Thursday, July 10, 2025

திருக்குறள் - நிச்சயமான கேடு

 திருக்குறள் - நிச்சயமான கேடு 


சிலர், அவர்களின் கெட்ட குணங்களை, ஏதோ பெரிய சாதனை, பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள். 


உதாரணமாக, "எனக்கு பழியா கோபம் வரும், முணுக்கென்றால் எனக்கு மூக்கு மேலே கோபம் வரும். கோபம் வந்தால் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது.."என்றெல்லாம் பெருமையாக பேசிக் கொள்வார்கள். 


சில தொழில் அதிபர்கள், நிறுவன மேலாளர்கள் தங்கள் கோபத்தால் அங்கே வேலை செய்யும் ஆட்களை மிரட்டி வேலை வாங்குவார்கள். வேலை நடக்கும். எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை பெரிய திறமை என்று நினைத்துக் கொள்வார்கள். 


வீட்டில் கூட சில பெண்மணிகள், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களை அதட்டி, உருட்டி, எதற்கு எடுத்தாலும் கோபித்து, திட்டி, வேலை வாங்குவார்கள். "ஏதோ நான் இருக்கிறேனோ, வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதோ....நான் இல்லேனா தெரியும்" என்று அவர்களின் நிர்வாகத் திறமை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், 


"சினத்தை ஏதோ பெரிய திறமை, சிறப்பு என்று நினைத்து செயல்படுபவன், அந்தச் சிறப்பு வெகு நிச்சயமாக இழப்பான் என்பது உறுதி"


என்கிறார். 


பாடல் 


சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று


பொருள் 


சினத்தைப் = கோபத்தை 


பொருள்என்று = சிறந்த ஒரு குணம் என்று 


கொண்டவன் = அதைக் கைக் கொண்டவனின்  


கேடு = அந்த சிறந்த குணம் அழிவது என்பது 



நிலத்து = தரையை 


அறைந்தான் = அறைந்தவன் 


கை = கை 


பிழையாது அற்று = எப்படி பிழை இல்லாமல் அடிக்குமோ அந்த அளவு உறுதியானது. 


கோபம் கொண்டவன் தன் சிறப்பை இழப்பான் என்று சொல்ல வேண்டும். 


உண்மையாவா, நிச்சயமாகவா? எல்லா காலத்திலும் அது நடக்குமா என்று கேட்டால், ஆம் அது சர்வ நிச்சயம் என்று சொல்ல வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார் வள்ளுவர். 


ஒருவன் தரையை ஓங்கி அடித்தால், அவன் குறி தப்புமா? எப்படி அடித்தாலும் கடைசியில் அந்த அடி தரையில் எங்கோ ஒரு இடத்தில் விழத்தானே செய்யும். 


தரையை, கையால் அடித்தேன், கொஞ்சம் குறி தப்பி விட்டது என்று சொல்லவே முடியாது. குறி தப்பி எங்கு போகும்? எங்கு போனாலும், அந்த அடி த தரை மேல் தான் விழும். அந்த அளவு அது நிச்சயம். தப்பவே தப்பாது. 


இன்னொரு பொருள், இது பரிமேலழகர் சொல்லாதது. 


கோபம் கொண்டு மற்றவர்கள் மேல் சுடு சொற்களையோ அல்லது செயலையோ காட்டி விட்டால், அது அவர்களை பாதிக்கும், என்று கோபம் கொண்டவர் நினைக்கலாம். 


அது தவறு என்கிறார் வள்ளுவர். 


தரையை ஓங்கி அடித்தால் தரைக்கு வலிக்கலாம் அல்லது வலிக்காமல் போகலாம். ஆனால் அடித்தவன் கட்டாயம் வலிக்கும் அல்லவா?  


அது போல 


மற்றவர் மேல் கோபத்தை செலுத்தினால் அது உன்னையும் பாதிக்கும் என்கிறார். 


கோபம் ஏற ஏற இரத்தக் கொதிப்பு ஏறும், மன அழுத்தம் வரும், எரிச்சல் வந்து மகிழ்ச்சியை குறைக்கும், உறவும், நட்பும் சுருங்கும். "அவன் கிட்ட யார் பேசுவா, சரியான கோவக் காரன் . எதுக்கு எடுத்தாலும் வள்ளு வள்ளுன்னு நாய் மாதிரி குரைப்பான்" என்று மற்றவர்கள் அவனை விட்டு விலகிப் போவார்கள். தனித்து விடப்படுவான். அவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் அவனை விட்டுப் போய் விடுவார்கள். நாளடைவில் அவனால் சிறப்பாக செயல்பட முடியாது. 


இப்படி, கோபம், அதைக் கொண்டவனையே அழிக்கும். தரையை அடித்தால் நம் கையே வலிப்பது போல.


ஒருவன் தரையை அடிக்கிறான் என்றால் அது பார்க்க எப்படி இருக்கும்? "சரியான பைத்தியகாரன் போல, தரையை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்" என்று நினைப்போம் அல்லவா. 


கோபம் கொண்டு, மற்றவர்கள் எரிந்து விழுந்தாலும் அப்படித்தான் இருக்கும். 




பொருள் 



No comments:

Post a Comment