Saturday, July 5, 2025

திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?

திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?



அவளோ பேரழகி. அவனுக்கோ வெளியில் ஆயிரம் வேலை. அவளை எப்படி தனியே விட்டு விட்டுச் செல்வது என்று ஒரே குழப்பம். மேலும், அவள் தன்னுடனேயே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கிறான். 


அவ்வப்போது அவளை, அவள் புன்னகையை பார்த்துக் கொள்ளலாம். 


அது எப்படி முடியும்?


யோசித்தான், எதுக்கு அவளை தனியே கூட்டிச் செல்ல வேண்டும்? தன் உடலிலேயே ஒரு பாதியை கொடுத்து, அதில் அவளை வைத்து விட்டால் என்ன என்று யோசித்து அப்படியே செய்தான் என்கிறார் திரு ஞான சம்பந்தர். 


பாடல்  


காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்

தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்

ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே

வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே


கொஞ்சம் சீர் பிரிப்போம்  



கார் உலாவும் கடல் சிப்பியின் கண் முத்து கரை பெய்யும் 

தேர் உலாவும் நெடு வீதியதார்  தெளிச் சேரியீர்

ஏர் உலாவும் பலிக்கு ஏகிட வைப்பு இடம் இன்றியே 

வார் உலாவும் முலையாளை ஓர் பாகத்து வைத்ததே


பொருள் 


கார் = கருமையான (மேகங்கள்) 


உலாவும் = உலவும், திரியும் 


கடல் = கடலில் உள்ள 


சிப்பியின் கண் = சிப்பியில் உள்ள  


முத்து = முத்துக்கள்


கரை பெய்யும் = கடற்கரையில் மழை போல் தெறித்து விழும் 

  

தேர் உலாவும் = தேர்கள் ஓடிக் கொண்டிருக்கும் 


நெடு = நீண்ட 


வீதியதார் = வீதிகளை உடைய 


தெளிச் சேரியீர் = திருத் தெளிசேரி என்ற தலத்தில் இருப்பவரே 


ஏர் = எழுச்சி, அழகு, பெருமை 


உலாவும் = நிறைந்த 


பலிக்கு ஏகிட = பிச்சை வாங்கிடப் போகும் போது 


வைப்பு இடம் இன்றியே  = வைக்க இடம் இன்றி 


வார் = மார்புக் கச்சை 


உலாவும் = அணிந்த 


முலையாளை = மார்பகங்களை உடைய உமை அம்மையை 


 ஓர் பாகத்து வைத்ததே = உன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ 


மனைவியை யாராவது தூக்கிக் கொண்டு போய் விட்டால் என்ன ஆவது என்று பயந்து மனைவியை தன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ என்று நகைச்சுவையாக கேட்கிறார் திரு ஞான சம்பந்தர். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சிவன் ஏன் பிச்சை எடுக்கப் போகிறார்?


ஒரு முறை பிரமனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அந்தத் தோஷம், அந்த மண்டையோடு அவர் கையிலியே ஒட்டிக் கொண்டது. அது அவர் கையை விட்டுப் போக வேண்டுமானால், அந்த மண்டை ஓட்டிலே பிச்சை எடுத்து உண்ண வேண்டும். அப்படி செய்து வந்தால், அந்த மண்டை ஓடு அவர் கையை விட்டுப் போகும். 


இது என்ன அபத்தமான கதையாக இருக்கிறதே என்று தோன்றலாம். கதை அபத்தம் தான். அதன் பொருள் என்ன?


ஒரு வினை செய்தால், அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். அது சிவனாகவே இருந்தாலும், செய்த வினை போகாது. 


பலர் நினைக்கிறார்கள், ஏதாவது பாவம் செய்தால், அதற்கு பதிலாக ஒரு நல்லது செய்தால் பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று. 


முடியாது. 


பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். பின் நல்லது செய்தால், அதன் பலனையும் அனுபவிக்க வேண்டும். 


"அறம் பாவம் எனும் அருங் கையிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். 


இரண்டுமே நம்மை பிறவி என்ற பந்தத்தில் கட்டிப் போடும். இரண்டுமே செய்யக் கூடாது. 


ஒன்றுக்கு ஒன்று சரியாகி விடாது. இரண்டும் தனித் தனி கணக்கு. 


கோவிலுக்குப் போவது, உண்டியலில் காணிக்கை போடுவது, மொட்டை போட்டுக் கொள்வது, விரதம் இருப்பது, அன்ன தானம் செய்வது போன்ற காரியங்களால் செய்த தீவினைகளில் இருந்து தப்பி விடலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் எவ்வளவு தீமை வேண்டுமானாலும் செய்யலாம். பின் நிறைய தான தர்மங்கள் செய்து தப்பித்துக் கொள்ளலாம். 


முடியாது. 


சிவனே ஆனாலும், செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். 


சிவனுக்கே அந்தக் கதி என்றால், நம் கதி என்ன?


தீவினை செய்யாமல் இருக்க வேண்டும். 


மனதால், வாக்கால், செயலால் தீவினை செய்யக் கூடாது. 


என்ன ஒரு அருமையான பாடல் 


மேகங்கள் உலவுகின்றதாம்..ஏதோ வாக்கிங் போவது மாதிரி. 


தேர்கள் ஓடவில்லை, உலவுகின்றன. சும்மா ஜாலியா அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கின்றன. 


சிவன் பிச்சை எடுக்கப் போவது கூட ஏதோ பெருமையாக, அழகாகப் போனாராம். 


அம்மை சேலை அணிந்து இருக்கிறாள். காற்றில் அது அங்கும் இங்கும் அலைகிறது. அவள் மார்பின் மேல் அந்த சேலை உலாவுகிரதாம்.


இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை.







No comments:

Post a Comment