விண் சொர்கமே பொய் ...பொய்
ஆண் பெண் ஈர்ப்பு என்பது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. எத்தனை காலம் ஆனாலும், அது மாறுவது இல்லை.
அந்த உறவு, அதில் உள்ள சிக்கல்கள், சுவைகள், எல்லாம் அப்படியே காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
வார்த்தைகள் மாறலாம். உணர்சிகள் மாறுவதில்லை.
சிலப்பதிகாரம்.
மாதவியிடம் எல்லா பொருளையும் இழந்து வந்து நிற்கிறான் கோவலன். கால் சிலம்பை கொடுக்கிறாள் கண்ணகி. இருவரும் மதுரை நோக்கிப் போகிறார்கள்.
இளங்கோ அடிகள் கூறுகிறார்
"வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்"
கண்ணகியின், பாதத்தை இந்த நிலமகள் அறிய மாட்டாள்.
ஒன்று, கண்ணகி இது வரை வெளியே சென்றதே இல்லை. எல்லாவற்றிற்கும் வேலை ஆள் உண்டு. எனவே, அவள் பாதங்களை மண் மகள் பார்த்ததே இல்லை.
இரண்டாவது, எவ்வளவு மென்மையான பாதங்கள். அதை அறியாமல், இந்த மண் மகள் அவள் பாதங்களை நோகச் செய்து விட்டாள்.
மூன்றாவது, இது போன்ற ஒரு மென்மையான பாதங்களை மண் மகள் இதுவரை அறிந்தது இல்லை.
அது சிலப்பதிகாரம்.
இன்று, "நீங்கள் கேட்டவை" என்ற பாடலில், புலமை பித்தனின் வரிகள்.
"மென் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு"
காதலியின் பாதங்களைப் பார்க்கிறான். அவள் நடந்து, நடந்து, அவள் பாதங்கள் சிவந்து போய் இருக்கின்றன. மென்மையான பாதங்கள். சிவந்து போய் இருக்கிறது.
அப்படியே மேலே பார்க்கிறான். வானில் மேகங்கள். மாலை நேர சூரிய ஒளியில் சிவந்து காணப்படுகிறது.
அந்த சிவந்த மென்மையான மேகங்கள் போல் அவள் பாதங்கள் இருப்பதாய் அவனுக்கு தோன்றுகிறது.
அவள் அருகே சென்று, அவளை அப்படியே அணைத்துக் கொள்கிறான்.
அவளின் மென்மையான தேகம், அந்த உடல் சூடு, அந்த மணம் எல்லாம் அவனை எங்கோ கொண்டு செல்கிறது.
அப்படியே சொர்கத்தில் இருப்பது போல இருக்கிறது.
அப்படி புலமை பித்தன் சொல்லவில்லை, திருவள்ளுவர் சொல்கிறார்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
தன்னுடைய காதலியின் (காதலனின்) தோள்களில் கண்மூடிக் கிடந்தால், அது தாமரை போன்ற கண்களை உடைய அந்த திருமால் வாசம் செய்யும் வைகுந்தத்தை விட இனிமையானதா? என்று கேட்கிறார். இல்லை, என்பது உட்பொருள்.
இன்று புலமை பித்தன்,
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
பாடல்: புலமைப் பித்தன்
பாடியவர்கள்: SPB, S ஜானகி
படம்: நீங்கள் கேட்டவை
இசை: இளையராஜா
(மனிதர்களுக்கு இன்பத்தை அள்ளித் தர வந்த தேவர்கள். இவர்கள் எல்லாம் இல்லை என்றால் வாழ்க்கை எவ்வளவு வெறுமையாகி இருக்கும்...)
பெ: ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...
'மென் பஞ்சு மேகங்கள்'
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு"
'விண் சொர்க்கமே பொய்'
ஆண்: மென் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில் தானோ ?
பெ: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம் என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
பெ: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா ஓ...
பெ: ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம்
அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்
ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
பெ: என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
ஆண்: என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
பெ: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
இருவரும்: ஓ ...