - தீயும் தீயவையும் 


பாடல்

தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும் 

பொருள்

தீயவை = தீமையானவை

தீய பயத்தலால் = தீமை தருவதால்

தீயவை = தீயவை

தீயினும் = நெருப்பை விடவும்

அஞ்சப் படும் = பயப்படப்படும்

குறள் என்னவோ சின்னதுதான். பொருள் தெரியாத வார்த்தை ஒன்றும் இல்லை. இருந்தும், மிக மிக ஆழமான பொருள் பொதிந்தது.

தீயவை நமக்குத் தீமை தருவதால், அத்தகைய தீமைகள் தீயை விடவும் அஞ்சப் படும்.

இதில் இன்ன பெரிய ஆழமான அர்த்தம் இருக்கப் போகிறது?


"தீயினும்" = தீ நல்லது தானே. தீயை வைத்துத் தானே சமையல் செய்கிறோம். தீயினால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது. பின் ஏன் தீயவற்றை தீயோடு ஒப்பிடுகிறார்?

தீ நல்லது தான். மிகவும் தேவையான ஒன்று தான். அதற்காக அதை தவறான முறையில்  கையாண்டால் வீட்டையும், நாட்டையும் எரித்து சாம்பலாகி விடும். சமையல் செய்யும் போது , தீ நல்லது தானே என்று அடுப்பை அதிகமாக எரிய விட்டால் , பாத்திரம் அடி பிடித்து , சமையல் புகை நாற்றம் பிடித்து வாயில் வைக்க முடியாது.

தீ நல்லதுதானே என்று நடு வீட்டில் அதை கொண்டு வந்து வைக்க முடியாது.

அளவோடு உபயோகிக்க வேண்டும்.

அது போலத்தான் தீயவைகளும்.

தீயவை என்றால் என்ன ?

கை பேசி நல்லது தான். அதற்காக சதா சர்வ காலமும் whatsap பார்த்துக் கொண்டு இருந்தால், அதே கை பேசி தீமையில் போய் முடியும்.

டிவி நல்லது தான். அதற்காக அதையே எந்நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால், அது நம் வாழ்வை சிதைத்து விடும்.

உணவு நல்லது தான். அதையே அளவுக்கு அதிகமாக உண்டால் இல்லாத பிரச்சினகைள் எல்லாம் வந்து சேரும். அதுவே நம் உயிர்க்கு உலை வைத்து விடும். அளவுக்கு அதிகமான தீயைப் போல.

நல்லது என்று தான் கைப் பேசி,  laptop எல்லாம் வாங்கித் தருகிறோம். அதுவே தீமையாக  மாறிப் போய் விடுகிறது.

பிள்ளைகளோடு பேச முடிவதில்லை. உறவினர்கள் வந்தால் பேசி சிரித்து மகிழ முடியவில்லை.

அது போகட்டும்.

அது என்ன "தீயினும்" என்ற சொல்லில் ஒரு 'ம்' .

தீயைவிட என்று ஏன் சொன்னார் ?

தீ தொட்டவுடன் சுடும். விலகினால் சுடாது.

ஆனால், தீயவையோ, தொடும் போதும் சுடும். விட்டு விலகிய பின்னும் சுடும், . வருத்தும். அதனால், தீயினும்.

தீ தொட்டவர்களை மட்டும் தான் சுடும். தீயவையோ, சுற்றுப் புறம், அக்கம் பக்கம், குடும்பம், நட்பு என்று எல்லோரையும் சுடும்.

என் வீட்டில் தீ பிடித்தால் அது என் வீட்டை மட்டும் எரிக்காது. மேல் வீடு, கீழ் வீடு என்று அந்த மொத்தம் அபார்ட்மெண்ட் ஏ எரிந்து சாம்பலாகும். அவர்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும்  கிடையாது. இருந்தும், என் வீட்டில் பிடித்த  தீ அவர்களையும் எரிக்கும். நம் தீமைகள் நம் அண்டை அயலாரை மட்டும் அல்ல, வெகு தூரத்தில் உள்ளவர்களையும் சுடும்.

தீ தொடுகின்ற நேரத்தில் சுடும். எரிக்கும். தீயவையோ , காலம் கடந்து வந்தும் சுடும். என்றோ செய்த பாவம், பின்னாளில் வந்து சுடும்.

தீயவை என்ற பட்டியலில் எதெல்லாம் வரும் என்று யோசித்துப் பார்போம்.

தீயவர்கள், தீய பழக்கங்கள் (பொறாமை, சோம்பேறித்தனம், மறதி போன்றவை) , தீய பொருள்கள் (மது, சிகரெட், போதைப் பொருள்கள்  போன்றவை)...இவை எல்லாம் தீயவையில் வரும்.

அது நமக்குத் தெளிவாகத் தெரியும்.

சிக்கல் என்ன என்றால், நல்லவை, ஒரு அளவைத் தாண்டும் போது தீயவையாக  மாறிவிடும். எந்த அளவு என்பதில் தான் சிக்கல். அளவைத் தாண்டி விட்டால் அவை தீயவை.

உணவு, ஓய்வு, டிவி, செல் போன், தூக்கம், நண்பர்களோடு அளவளாவுதல் போன்றவை ஒரு கட்டுக்குள் இருந்தால் நல்லவை, அளவு தாண்டினால் தீயவை.

நல்லவை , அவற்றின் அளவைத் தாண்டும் போது , அவற்றையும் தீயவை பட்டியலில் சேர்க்க வேண்டும்.

"அஞ்சப் படும்" என்றார். விலக்கப்படும் என்று சொல்லி இருக்கலாம்.

அஞ்ச வேண்டும்.

அளவுக்கு அதிகமாக உண்பதற்கு அச்சப் பட வேண்டும். பயப்பட வேண்டும். ஐஸ் கிரீம், காரட் அல்வா, என்றால் ஆசைப் படக் கூடாது. அச்சப் பட வேண்டும்.

Whatsapp ஐ கண்டு அஞ்ச வேண்டும். ஐயோ, என் பொன்னான நேரம் எல்லாம் வீணாக்கி விடுமே என்று அஞ்ச வேண்டும்.

வள்ளுவர் காலத்தில் டிவி யும், whatsapp ம் கிடையாது தான். இருந்தும், குறள் என்றும் நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறது. கலங்கரை விளக்காக.

ஆழ்ந்து சிந்தியுங்கள். அசைப் போட்டுப் பாருங்கள். தீயவற்றை விலக்குங்கள். வாழ்வு வசப்படும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_29.html

Friday, May 25, 2018

திருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம்

திருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம் 


பாடல்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

பொருள்

எந்நன்றி = எந்த நன்றியை, எந்த அறங்களை

கொன்றார்க்கும் = கெடுத்தவர்களுக்கும்

உய்வுண்டாம் = அந்த பாவத்தில் இருந்து விடுபட வழி உண்டு

உய்வில்லை = உய்வில்லை, வழி இல்லை

செய்ந்நன்றி = ஒருவர் தனக்கு செய்த நன்றியை

கொன்ற மகற்கு = சிதைத்த மக்களுக்கு

ஒருவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தர்வகளுக்கு ஒரு காலும் அந்தப் பாவத்தில் இருந்து விடு பட வழி இல்லை என்கிறார் வள்ளுவர்.

உலகில் எவ்வளவோ பெரிய பெரிய பாவங்கள் இருக்கின்றன. கொலை , கொள்ளை, கற்பழிப்பு, சூது, துரோகம், சூறையாடல், என்று ஆயிரக்கணக்கில் குற்றங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நன்றி மறந்ததை மட்டும் வள்ளுவர் ஏன் இவ்வளவு பெரிதாகக் கொள்கிறார் ?

பசுவின் முலையை அறுத்தவர், பெண்ணின் கருவை சிதைத்தவர், ஆசிரியரை கொன்றவர் என்றெல்லாம் பெரிய கொடுமையான குற்றங்கள் இருக்கும் போது , நன்றி மறப்பது என்ன பெரிய குற்றமா ? ஏதோ மறந்து விட்டது. அந்த பாவத்துக்கு ஒரு வடிகாலே இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

நம்மைச் சுற்றிப் பார்ப்போம். என்ன நிகழ்கிறது என்று.

பிள்ளைகள் , பெற்றோரின் துன்பங்களை, தியாகங்களை மதிப்பது இல்லை. "என்ன பெரிதாகச் செய்து விட்டீர்கள். உலகத்தில் இல்லாத ஒன்றையா செய்து விட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கடமை. நானா உங்களை பெறச் சொன்னேன் ?" என்றெல்லாம் பேசுகிறார்கள். ஊன் மறந்து , உறக்கம் மறந்து, தங்கள் இன்பங்களை எல்லாம் தியாகம் செய்த பெற்றோரிடம் ஒரு நன்றி பாராட்டுதல் இல்லை.

மாணவர்கள், ஆசிரியர்களை கேலி செய்கிறார்கள், கேலிப் பெயர் வைத்து அழைக்கிறார்கள். "என்ன பெரிய ஆசிரியர். ஒரு வாரம் கொடுத்தால் அவரை விட நான் அதிகம் தெரிந்து கொள்வேன். இன்டர்நெட்டில் போனால் எல்லாம் கிடைக்கும். மேலும் அவர் என்ன இலவசமாகவா சொல்லித் தருகிறார். பீஸ் கட்டுறோம் இல்ல..." என்று பேசுகிறார்கள்.கல்விக் கண் திறந்த ஆசிரியர்கள் பால் ஒரு நன்றி இல்லை.

நோயாளிகள், மருத்துவரை மதிப்பது இல்லை. கேலி பேசுகிறார்கள். மட்டம் தட்டுகிறார்கள். வலி போக்கி, உயிர் காக்கும் மருத்துவர் மேல் ஒரு நன்றி கிடையாது.

தொழிலாளிகள், மேலதிகாரியை மதிப்பது இல்லை, வேலை செய்யும் நிறுவனத்தை மதிப்பது இல்லை. வேலை தந்து, சம்பளம் தந்து, சமூகத்தில் ஒரு மதிப்பு தந்த நிறுவனம் அதன் அதிக்கரிகளிடம் ஒரு நன்றி பாராட்டுதல் கிடையாது.

பொது மக்கள் அரசாங்கத்தை, அரசு அதிகாரிகள் செய்யும் நன்மைகளை நினைத்துப் பார்ப்பது இல்லை.

கணவன் செய்த நன்மைகளை மனைவி நினைப்பது இல்லை. மனைவி செய்த நன்மைகளை கணவன் நினைப்பது இல்லை.

இப்படி ஒரு சமுதாயமே, ஒரு நாடே நன்றி மறந்து இருந்தால் என்ன ஆகும்.

பெற்றோருக்கு பிள்ளைகள் மேல் உள்ள பாசம் போகும். ஆசிரியருக்கு, மாணவன் மேல் உள்ள அபிமானம் போகும். நோயாளி என்ன ஆனால் என்ன, எனக்கு வர வேண்டிய வருமானம் வந்தால் போதும் என்று மருத்துவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள், தொழிலாளியை நசுக்கி இலாபம் சம்பாதிக்கலாம் என்று முதலாளிகள் நினைக்கிறார்கள்.

இந்தப் பட்டியல் மிக நீளமானது.

ஒரு சமுதாயமே சிதைந்து போகும். யாருக்கும் யார்  மேலும் ஒரு நன்றி இருக்காது.  நன்றி அறிதல் இல்லை என்றால், செய்த உதவிக்கு கை மாறு செய்ய வேண்டும் என்று தோன்றாது.

ஒரு காட்டுமிராண்டி கூட்டம் உருவாகும்.

ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு இது இன்னும் மோசமாக  பரவும்.

உணவு தரும் விவசாயி, ஆடை தரும் நெசவாளி, ஆசிரியர், மருத்துவர், பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர், உறவினர், என்று எல்லோரிடமும் நன்றி பாராட்டி வாழ்ந்தால் வீடும், நாடும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று  நினைத்துப் பாருங்கள்.

எனவேதான், நன்றி மறப்பதை பெரிய பாவமாக சொல்கிறார் வள்ளுவர்.

யாரெல்லாம் நமக்கு நன்மை செய்தார்கள் என்று நினைத்துப் பார்ப்போம். அந்த நன்மைகளை மறக்காமல் இருப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_25.html

Thursday, May 17, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன் 


முன்னுரையாக கீழே உள்ள பதிவைப் படித்து விடுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

நீங்கள் ஆண் என்றால், உங்களுக்குள் இருக்கும்  பெண்ணையும்,
நீங்கள் பெண் என்றால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும்

அடையாளம் கண்டு சேர்வதே உண்மையான இறை தரிசனம் ஆகும்.

மேல் சொன்னப் பாடலில் , ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக வருவதைக் கூறினார்.

இங்கே, சேவலும் , பெண் கோழியும் கூடி குளிர்ந்து வருவதைக் கண்டதாகவும், அதுவே இறை தரிசனம் என்றும் கூறுகிறார்


பாடல்

போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!


உரை
 

போழ் இளங்கண்ணியினானைப் = இளமையான பிறைச் சந்திரனை தலையில் அணிந்தவனை

 பூந்துகிலாளொடும் = பூக்கள் போன்ற மென்மையான ஆடை அணிந்த உமா தேவியோடும்


 பாடி = பாடி

“வாழியம், போற்றி! என்று ஏத்தி, = வாழ்க, சிறக்க என்று உயர்த்திப் பாடி

வட்டம் இட்டு ஆடா வருவேன் = சுற்றி சுற்றி ஆடி வருவேன்


ஆழிவலவன் = திருமால்

நின்று = நின்று

ஏத்தும் = போற்றும்

ஐயாறு அடைகின்றபோது, = திருவையாறு அடைகின்ற போது

கோழி =  சேவல்

பெடையொடும் = பெண் கோழியோடு

கூடிக்  = கூடி

குளிர்ந்து = உள்ளமும் உடலும் குளிர்ந்து

 வருவன கண்டேன் = வருவதைப் பார்த்தேன்

கண்டேன் = கண்டேன்

அவர் திருப்பாதம் = அந்தக் காட்சியில் நான் இறைவனின் பாதங்களைக் கண்டேன்

கண்டு = கண்ட போது

அறியாதன கண்டேன்! = இதுவரை காணாத காட்சியினை கண்டேன்

கூடிய பின் , குளிர்தல்.

அந்தக் குளிர்ச்சியில் இறைவனை காணலாம்.

நாவுக்கரசர் சொல்கிறார்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_17.html

Wednesday, May 16, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்


ஒவ்வொரு குழந்தையும் தாய் மற்றும் தந்தையின் கலப்பில் உருவாவதுதான். அப்படி பிறக்கும் குழந்தைகள் தாய் மற்றும் தந்தையின் குணங்களை கொண்டுதான் பிறக்கின்றன.

அதாவது, அது ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி அதனிடம் ஆண் மற்றும் பெண் குணம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

ஆண்  குழந்தை என்றால் அதனிடம் ஆண் குணம் மட்டுமே இருக்கும் என்றில்லை. பெண் குழந்தைக்கும் அதே விதிதான்.

வளரும் போது என்ன ஆகிறது என்றால், இந்த சமுதாயம் ஆண் குழந்தையிடம் சில குணங்களையும், பெண் குழந்தையிடம் வேறு சில குணங்களையும் வளர விடாமல் தடுக்கிறது.

ஆண் பிள்ளை என்றால் அழக் கூடாது. பொம்மை வைத்து விளையாடக் கூடாது. வீட்டுக்குளேயே இருக்கக் கூடாது என்றும்

பெண் குழந்தை என்றால் அழலாம், மென்மையாக இருக்க  வேண்டும், அதிராமல் நடக்க வேண்டும், விளக்கு வைத்தால் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்றும் சில விதிகளை வரையறுக்கிறது.

எனவே ஆண் சில குணங்களை வலுக் கட்டாயமாக அழுத்தி வைக்கிறான் . (Suppress). பெண்ணும் அப்படித்தான்.

இப்படி சில குணங்கள் அழுத்தி மழுங்கடிக்கப் பட்டதால் ஒவ்வொருவரும் குறை மனிதர்களாவே இருக்கிறோம்.

இந்தக் குறையை நிரப்ப ஒரு ஆண் , வேறொரு பெண்ணையும், ஒரு பெண் வேறொரு ஆணையும் தேடுகிறார்கள். கிடைத்தால் நல்லது. பெரும்பாலான சமயம் கிடைப்பதில்லை. குறை நீடிக்கிறது.

ஒவ்வொரு ஆணுக்குளும் ஒரு பெண் உறங்கிக் கிடக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உறங்கிக் கிடக்கிறான்.

நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுக்குள் இருக்கும் பெண்ணை இனம் கண்டு ஒன்றாக இணைவதுதான் உச்ச கட்ட இன்பம் (orgasm). உங்களுக்குள் இருக்கும் பெண்ணை வெளியில் தேடாதீர்கள். உள்ளே தேடுங்கள்.

பெண்ணுக்கும் அப்படியே.

உண்மையான திருமணம் என்பது உங்களுக்குள் இருக்கும் ஆணுடனோ பெண்ணுடனோ நடப்பதுதான்.

அப்படி சக்தியும் சிவனும் ஒன்று சேரும் போது, அதி உயர் இன்பம் பிறக்கும். அதுவே இறை தரிசனம். நீங்கள் முழு மனிதராய் மாறுவது அப்போதுதான்.

மனிதன் இறைவனாய் மாறுவதும் அப்போதுதான்.

சரி, இதற்கும் தேவாரத்துக்கும் என்ன சம்பந்தம் ?

திரு நாவுக்கரசர் சொல்கிறார்


"காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்"

 காதல் கொண்ட பெண் யானையும், ஆண் யானையும் ஒன்றாக வருவதைக் கண்டேன். அதைக் கண்டவுடன் இறைவனின் திருவடியை கண்டேன். இது வரை கண்டு அறியாத ஒன்றைக் கண்டு கொண்டேன்  என்று.

ஆண் யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவது என்னே பெரிய விஷயமா. யானைகள் ஒன்றாக வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

ஆணும் பெண்ணும் இணைவது, ஒரு சக்தியாக மாறுவது இறைக் காட்சி என்கிறார்.

சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழி வகுக்கும்.  சிற்றின்பத்தை அறியாமல், அதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை அறியாமல், அதைக் கடக்காமல் பேரின்பத்தை அடையவே முடியாது.

என்பது வயதில் நாவுக்கரசர் சொல்கிறார். அனுபவ அறிவு.

பாடல்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

Wednesday, May 9, 2018

பட்டினத்தார் பாடல் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல் -  காதற்ற ஊசியும் வாராது காண் 


வாது  உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போது உற்ற போதும்  புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.

இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லை. அவ்வளவு எளிய பாடல்.

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே

நாம் இறந்த பிறகு, ஒரு உடைந்த ஊசி கூட நம்மோடு வராது. பெரிய தத்துவம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இந்த ஒரு வரியை படித்தவுடன், இருந்த சொத்தை எல்லாம் ஊராருக்கு அள்ளி கொடுத்துவிட்டு , பட்டினத்தார் ஒரு கோவணத் துணியுடன் வீதியில் இறங்கி விட்டார்.

அறிவின் உச்சம்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம் ?

"ஹா...இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா " என்று தோளை குலுக்கி விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

இருக்கிற செல்வத்தை எல்லாம் ஊருக்கு கொடுத்துவிட்டு வீதியில் நம்மால் நடக்க முடியுமா ? நடக்கிற காரியமா ?

பட்டினத்தார் நடந்தார்.

படித்தால், அது பாதிக்க வேண்டும். நம் வாழ்க்கை மாற வேண்டும்.  இல்லை என்றால்  படித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு பயனும் இருக்காது.

வேதம், உபநிஷதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், என்று ஒன்றும் படிக்கவில்லை.

ஒரே ஒரு வரி.

கிளம்பி விட்டார்.

அறிவுள்ளவுனுக்கு ஒரு வரி போதும்.

அறிவில்லாதவன் எத்தனை ஆயிரம் வரிகள் படித்தாலும்,  இன்னும் என்ன இருக்கிறது  என்று அலைவானே தவிர, படித்தது எதையும் வாழ்வில் நடை முறை படுத்த மாட்டான்.

கழுதை தின்ற கீதை புத்தகம் மாதிரி.  கழுதையின் வயிற்றுக்குள் போனது கீதை. சிலரின் மண்டைக்குள் போகிறது. பாதிப்பு ஒன்றும் இல்லை.

எதற்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ?

ஒரு வரி போதாதா ?

ஒண்ணும் கூட வராது என்றால், அதை ஏன் நாம் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று  கிளம்பி விட்டார்.

அவருக்கு மனைவி இருந்தாள் . அழகான பிள்ளை இருந்தான். அரசனுக்கு கடன் தரும் அளவு செல்வம் இருந்தது.

அத்தனையையும் அந்த ஒரு ஒரு வரி மாற்றிப் போட்டு விட்டது.

நாம் இந்தப் பாடலைப் படித்தால், "ஆஹா என்ன அழகான பாடல் " என்று இரசிப்போம் .

ஆனால், பட்டினத்தாரோ, என்னோடு வராத செல்வத்தை நான் ஏன் வாழ் நாள் எல்லாம்  தேடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன  செய்ய ? கொண்டு போக முடியாது. அனுபவிக்கவும் முடியாது. பின் எதற்கு என்று நினைத்தார்.

வீதியில் இறங்கி விட்டார்.

ஒரு வரி போதும், ஞானம் பெற.

எது உங்கள் வரி ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_9.html

Thursday, May 3, 2018

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?


வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. குளிர்ந்த காற்று அடிக்கிறது. மண் வாசம் எங்கிருந்தோ வருகிறது. மழை வரும் என்று நாம் யூகிக்கிறோம்.

தூரத்தில் , மலை மேல் புகை எழுகிறது. ஏதோ தீ பிடித்திருக்கிறது என்று நம்மால் அறிந்து  கொள்ள முடிகிறது. நேரில் பார்க்கவில்லை, இருந்தும் தீ இருக்கும் என்று அறிவு சொல்கிறது.

ஒருவன் கொலை செய்து விட்டான் என்று நீதி மன்றத்தில் அவனை நிறுத்தி இருக்கிறார்கள். கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சி இல்லை. ஆனால், கொலை செய்யப் பட்டவனுக்கும், இவனுக்கும் முன் விரோதம் இருந்து இருக்கிறது, இவன் கத்தி வாங்கி இருக்கிறான், கொலை செய்யப் பட்டவனின் வீட்டுக்குள் இவன் போனதை பார்த்த சாட்சி இருக்கிறது. பின் அவள் வெளியே வந்ததைப் பார்த்த சாட்சி இருக்கிறது. கொலை செய்யப் பட்டவனின் உடம்பில் உள்ள கத்தியில் இவன் கை  ரேகை இருக்கிறது. இவன் தான் கொலையாளி என்று நினைக்க இவ்வளவு ஆதாரங்கள் போதும். இருந்தும், கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.

அது  போல, கடவுளை நேரில் பார்த்த சாட்சி இல்லை. யாரும் பார்த்து விட்டு வந்து சொல்லவில்லை. படம், வீடியோ எதுவும் இல்லை. அவரும் நேரில் வந்து நம்மிடம் சொல்ல வில்லை.

இருந்தும்,

"எவ்வளவோ குறிகள் இருக்கின்றன, அடையாளங்கள் இருக்கின்றன, கோவில்கள் இருக்கின்றன,  வேதாகம நெறிகள் இருக்கின்றன, அவற்றில் சொல்லப் பட்ட நேர்மையான கருத்துக்கள் இருக்கின்றன, இவ்வளவு ஆயிரம் இருந்தும், சொன்னாலும், அறிவில்லாமல் , இவை அனைத்தும் உங்கள் மனதில் ஏறாமல் இருப்பது எவ்வாறு"

என்று திருநாவுக்கரசர் கேட்கிறார்.

பாடல்


குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.



பொருள்


குறிகளும் = சமயக் குறிகளும்

அடையாளமும் = அடையாளங்களும்

கோயிலும் = கோயிலும்

நெறிகளும் = வழி முறைகளும்

அவர் = இறைவன்

நின்றதோர் நேர்மையும் = இருப்பதற்கான நேர்மையான சாட்சியங்களும்

அறிய = அறிந்து கொள்ள

ஆயிரம் = ஆயிரக் கணக்கில்

ஆரணம் ஓதிலும் = வேதாகமங்கள் சொன்னாலும்

பொறியீ லீர் = பொறி என்றால் கருவி. இங்கே அறிவைக் குறிக்கும்.

மனம் = உங்கள் மனதில்

என் = ஏன்

கொல் = அசைச் சொல்

புகாததே = ஏன் அவை ஏறவில்லை , புகவில்லை

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இதில் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை என்று கேட்கிறார்.

இத்தனையும் பொய்யாகவா இருக்கும் ?

சிந்திக்க வேண்டிய கேள்வி.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_3.html

Tuesday, May 1, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம் 


நம்மால் எவ்வளவோ செய்ய முடியும். சாதிக்க முடியும். இருந்தும் ஒன்றும் செய்யாமல் , ஒரு சராசரி மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏன்?

செய்யும் ஆர்வம் இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. உடலில் வலு இருக்கிறது. நன்றாக வேலை செய்யும் மூளை இருக்கிறது. இருந்தும், ஒன்றும் செய்வதில்லை.

படித்தோம், வேலைக்குப் போனோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவற்றைப் படிக்க வைத்தோம், அவர்கர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ...இவை எல்லாம் செய்து விட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் வயதாகி விடுகிறது.

"இனி போட்டு என்னத்தச் செய்ய ..." என்று சோர்ந்து போய் விடுகிறோம்

நம்மை பெரிய காரியங்களைச் செய்ய விடமால் தடுப்பது எது?

நம் புலன்கள் தான். அவை தூண்டி விடும் ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்டு, அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் ஒன்றும் செய்யாமல் வாழ் நாள் எல்லாம் வீணடிக்கிறோம்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்கிறார் ....

"செயற்கரிய செய்ய முடிந்த நம்மை , செய்ய விடாமல் மயக்கியவர் ஐந்து பேர் (புலன்கள்) . அவர்கள் மயக்கத்தில் மயங்கி, சிற்றின்பங்கள் பின் போய் அலைகிறாய் நெஞ்சே. அதை விட்டு விட்டு, சிவந்த கண்களை உடைய திருமால் இருக்கும் திரு விண்ணகரம் என்ற தலத்தை நாடு"

என்கிறார்.


பாடல்

செயற்கரியசெய்வோமைச்செய்யாமனெஞ்சே
மயக்குவாரைவர்வலியா - னயக்கலவி
சிந்திபுரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மா
னந்திபுரவிண்ணகரநாடு.

சீர் பிரித்த பின்

செயற்கு அரிய செய்வோமை செய்யாமல் என் நெஞ்சே 
மயக்குவார் ஐவர் வலியால் இனிய கலவி 
சிந்தி புரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மால் 
நந்தி புர விண்ணகரநாடு.

பொருள்

செயற்கு = செய்வதற்கு

அரிய = கடினமான

செய்வோமை = செய்யத் தகுந்த நம்மை

செய்யாமல் = செய்ய விடாமல்

என் நெஞ்சே = என் மனமே

மயக்குவார் ஐவர் = மயக்குவது இந்த ஐந்து புலன்கள்

வலியால் = வலிமையால்

இனிய = இன்பமான

கலவி = கலந்து அனுபவிப்பது

சிந்தி = சிந்திப்பாய்

புர = ஆட்சி செய்

விண்ணகரமென்பர் = விண்ணுலகை என்பார்

திருச்செங்கண்மால் = சிவந்த கண்களை உடைய திருமால் உறையும்

நந்தி புர விண்ணகரநாடு. = நந்திபுர விண்ணகரத்தை நாடு

இந்த புலன்கள் நம்மை ஆசை காட்டும். அதில் இன்பம், இதில் இன்பம். அதைச் செய்தால் , அந்த சொர்கமே தெரியும் என்றெல்லாம் நம்மை அலைக்கழிக்கும்.

அவற்றில் இருந்து மனதை திருப்பி நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்றால், நந்திபுர விண்ணகரத்தை நாடு என்கிறார்.

இந்த ஊரில் அப்படி என்ன சிறப்பு ?

பேயாழ்வார் சொல்கிறார்.

பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் போன்ற இடங்களில் இருந்த பின், இந்த விண்ணகரம் என்ற திருத்தலத்தில் வந்து இருந்தாராம்.

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.

                      (2342) மூன்றாந் திருவந்தாதி - 61

ஒப்பிலியப்பன். உப்பு இல்லாத அப்பன். மனைவி உப்பு இல்லாமல் சமைத்தால் கூட  அதை அன்போடு உண்ண வேண்டும் என்று குடும்ப பாடம் நடத்திய இடம்.

நம்மாழ்வாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி தந்தாராம் இந்தத் திருத்தலத்தில்

என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

        -திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்


இந்தத் திருத் தலத்துக்கு என்று தனி சுப்ரபாதமே உண்டு.

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாதுறை பக்கம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post.html